Translate this blog to any language

திங்கள், 10 நவம்பர், 2008

தேசம் செழிப்பாயிற்று!


அது மிகவும் குறுகலான சந்து

முதல் நாள் !

இரண்டு ஆணவக் காரர்கள்
எதிர் பாராமல் சந்தித்துக் கொண்டனர்.
அங்கே
கடும் சண்டை உருவாயிற்று!
சாம்ராஜ்யங்கள் அழிந்தன!

இரண்டாம் நாள்!

ஒரு ஆணவக் காரனும், மற்றொரு நல்லவனும்
எதிர்பாராமல் மோதிக் கொண்டனர்!
அங்கே
வெறும் சலசலப்பு உண்டாயிற்று!
நாட்டில் நல்லதும் நடக்கவில்லை-
கெட்டதும் நடக்கவில்லை!


மூன்றாம் நாள்!

ஒரு நல்லவனும் இன்னொரு நல்லவனும்
எதிர்பாராமல் மோதிக் கொண்டனர்!
'குற்றம் தன்னுடையதே' என்று
இருவரும்
ஒருவரையொருவர் மன்னிப்புக் கேட்டு
மன்றாடினர்!
அங்கே
ஒரு உன்னத நட்பு உருவாயிற்று;
அவர்களது தேசம் செழிப்பாயிற்று!

-மோகன் பால்கி

நான் இயற்கையின் கூறு!



நான் என்னில் வேர் விட்டு
இறுக்கமாய் எனைப் பற்றி
என்னிலிருந்து
என் மேல் உயர்ந்தவன் !

எனது கிளைகளில்
பூத்துக் கனிபவன் !

என்னை
எந்த மனித சக்தியும்
திசை திருப்பி
வீழ்த்தி விட முடியாது!

சேற்றிலே பிறந்தாலும்
செந்தாமரை எப்படி
சேற்றில் ஒட்டாமல்
நீர் பரப்புக்கு மேலே உயர்ந்து
கம்பீரமாய் மலர்கிறதோ
அவ்வாறே
மனிதர்களுக்கு மத்தியில்
பிறந்தாலும்
நான்
மனிதனல்லன் !

நான்
பஞ்ச பூதங்களின் கலவை
இயற்கையின் அடையாளம்!

ஆதியந்தமற்ற

இப்பிரபஞ்சத்தின்
ஓர் உன்னதக் கூறு!

-மோகன் பால்கி