Translate this blog to any language

செவ்வாய், 14 அக்டோபர், 2008

உட் குழிந்த குறைகள் !


குறை காணும் கண்கள்.....

உனது பார்வையில் நானும்
எனது பார்வையில் நீயுமாய்...!

அட !
குறை என்பதுதான் என்ன?

எனது இயலாமையை

உனது 'இயலுமையால்'
நிரவும் முயற்சியின்
பதட்டம் தானே !

உண்மையில்
என் குறை என்பதும்
உன் குறை என்பதும்
பார்வை கோண மாறுபாட்டில்
ஒளிரும்
'ஒரு-பரிமாண'
உரு வெளி பிம்பமே!

மேலும்
நீ காணும் எனது
'உட் குழிந்த' குறைகள்
'வெளிக் குவிந்த' நிறைகளாக
வேறொரு கோணத்தில்
வேற்றாரால் உணரப்படும் !

உனதும் அவ்வாறே !

ஆம்!
அறிவு காணும் குறைகள் என்பன
"ஒரு-பரிமாண"
தோற்ற மாயையே !

அன்பில் உணரும்
உச்ச உண்மையே
"பல்-பரிமாண"
வாழ்வின் இரகசியம் !

-மோகன் பால்கி

Me - A fragment of Nature! நான் இயற்கையின் கூறு!


நான் என்னில் வேர் விட்டு
இறுக்கமாய் எனைப் பற்றி
என்னிலிருந்து
என் மேல் உயர்ந்தவன் !

எனது கிளைகளில்
பூத்துக் கனிபவன் !

என்னை
எந்த மனித சக்தியும்
திசை திருப்பி
வீழ்த்தி விட முடியாது!

சேற்றிலே பிறந்தாலும்
செந்தாமரை எப்படி
சேற்றில் ஒட்டாமல்
நீர் பரப்புக்கு மேலே உயர்ந்து
கம்பீரமாய் மலர்கிறதோ
அவ்வாறே
மனிதர்களுக்கு மத்தியில்
பிறந்தாலும்
நான்
மனிதனல்லன் !

நான்
பஞ்ச பூதங்களின் கலவை

இயற்கையின் அடையாளம்

ஆதியந்தமற்ற
இப்பிரபஞ்சத்தின்
ஓர் உன்னதக் கூறு!

-மோகன் பால்கி