Translate this blog to any language

திங்கள், 10 நவம்பர், 2008

நான் இயற்கையின் கூறு!



நான் என்னில் வேர் விட்டு
இறுக்கமாய் எனைப் பற்றி
என்னிலிருந்து
என் மேல் உயர்ந்தவன் !

எனது கிளைகளில்
பூத்துக் கனிபவன் !

என்னை
எந்த மனித சக்தியும்
திசை திருப்பி
வீழ்த்தி விட முடியாது!

சேற்றிலே பிறந்தாலும்
செந்தாமரை எப்படி
சேற்றில் ஒட்டாமல்
நீர் பரப்புக்கு மேலே உயர்ந்து
கம்பீரமாய் மலர்கிறதோ
அவ்வாறே
மனிதர்களுக்கு மத்தியில்
பிறந்தாலும்
நான்
மனிதனல்லன் !

நான்
பஞ்ச பூதங்களின் கலவை
இயற்கையின் அடையாளம்!

ஆதியந்தமற்ற

இப்பிரபஞ்சத்தின்
ஓர் உன்னதக் கூறு!

-மோகன் பால்கி

செவ்வாய், 4 நவம்பர், 2008

கூடார அடிமைகள்!



"பகுத்து அறியாத அறிவு" என்பது

இன்னும் பயன்படுத்தாத

ஒரு வெறும் கருவியே ஆகும்!

எந்த ஒரு மனிதனும் பொருள்களும்

ஆராய்ச்சிக்கு உட்பட்டைவையே!

வெற்று நம்பிக்கைகளும்

வெறும் மூடக் கொள்கைகளும்

எவரையும் முன்னேற்றுவது இல்லை!

தன்னலமும் அதீத எதிர்பார்ப்பும் கொண்ட

சராசரி மக்கள்தான்

ஒரு சாதாரண மனிதனை

கடவுள் தன்மை கொண்டதொரு

பெரும் மகானாக சித்தரிக்க

பகீரத பிரயத்தனம் செய்கிறார்கள் !

காரணம் யாதெனில் ,

அது மறைமுகமாக

தனக்கே நன்மை செய்து கொள்வதற்கான

ஒரு 'தலைகீழ் முயற்சியே' எனலாம் !

அதாவது,

'இன்ன சாமியாரின் சீடன் நான்'

என்று பறை சாற்றுவதன் மூலம்

எதுவும் செய்யாமலேயே

ஒரு அங்கீகாரத்தை பெற்று விடும் சுயநலம்

அங்கு மறைந்து கிடக்கிறது!

மேலும்,

கூட்டம் அல்லது கூடாரம் என்பது

நல்லதொரு பொழுது போக்கையும்

ஒரு வித

பாதுகாப்பு உணர்ச்சியையும் தருவதனால்

மனிதர்கள்

தன்விருப்பத்துடனேயே

இதுபோன்ற

"பொய்மை கூடாரங்களைத்"

தேடியலைந்து நிரந்தரமான

அடிமையாகி விடுகிறார்கள் !


உண்மையோவெனில்,

வெட்டவெளியில்

ஒரு

"உண்மை-தேடியின்" வரவுக்காய்

தன்னந்தனியே அது

பொறுமையாய்க்

காத்திருக்கிறது!

-மோகன் பால்கி