Translate this blog to any language

ஞாயிறு, 11 ஜனவரி, 2009

கலியுகத்தின் குற்றம்!


வசந்த காலத்தில் பூத்துக் குலுங்குகிற மரங்கள் யாவும்
இலையுதிர் காலத்தில் பட்டுப் போகின்றன!
அதற்காக தோட்டக்காரனை யாரும் குற்றம் சொல்லஇயலாது.
வேண்டுமானால் அது காலத்தின் குற்றம் என்றுசொல்லலாம் !

அதே போன்று,
தர்ம யுகத்தில் தேவைக்கு மேல்
செழிப்பும், செல்வமும் இருந்தது!
அதனால், பேராசைக்கும், பொறாமைக்கும்
அங்கு வேலையே இல்லாதிருந்தது!

இன்றோ கலியுகம்!
எல்லாமே வற்றிப் போய் இயற்கையாகவே
எங்கும் வறுமை படர்ந்து வருகிறது!
இங்கு மனிதர்களும் அதிகம்
செயற்கையான நவீன தேவைகளும் மிக மிக அதிகம்-
ஆனால் கையிருப்போ அதி சொற்பம்!
அதனால் தீமைகள் இங்கே தலை விரித்து ஆடுகின்றன!

இது மனிதர்களின் குற்றம் என்று எப்படி சொல்லமுடியும்?
இது கலியுகத்தின் குற்றம் என்றே சொல்ல வேண்டும்!

-மோகன் பால்கி
22nd Jan 2004


இறைவா நீயும் வெளியேறு!




நான் இருந்த "வீட்டில்" கூட்டம் கூட்டமாய்
இன்று
யார் யாரோ!

நானும்
பெயருக்கு ஏதோ
ஓரமாய்...!

எனது தந்தை
"இவ்வீட்டைத்" தருகையில்
இந்தக் கும்பல்கள்
அன்றைக்கில்லை!

இன்றோ..
அரசியல் அண்ணன்கள்
மதம் முதிர்ந்த கிழடுகள்
கிரிக்கெட் மைத்துனர்
என்று
ஒரு ஊரே கிடந்து
என் "அறைகளில்"
சப்தமிடும்!

அது போதாதென்று
மூலைக்கு மூலை அமர்ந்து


சினிமா சீரியல்
அடுத்த வீட்டு கதை என்று
சிரித்தும் அழுதும்
அமைதி கெடுக்கும்
அக்காள் தங்கைகள்!

அதோடு நிற்காமல்
இவர்களைப் பார்க்க
எவர் எவர்களோ வந்து
அவர்களும் "உள்-நின்று"
ஓயாமல்
சப்தமிடுகிறார்கள் !

இடையிடையே
என் தந்தையும்
வந்து தங்கி
சப்தமிட்டுச் செல்கிறார்!

எப்படியோ!
சதா சப்தமிடும்
ஒரு
இயந்திரமாகிப் போனது-
என் "வீடு"!

என் தந்தையோடு
நான் மட்டுமே இருந்த நாளில்
கொஞ்சம் அமைதியும்
ஏகாந்தமும்
இருந்ததாய்
ஒரு ஞாபகம் !

ஒரு நாள்!
நான்
பெரும் சங்கல்பம் செய்து கொண்டேன்;
அவரவர்களை
"அவரவர்களின்-சொந்த வீட்டிற்கு"
துரத்தியடிப்பது என்று!

ஒரு
சிம்ம கர்ஜனையில்
அவர்கள்
சிதறியோடினார்கள்!

அப்பா!
என்ன ஒரு ஆனந்தம்..
என்னவொரு ஏகாந்தம்!

இனி என் வீட்டில்
எனது "உள்-வீட்டில்"
அரசியல் மதம்
சினிமா கிரிக்கெட்
என்று
எதற்கும் இடம் இல்லை!
வெறேது பற்றியும்
உள்-வெளி
கூச்சல்கள் இல்லை!

இனி
எனது தலையும்
ஒரு
பஜனை மடம் அல்ல!
அது
சப்தமற்ற ஆகாயம்-
அலை நின்ற சமுத்திரம்!

ஆம்!
நான் இனி
என்னுடன் மட்டுமே
இருக்கப் போகிறேன்!

எனக்குள் இருந்து
என்னில் கரைந்து
அந்த ஏகாந்தத்தில் நான்
காணாமல் போவேன்!

எனவே - இறைவா !

என் - தந்தையே - நீயும்
வெளியேறு!

-மோகன் பால்கி
12th April 2004