Translate this blog to any language

வெள்ளி, 21 அக்டோபர், 2011

ஜனநாயகத் திருடர்கள்! Democratic Thieves!!

நாடு நாய்களிடம் போய்
நாட்கள் ஓடி விட்டன!

மக்கள் பிணி தீர்க்கும் 
மனமிலா தலைவர்கள் 
இந்தத் தேசம் முழுவதும் 
புற்று நோயாய் பரவிப் போயினர்!

முடிமன்னர் ஆட்சியை 
முடித்த மடமையில் 
கிடைத்த பரிசு 
இதோ!
ஊரை அடித்து உலையில் போடும் 
ஜனநாயகத் திருடர்கள்!

உழைக்கும் மக்களின் 
அடிப்படைத் தேவைகள் 
எதுபற்றிய அக்கறையுமின்றி 
நகர்கிறது காலம்!

அன்று

தாடி மீசை ஒட்டி 
அதிகாரிகள் அறியாவண்ணம் 
"நகர்வலம்" வந்து
குறைகள் களைந்து 
ராஜ பரிபாலனம் செய்த 
பழங்கால 'ஒரு-மன்னன்' 
எங்கே;

இன்று...

ஏற்றிய கண்ணாடியும் 
ஏசியின் சொகுசுமாய் 
முன்னும் பின்னும் 
வண்டிகள் மறைத்து 
பூனைகள் புடை சூழ 
வாரிச் சுருட்டும் 
"ஆயிரம்-மந்திரிகள்" 
பதவி சுகம் எங்கே..?

ஆனாலும்...
ஒன்றும் கிழித்தபாடில்லை!

மன்னர் ஆட்சிக்குப் பிறகு
இருந்தது-கெட்டதுதான் மிச்சம்!

வெள்ளைக்காரன் கூட 
இந்தக் கொள்ளைக்காரர்களை 
பின்னுக்குத் தள்ளி 
நல்லவனாகிப் போனான்!
நாளுக்கு நாள்
இந்த தேசத்தில் 
விஷமாய் உயரும் விலை வாசி..
சிதிலமடைந்த உட்கட்டச் சாலைகள்....

மூஞ்சியில் விழுந்து 
பாதை மறைக்கும் 
பறக்கும் குப்பைகள்...
பெருக்காத தெருக்களில் 
பெருகும் தூசு...
இரத்தம் உறிஞ்சும் கொசுக்கள்...
சாக்கடை கலந்த குடிநீர்..
தொப்புள் கொடி துவங்கி 
சுடுகாடு வரைக்கும் 
தொடரும் கையூட்டு...

ஸ்விஸ் வங்கியில் 
இலட்சம் கோடிகளில் பதுங்கிய 
ஏழைகளின் உழைப்பு...
விதவிதமான
கல்விச் சுரண்டல்..
இன்னும் ஒழியாத
சா'தீய' கலவரங்கள்... 
அன்றாடம் நிகழும் 
கொலை கொள்ளைகள்..
மகளிர்-குழந்தைகள் மீது
பாலியல் வன்முறை..

கறி-சோறு போட்டு 
குற்றவாளிகளை கொஞ்சும்
சிறைச் சாலைகள்.... 
கிரிமினல்களின் அரசியல் பிரவேசம்..
பொறுப்பிலா அதிகாரிகள்...
அரசுப் பணியாளர்கள்...
அடிப்படை வசதியற்ற 
இந்திய கிராமங்கள்...
பட்டினிச் சாவுகள்..

அதற்கும் மேலாய்...
விண்வெளிக்கு இராக்கெட் அனுப்பும் 
வல்லரசு இந்தியாவில்...

த்...த்...தூ...! 
நன்னீர் மற்றும் 
கழிப்பிடம் தேடியே 
தொலைகிறது வாழ்வு!

செவ்வாய், 4 அக்டோபர், 2011

Correct Your children But Cripple-Not ever! குழந்தைகளை கண்டிக்கலாம்; தண்டிக்காதீர்கள்!


சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், 'சர்க்கஸ்' தான் நினைவிற்கு வருகிறது. 
மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்க என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா? ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டால் 'படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்'?என்று கேள்வி வேறு கேட்பார்கள்.


குழந்தைகளை கையாள்வது எப்படி: பொதுவாக குழந்தைகள் எல்லாவற்றையும்பரிசோதித்துப் பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் எது சரி எது தவறு என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். சேட்டை என்றால் என்ன? நாம் சந்தோஷமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம். நாம் வேறு மனநிலையில் இருக்கும்போது குழந்தை சாதாரணமாக மண்ணைத் தொட்டால் கூட குழந்தையை அடித்து கண்டபடி திட்டுகிறோம். சேட்டை என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல. நம்மை மையப்படுத்தி இருக்கிறது. முதலில் அதை உணர்வோம். அடுத்து குழந்தை தன்னையோ, மற்றவர்களையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும். சேட்டை செய்தபிறகு அடிக்காமல் முன்பே விதிகளைச் சொல்லிவிட வேண்டும். விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாக கண்டிக்கலாம்.


அடிக்காமல் வளர்ப்பது எப்படி என்கிறீர்களா? குழந்தைகளை அடித்து சரிபடுத்த அவர்கள் மத்தளமல்ல. கண்டிப்பு என்பது, இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதைஉணர்த்துவது. சில குழந்தைகள் நான் உன்கூட பேசமாட்டேன் என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக் கொள்ளும். இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜி) உண்டு. முதலில் பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள வேண்டும். பொறுமை யின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக,நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன. அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

குழந்தை உரிமை மீறல்: மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமைஉண்டு. இன்றைய குழந்தை நாளைய மனிதனல்லவா? இப்படித்தான் நிறைய நபர்களுக்குச் சந்தேகம் உள்ளது. உதாரணமாக 8 மாதக் குழந்தையை அதன் தாய் இடுப்பில் வைத்து சோறு ஊட்டும்போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத் தாய் எப்படியாவது இன்னும் இரு கவளத்தை அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார். அப்போதுதான் அந்தத் தாய்க்கு மனநிறைவு, மகிழ்ச்சி. தன் குழந்தைக்கு வயிறு நிறைய சோறு ஊட்டி விட்டதாக திருப்தி.
ஆனால் அந்தக் குழந்தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாமல் தான் சாப்பிட்டதை சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்துவிடும் சூழலில், 'பார் பிடிவாதத்தை, அது அப்பனைப் போலவே இருக்கு' என்று தன் கணவனையும் சேர்த்துத் திட்டி தன் குழந்தைக்கும் இரண்டு அடி வைப்பார் தாய். இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது. ஒரு தாய் தன் அளவுக்கு மீறிய அன்பினால் செய்யக்கூடிய வன்முறையைக் காட்டுகிறது. வாந்தி எடுத்தால் தன் குழந்தை எங்கே இளைத்து விடப்போகிறதோ என்ற அதீத பயத்தினால், அக்கறையினால் அந்தக் குழந்தைக்கு இலவசமாக இரண்டு அடியும் கொடுக்கிறார். 

ஏற்கனவே வாந்தி பண்ணியதால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடு,சேர்ந்து அடியும் வாங்கியதால், அந்தக் குழந்தை மேலும் மேலும் வன்முறைக்குள்ளாகிறது. இந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை.'இதெல்லாம் வன்முறையா நாங்கள் என்ன நினைக்கின்றோம் என்றால், குழந்தையை ஒழுங்காகவும், நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்துவளர்க்கிறோம்' என்று நினைப்பார்கள். 

இதைப் பார்க்கும்போது, கலில் கிப்ரான் (Khalil gibran) என்ற கவிஞர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.
 "குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால்,உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர் பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை, அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளை திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். ஏனென்றால், ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை" 
என்றவரிகளுக் கேற்ப, குழந்தைகளை நாம் உருவாக்கின போதும், அவர்கள் நமது அடிமைகள் அல்ல. 
நம் குழந்தையே ஆனாலும், நாம் அவர்களை வன்முறைக் குள்ளாகக் கூடாது. அடிக்கிற கைதான் அணைக்கும் என்னும் பழமொழி எல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? 
பேசிப் புரியவைத்து அந்தக் குழந்தையை நல்ல குழந்தையாக வளர்க்கலாமே!

நட்பாகப் பழகுவதன் மூலம் நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொள்ளச் செய்தால்,வளர்ந்த பிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால், அவனும் அடிக்கிற கை அணைக்கும் என்று நம்மை அடிப்பான். நாம் என்ன சொல்லிக் கொடுக்கிறோமே அதைத்தானே குழந்தைகள் செய்வார்கள். ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்துத் தான் செய்ய வேண்டும். நிலத்தில் விதையை தூவி விட்டால் மட்டும் போதாது. தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லவா? குழந்தைகள் விதைகளைவிட முக்கியமானவர்கள். நல்ல பலன்தரும் விதைகளாக,விருட்சங்களாக, வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்க வேண்டும். பக்குவமாய் சொல்லிக்கொடுத்து பேசிப் பேசித்தான் வளர்க்க வேண்டும்.

உதாரணமாக ஒரு சிறுமியை அவள் தாய், "நீ எதற்குத்தான் லாயக்கு.. நீ பொறந்ததே வேஸ்ட்" என்று திட்டிக்கொண்டே இருந்தால், அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக்குள்ளேயே தங்கிவிடும். சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே அவளால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகிவிடக் கூடும். பிறகு, அந்தப் பெண்ணின் தாழ்வு மனப் பான்மையை சரிசெய்வதே பெரும் பாடாகி விடும். எனவே, மனதளவில்பாதிப்பிற்குள்ளாக்கும் இம்மாதிரியான சொற்களை பெற்றோர்கள் பேசுவது குற்றமாகவே கருத வேண்டும் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. 

இப்படிப் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள். 
கண்டிப்பது என்பது வேறு, தண்டிப்பது என்பது வேறு. 

கண்டிப்பது என்பது ஒரு செயலைச் செய்யும்போது நல்லது எது கெட்டது எது என்பதைப் புரிய வைப்பது. 
தண்டிப்பது என்பது, குழந்தைகளுக்கு முன்பே புரிய வைக்காமல், அவர்கள் புரியாமல் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை அடித்து துன்புறுத்தி வன்முறைக் குள்ளாக்குவது. 

ஒரு குழந்தை ஒரு செயலை ஆர்வமாகச் செய்கிறது என்றால், அது நல்ல விஷயமாக இருந்தால் அதனை ஊக்கப்படுத்தி அந்த செயலை சரியாகச் செய்ய வழிகாட்டவேண்டும். 

மாறாக அதன் தலையில் தட்டி அதிகப் பிரசங்கி என்று மூலையில் உட்கார வைத்து விடக்கூடாது. 
குழந்தைகள் தவறு செய்தால், அன்பான கண்டிப்புடன் எளிய முறையில் குழந்தைகளுக்கு புரிய வைப்பதுதான் நல்லது. தண்டிப்பது குழந்தையை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, பிற்காலத்தில் தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும். பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிப்பதால், அவர்கள் ஒருவித எதிர்மறையான எண்ணங்களை குடும்ப உறுப்பினர் மீது ஏற்படுத்திக்கொண்டு, மறைமுகமான தீய பழக்கங்களுக்கு ஆட்கொண்டு விடுவார்கள். அன்போடும் ஆதரவோடும் புரியவைத்தால், எதிர்காலத்தில் குழந்தைகள் நல்ல மனிதர்களாக வலம் வருவார்கள்.

-நன்றி: புதிய தென்றல்