Translate this blog to any language

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

Why excessive charges for sms in New Year/ Aug 15th ?எஸ்.எம்.எஸ் திருடர்களும் இளிச்சவாய் இந்தியர்களும்!


இன்று புத்தாண்டு துவங்கியது!

எப்போதும் போல இதுபோன்ற நாட்களில் மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்களோ இல்லையோ வியாபாரிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கட்டாயம் உண்டு! அதில் நியாயமும் உண்டு!

ஆனால், திட்டமிட்டு கொள்ளையடிக்கும் நவீன வியாபாரிகள் சிலரைப் பார்க்கும் போது புத்தாண்டு கொண்டாட்டமே கசப்பாய் போய்விடுகிறது! மேலும், அந்தக் கொள்ளையை தடுக்க வேண்டியவர்களே  கண்டுகொள்ளாமல் இருப்பது பற்றி நினைக்கும் போது ஆத்திரம் தான் வருகிறது!

Airtel, Aircel, Vodafone, Idea, Reliance போன்ற பல கைப்பேசி நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன! அவை ஒரு நல்ல நாள் வந்தால் போதும். மக்களை எப்படிக் கொள்ளை அடிப்பது என்று புதுசு புதுசாய் திட்டம் தீட்டி நாக்கைத் தொங்க போட்டுகொண்டு காத்திருக்கின்றன!
New Year, Independance Day, Republic Day, Pongal, Dasara, Christmas, Valentines Day, Diwali என்று எந்த ஒரு நல்ல நாளும் இங்கே வந்துவிடக் கூடாது. உடனே SMS குறுந்தகவல் அனுப்ப ஒரு செய்திக்கு ஒரு ரூபாய் ஒன்னரை ரூபாய் என்று கொள்ளையடிக்க ஆரம்பித்து விடுகின்றன! 
இதில் எந்த கம்பனி யோக்கியம் அல்லது பரவாயில்லை என்று எனக்குத் தெரியாது! அதை ஆராய்ச்சி செய்வதும் என் வேலை அல்ல! ஆனால், நான் பயன்படுத்தும் Airtel / Idea இரண்டிலும் இன்று ஒரு செய்திக்கு ஒரு ரூபாய் என்று எடுத்துக் கொண்டனர். நூற்றுக் கணக்கில் எனக்கு பண நஷ்டம்! மனக் கஷ்டம்!!

(ஒரு கொசுறுச் செய்தி: Airtel Super singer- போன்ற நிகழ்ச்சிகளில் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" போன்ற போட்டிகளில் பங்கு பெற குறைந்தது ஆளுக்கு இரண்டு எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டி வரும். அப்படி பொருத்தி வைத்துக் கொள்வார்கள். பிறகென்ன? ஒவ்வொன்றும் ஐந்தைந்து, பத்து ரூபாய் செலவு நமக்கு! உலகம் முழுதும் இருந்து 10 கோடி தமிழர்களில் குறைந்தது ஒரு பத்து லட்சம் பேர் எஸ் எம் எஸ் அனுப்பினால் கூட ஒரு கோடி ரூபாய் அவர்களுக்கு வசூல் ஆகிவிடும்! நம் பையில் இருந்து எடுத்து நமக்கே பரிசாகத் திருப்பித் தந்து விடலாம்- பிறகு, விளம்பரம் மூலம் வரும் வருவாய் தொலைக் காட்சிகளுக்கு அப்படியே இலாபம்தான்! என்ன புரிகிறதா...சூட்சுமம்!)

என் கேள்வி நான்கு பிரிவினருக்கானது:
1. பயன்படுத்தும் ஏமாளி மக்கள். (Mobile users)
2. Trai என்னும் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
3. பாராளு மன்ற உறுப்பினர்கள். (Parlimentarians)
4. நீதி அரசர்கள் ( Judiciary)

கேள்விகள்:
1. குறும் தகவலுக்கு இது போல நினைத்தபடி ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய், சில போட்டிகளுக்கு ஐந்து ரூபாய் என்று மக்களிடம் தொலை தொடர்பு  நிறுவனங்கள் கொள்ளையடிப்பது இந்திய  சட்டப் படியும் தர்மப் படியும் நியாயம்தானா?

2.  தேசிய பற்று, மக்கள் ஒற்றுமை இவற்றை வளர்க்கும் ஒரு August 15th- Independance day, New Year போன்ற நல்ல விஷயங்களில் கூட எவனாவது பிசினஸ் பண்ணி ஒன்றுக்குப் பத்தாக பணம் கறக்க எண்ணுவானா? (அந்த நாட்களில் எங்க ஊர் ஏழை நாடார் கடைகளில் கூட காசு இல்லாமல் மனமுவந்து தேசியக் கொடியும், கற்கண்டும் தருகிறார்கள். சிறிய பெரிய கடைகளில் பத்து முதல் நாற்பது சதவிகிதம் தள்ளுபடி கூட தருகிறார்களே! அந்த பெருந்தன்மை இந்தப் பெரிய நிறுவனங்களிடம் துளியும் காணோமே!)

3.  இந்தியாவில் இன்று மொபைல் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 90 கோடி!! இன்றைக்கு ஒரு ஆளுக்கு பத்து SMS அனுப்பினால் கூட 900 கோடி ரூபாய் ஒரே ஒரு நாளில் இந்திய உழைக்கும் மக்களிடம் இருந்து சுருட்டப் படுகிறது - உரிய காரணம் ஏதும் இல்லாமல்!

4.  சாதாரண சமயங்களில் ஒரு SMS-க்கு இலவசம் மற்றும் ஐந்து காசு பத்து காசு வசூலிக்கும் நிறுவனங்கள் நல்ல நாட்களில் மட்டும் இது போல அவர்கள் இஷ்டத்துக்கு கொள்ளை அடிப்பதைப் பார்த்து மற்ற சேவை நிறுவனங்களுக்கும் அப்படி பேராசை வராதா? உதாரணமாக, ஓட்டலில் புத்தாண்டு தினம், அன்றைக்கு மட்டும் ஒரு இட்லி நூறு ரூபாய், காபி தேநீர் ஐம்பது ரூபாய், உள்ளூர் பேருந்துக் கட்டணம் குறைந்த பட்சம் ஒரு டிக்கெட்டுக்கு ஐம்பது ரூபாய், திரை அரங்குகளில் ஒரு டிக்கெட் விலை ஆயிரம் ரூபாய், கீரை ஒரு கட்டு நூறு ரூபாய்....இப்படியாக அவரவர் இஷ்டத்துக்கு இந்திய மக்களைக் கொள்ளையடிக்கலாமா?

பெரிய நிறுவனங்கள் செய்தால் அது பெருமாள் செய்த மாதிரியா என்ன?
பெட்டிக் கடைக்கு ஒரு நீதி பெரிய நிறுவனங்களுக்கு மற்றொரு நீதியா?

இதையெல்லாம் நியாய மனம் உள்ளவர்களும், நம் இந்தியா உருப்பட வேண்டும் என்று உண்மையிலேயே ஆசைப் படும் நல்லவர்களும், ஆற அமர சிந்தித்து பார்க்க வேண்டுகிறேன்! நம் நாடு நன்றாக இருந்தால் தான் நமக்குப்  பின் வரும் நம் சந்ததிகளும் இங்கு அமைதியான நல் வாழ்வு வாழ முடியும்!

இப்போதே அதை "கொள்ளை அடிக்கும் மனம்" கொண்டு  சின்னா பின்னம் செய்து விட்டால், பிறகு இந்த நாடு நல்லவர்கள் வாழவே லாயக்கற்றதாக போய்விடும்!

ஜாக்கிரதை! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!!

வெள்ளி, 23 டிசம்பர், 2011

How to evaluate your friendship? தவறு உங்களிடமா உங்கள் நண்பரிடமா- எப்படி ஆராய்வது?



இரு சாராருக்கு இடையில் ஒரு பிரச்சினை எழும் போது தீர்வு காண்பது யார்? எது நியாயம் என்று எப்படி வரையறை செய்வது? அதையிங்கு ஆராய்வோம்!

1 . இந்தியா பாகிஸ்தான் (Kashmir conflict) எல்லைப் பிரச்சினை!

2 . கேரள-தமிழக முல்லைபெரியாறு ( Mullapperiyar dam) பிரச்சினை!

அல்லது உனக்கும் எனக்குமான 'கருத்து' வேறுபட்டு  பிரச்சினை!
அட! எது வேண்டுமானாலும் இருக்கட்டுமே!

நான் ஒரு படகில் என் நண்பர்களோடு சென்று கொண்டு இருக்கையில் இன்னொரு படகில் நீங்கள் வந்து மோதி அதனால் சண்டை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்! நான் எனது படகோட்டி மற்றும் எனது நண்பர்களுக்கு ஆதரவாகத் தான் பேசுவேன்! நீங்களும் அது போலத்தான் உங்கள் 'படகுக்கு' ஆதரவாகப் பேசுவீர்கள்! இது மனித இயல்பு!

இரண்டு வட்டங்களாக அங்கு நாம் இருவரும் செயல்படுகிறோம்! 
இப்படியாக பலப் பல வட்டங்கள் இந்த உலகில் இருந்து கொண்டே தான் இருக்கும்! இன்னும் கேட்டால் எனக்கு ஆதரவான சில வட்டங்களும் உங்களுக்கு ஆதரவான சில வட்டங்களும் இந்தப் பிரச்சினையில் கூப்பிடாமலேயே வந்து சேர்ந்து கொண்டு அவரவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை வாதங்களை எடுத்து வைப்பார்கள்!

அதனால் பிரச்சினைக்கு எப்படி நியாயமான தீர்வு கிடைக்கும்?

மேற்படி இருவரைத் தாண்டிய ஒரு பொது மனிதனை/மனிதர்களைத் தேடி அவன் சொல்லும் தீர்வை இருவரும் மனப்பூர்வமாய் ஒத்துக் கொள்வதாய் இருந்தாலொழிய இந்தப் பிரச்சினையில் ஒரு போதும் தீர்வு ஏற்படாது!

அதற்கென்று இரண்டு வட்டங்களையும் தாண்டிய, ஒரு புத்தருக்கும், ஒரு இராம கிருஷ்ண பரமஹம்சருக்கும் நாம் எங்கே போவது?

சரி!அதுபோன்று, அப்படி உலகில் ஒரு பொது மனிதர் சொல்லும் நியாயத்தையும் யார் இங்கு ஒத்துக் கொள்கிறார்களாம்? ஏதேனும் முன்மாதிரிகள் அதுபோன்று உலகில் உண்டா? 

நாடுகளிடையே பூசல், பிரச்சினை என்று வரும்போதும் ஐக்கிய நாடுகள் சபையே ஆனாலும், எந்த நாட்டை ஆதரித்தால் தம்மிடம் வந்து பெரிய நாடுகள் சண்டை போடாதோ அந்த நாடுகளை ஆதரிப்பதும், நாதியற்ற நாடுகளை/மக்களை கை கழுவி விடுவதும் நாம் பார்க்காததா என்ன? ஈழப் பிரச்சினையில் அது தானே நடந்தது-நடந்து கொண்டு இருக்கிறது! தமிழர்களின் பூர்விக பூமியிலேயே அவர்கள் அடிமைகளாக்கப் பட்ட அநியாயத்தை எந்த நாடுகள் கண்டித்தனவாம்?

"வந்து சேர்ந்தவன் அடிக்கும் போது, இருந்து வாழ்பவன் அதை தடுத்துக் கொள்ளும் எல்லாவித முயற்சிகளும் தவறு",  என்று வாதிடும் புல்லர்கள் இருக்கும் உலகம் தானே இந்த உலகம்?

(சதாம் உசேன் ( Saddam Hussein) செய்த மாபெரும் தவறு என்னவென்று யாருக்காவது தெரியுமா? அமெரிக்காவுக்கு வேறு சில உள்நோக்கங்கள் இருந்தன! ஆனால் அதைச் சொல்லாமல், ஏதோ ரசாயன குண்டுகளை சதாம் மறைத்து வைத்து இருக்கிறார் என்று ஒரு 'சப்பை' காரணத்தைச் சொல்லி அமெரிக்கா உள்ளே நுழைந்து குண்டுகள் போட்டு ஈராக்கை அழித்தது. அவரை கைது செய்து ஒப்புக்கு ஒரு விசாரணை நடத்தி தூக்கிலிட்டுக் கொன்றது! பின்னர் அப்படி எந்தக் குண்டுகளும் அங்கு கிடைக்கவில்லை என்று 'கூலாக' சொல்லிவிட்டு அடுத்த நாட்டின் மீது 'தாதா வேலை'  பார்க்கப் போய்விட்டது; ஒரு வருத்தம் கூட எங்கும் தெரிவிக்க வில்லை! அதற்காக, எந்த ஐ.நா. அமேரிக்கா மீது போர் தொடுத்தது அல்லது கண்டனம் தெரிவித்தது ?)

ஆக,  இந்த இலட்சணத்தில், பெரும் அறிஞர்கள் அமர்கிற ஐ.நா போன்ற உலக சபைகளிலேயே நியாயம் நீதி எடுபடாத போது, பிற சிற்சிறு அமைப்புகள் மற்றும் தனி மனிதர்கள் இடையில் எப்படி நியாயம் எடுபடப் போகிறது? அது ஒரு வெறும் வீண் கனவே ஆகும்!

"தடி எடுத்தவன் தண்டல்காரன்" என்பது போல, ஆட்களைக் கூட்டி அல்லது நாடுகளைக் கூட்டி தனது சக்தியைப் பெருக்கிக் கொள்பவனைப் பார்த்து இந்த உலகம் அஞ்சும்; ஆதரிக்கும்! மற்றபடி அவனிடம் இருக்கும் உண்மையை யாரும் ஆராய்ந்து ஆதரிப்பதில்லை ; அது மனிதர்கள் எவராலும் நாடுகள்/அமைப்புகள் எவற்றாலும் முடியவும் முடியாது!

உலகம் இப்போதும் எப்போதும் அப்படித்தான்!
இனியும் அப்படியே இருக்கும்!

மகாபாரத காலத்திலேயே துவாபர (Dvapara Yuga) யுகத்தில் தர்மம் இரண்டு கால்களில் கூட நிற்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது !! அன்றைக்கே, துரியோதனாதியர் நூறு பேருக்கு பஞ்சபாண்டவர் அஞ்சு பேர் தான்! அதாவது நூறு கெட்டவர்கள்-ஐந்து நல்லவர்கள்! (என்ன விகிதம் இது- சீ!சீ! )

இப்போதோ கலி யுகம்!

தர்மத்துக்கு ஒரு காலும் இல்லாமலேயே தவழ்ந்து செல்லவேண்டிய துர்பாக்கியம் போலும்!
அது நல்லவர்களை, நியாய தர்மத்தை எப்போது சென்றடையப் போகிறதோ?

-யோஜென் பால்கி
yozenbalki