Translate this blog to any language

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

Oh Tamils! Be scattered as the homeless emigrants! இனிபூமியெலாம் நாடிலியாய் சிதறிப் போவோம்!




இதுசென்னை இதுசென்னை இதுதான் சென்னை
விதிஎன்னை விதிஎன்னை வைத்த தென்னே?

எதையெண்ணி எதைஎண்ணி பீடு கொள்வேன் 
விதையெல்லாம் வீணான பூமி தன்னில்!

தமிழ்பேசும் மக்களுக்குத் தலையூர் என்பார் 
தமிழர் கூவத்தூர்சேரியிலே ஓரம் வாழ்வார்!

பிழைப்புக்கு வந்தவனை 'ஆண்டை' ஆக்கி  
உழைப்புக்கு அவன்காலை நக்குவோர் யார்?

வழிப்போக்கர்  வாழ்வதற்கு வசதி செய்தே
வழிவந்த முதுநிலத்தை இழப்பார்தான் யார்?

மண்ணரசன்  குடிசைக்குள் முடங்கிச் சாக
நாடோடி நாலடுக்கில் வாழ்வ துண்டா?
   
என்பாட்டன் முப்பாட்டன் இங்கிருந்தான் 
எண்ணற்ற சொந்தங்கள் இங்கே உண்டாம்!

அதனாலே வியப்பொன்றும் உள்ளே உண்டு 
"எதனாலே நமக்கிங்கு நிலங்கள் இல்லை?

உயர்ந்துள்ள மாளிகையில் நண்பர் இல்லை?
பெயர்கின்றோம் ஊர்விட்டு ஏனாம்" என்றே!

தெருப்பெயரில் முதலியார்கள் செட்டியார்கள் 
வன்னியர்கள் பிள்ளைமார்கள் பழைய சேதி!

அந்நியர்கள் தமிழறியார் பிழைக்க வந்தார்  
தமிழ்வீதி தமிழூர்தான் வாழ்வோன் வேற்றான்!!

புரியாத மொழிச் சத்தம் வீதியெல்லாம் 
ஒருவீட்டில் தமிழனி(ல்)லை என்ன நியாயம்?

தெருத் தெருவாய் ஊர்வூராய் கொள்ளைபோக
நறுந்தமிழர் நாடுஇனி இல்லை ஆகும்!

இலக்கியத்தோர்  'பட்டிமன்றப்' பேதையரே கேளீர்!
நம்இனமழிந்த பின்னாலே தமிழ் எதற்காம்?

சுற்றியொரு முற்றுகைக்குள் சுருங்கிக் கொண்டு
பழம்பாட்டி 'தமிழ்க் கனவு' கதைப்பார் உண்டோ?

இன்னும்நாம் 'ஒருதேசக்' கதைகள்  பேசி 
இருக்கின்ற மண்விட்டே ஓடு கின்றோம்!

உன்திண்ணை  உன்வாசல் உந்தன் கூடம் 
நீயுறங்கும் கட்டில்மேல் அந்நியன் வாசம்!

'அண்ணனுக்கு' அங்குலமும் தருவதிலை நாமே
அன்னியர்க்கோ அன்னைநிலம் தந்துவிட்டோம்!

நம்வாசல் நம்கோயில் முடிந்த தென்க!
வந்தவனோ வரலாற்றில் புரட்டு செய்வான்!

பளிங்குநிற 'மந்திர்கள்' பல்லடுக்கம்  கட்டி
தெளிவாகச்  சொல்வான் 'நீ நாடிலி' என்றே!

இனி,

வாபோவோம் பாலைவனம் ஒட்டகம் மேய்ப்போம்!
பணிவாக அன்னியர்கள் தாள்பணிவோம் வா!

ஊரூராய் நாடோடி வாழ்க்கை 'தாழ்ந்து'
நாடாண்ட பழங்கதைகள் பிதற்றுவோம் வா!

தென்னிலங்கை தமிழ்மக்கள் சீரழிந்த கதையாய் 
நாம்பூமியெலாம் அகதிகளாய்ச்  சிதறிப் போவோம்!

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

Are Tamils the migrating species & Homeless? தமிழன்தான் புலம் பெயர்ந்து சாகின்றான்!


சிவகாசி என்றவுடன் தீக்குச்சி குழந்தைஎலாம் 

சின்னேரம்  மனத்திரையில் நம்முள்ளே மின்னலிடும்!
சிவகாசி அம்மட்டோ! அச்சகத்தில் அரும்புரட்சி
சிருங்கார பட்டாசு உலகமெலாம் ஏற்றுமதி 
ஆயிரம் கோடிகளில் புரளுகின்ற செலவாணி 
அத்தனையும் உள்ளத்தில் சட்டென்று நினைவுவரும்!
நேற்றொரு நாள் மதியத்தில் மனமொடிந்தேன்
முதலிப் பட்டென்னும் ஊரொன்றில் வெடிவிபத்தாம்!

ஆறெட்டு அறைமுழுதும் நாலாறு ஆள்வீதம் 
முன்னூறோ நானூறோ தொழிலாளர் பணிபுரிய 
ஓரறையில் தவறுதலாய் தீப்பற்றி வியாபித்து 
ஒவ்வொன்றாய் வெடிவெடித்து சிதறிப் புகைசூழ 
பட்டாசுத் தொழிற்சாலை மண்மூடிப் போனதம்மா!
பெருஞ்சப்தம் தொடர்ந்துவர ஊர்மக்கள் சிலநூறும்
அருமைச் சொந்தங்கள் உறவுகளை காப்பாற்ற 
முன்னேறிச் செல்கையிலே பெருஞ்சோகம் இன்னொன்றாம்!

பட்டாசுக் கிட்டங்கி வெடித்துச் சிதறியதால் 
உள்ளிருந்த தொழிலாளர் காப்பாற்றப் போனவரும் 
செல்லரித்த புத்தகமாய் சிதறிச் செத்தொழிந்தார்!
அம்மவோ! ஆற்றாமை உள்ளமெலாம் எரியுதம்மா 
விம்மி அழுவதற்கோ இருபத்து கோடிவிழி?
படித்தவர் படிப்பெதற்கோ காப்பதவர் கடனிலையோ?
அரசும் அறிஞர்களும் இம்மட்டும் செய்ததென?
வறியவரை காப்பதற்கு வகுத்தாண்ட முறைகளென?

வருமுன்னர் காவாதான் கதைகள் அறியேமோ ?
எண்ணிக்கை சொல்வதெலாம் உண்மை எனலாமோ? 
உளர்-இலர் மெய்க்கதைகள் கணக்கும் சரிதானோ ? 
உழைத்துப் பிழைக்கின்ற தமிழ்மக்கள் கதிஇதுவோ 
உலகமெலாம் நீர்-நெருப்பால் அழிவதே நம்விதியோ?
தமிழ்உயிர்க்கு மதிப்பிலையோ வெறும் மயிரோ? 
அமிழ்கடல்சூழ் நிலமெங்கும் இப்பேதை போலெவரோ?
வெறும்தூசு கண்பட்டால் சினந்தெழுஊம் இனமுண்டே! 

பெருஞ்சாவு இனமொத்தம் எரித்தொழிப்பு நிகழ்ந்தாலும் 
வெறும்பேச்சு கடுதாசி கால்நக்க வடக்கேகும் 
தெருவோரத் திருத்தலைமை உணர்வற்ற தலைமுறைகள் 
ஆண்டவன் பேர்சொல்லி தப்பிக்கும் ஆளுமைகள்!
ஆளுமையை குறைசொல்லும் முன்னாள் ஆண்டவர்கள் 
வேலைமட்டும் நடக்காமல் வீணாய்நாம் போனவராம்!
ஈழம் என்றாலும் இடிந்தகரை என்றாலும் 
தமிழன்தான் புலம் பெயர்ந்து சாகின்றானே!

உலகெங்கும் உதைவாங்கி உளம்நோகவோ-தமிழன்!
தலையொன்று சரிஇருந்தால் நலம்பலவும் கிடைத்திருக்கும்! 
விலைபோன கதையால்தான் வில்லங்கம் வந்ததம்மா!
பின்னொருநாள் நம்நிலத்தில் நன்மை பெருகுமெனும்
விண்மீன்கள் தென்படலை நம்பிக்கை அழிந்ததம்மா!
ஊரடித்து உலையிலிடும் உன்மத்தம் வளருதிங்கு!
சாதியினால் சமயத்தால் பிட்டுவைத்தக் கட்சிகளால்  
திரையுலக மாயை யினால் தீமை நிலைத்ததம்மா!

இலஞ்சப் பேய்களினால் இரக்கமற்ற இராட்சதரால் 
பொய்யையே விதைக்கின்ற அரசப் புன்மையரால் 
ஆள்பவர்க்கு அடிவருடும் உயர்ந்த பதவியரால் 
ஏழை படும்பாடு எள்ளளவும் உணராமல் 
உள்ளவர்கள் படித்தவர்கள் நாட்டை நடத்துகிறார்!
வெட்கப்பட வேண்டும் வெறும்சின்ன தேசங்கள் 
ஒற்றுமையால் தியாகத்தால் ஓங்கி வளர்ந்ததம்மா
இவர்மட்டும் தேய்கின்றார் நாடிலி ஆனாரே! 

இனி ஊழிஒன்று  வேண்டுகிறேன் வேண்டுகிறேன் யானே!
தமிழ்ச்சங்கம் அழிந்தது போல் ஊரழிக அழிக ! 
இங்கு ஆழிசூழ்  நிலமெல்லாம்  தீப்பற்றி எரிக! 
நிலம்பிளந்து மனிதமெலாம் மண்ணுக்குள் மறைக! 
பொய்மை பொசுங்கிடவே புதுக்குலமது தோன்றிடுக!  
முதுகுடி ஒன்றதுவும் முடிவதுமே நன்றாம்!
தனியொரு தமிழர்க்கு வாழ்வில்லையென்றால்
தரணியம் எதற்கோ மொத்தமுமே மறைக!  

-யோஜென் பால்கி 
www.yozenmind.com