Translate this blog to any language

சனி, 17 செப்டம்பர், 2022

யாரந்த பெரியார்? ஏனிந்த புகழ்ச்சி? (கவிதை)

எந்த ஒரு சொல்?
******************
எந்த ஒரு சொல் 
ஆதிக்கவாதிகள்
கோட்டை கொத்தளம்
சுக்குநூறாக்கி 
மண் மேடாக்கிய
அந்த ஒரு சொல்?

எந்த ஒரு சொல் 
ஆரிய சனாதன
மென்னி திருகி 
மூச்சு நிறுத்தி 
திராவிட பூமியை
நிறுவிய திருச் சொல்?

எந்த ஒரு சொல்
சூத்திரர் வாழ்வை
நெம்பி நிறுத்தி 
உலகம் வென்றிட
கல்வியும் வேலையும்
அருளிய அச் சொல்?

எந்த ஒரு சொல்
பூமியில் பாதியாம்
பெண்ணின உயிரை
சமமாய் நடத்தென 
போர்க்குரல் உயர்த்தி
உழைத்திட்ட அருஞ்சொல்?

எந்த ஒரு சொல்
அமிழ்ந்தவன் உயர 
மூத்திரச் சட்டியை
சுமந்திட்ட வாறே 
இடையறாத் தொண்டு
புரிந்திட்ட பெயர்ச் சொல்?

எந்த ஒரு சொல்
மானமும் அறிவுமே
மனிதனுக்கு அழகென
தடியால் அடித்து
தமிழினத் தூக்கம் 
கலைத்திட்ட வினைச் சொல்?

அந்த ஒரு சொல்
தந்தை பெரியார் 
தந்தை பெரியார்!!

எந்தன் உள்-வெளி 
எங்கணும் நிறைந்து
உயிரெலாம் கலந்து
போர்க்குணம் நல்கிடும்
சமநெறி ஞாயிறு
தந்தை பெரியார் 
பிறப்பை போற்றுவம்!

-YozenBalki 

பெரியார் பிறந்தநாள் 
144-வது ஆண்டு
September 17-2022

புதன், 7 செப்டம்பர், 2022

யார் தீண்டத்தகாதவர்கள்?

மீன்கள் வாசமில்லா
குளங்கள் கொண்ட
கோவில்கள் உண்டா?

சந்தையில் வாங்கிய
பூக்கள் யாவும்
எந்த விரல்கள்
பறித்த பூக்கள்?

காய்ந்த
மாட்டின் சாணம்
வரட்டியில்
எங்கள் கைபடாத
விபூதி தான் உண்டா?

உங்கள்
ஆராதனை தட்டில்
விழுந்த காசுகளை
மனுதர்மப்படி
எப்படிப் பிரிப்பீர்?

எங்கள்
ஆடு மாடு கோழி
மேய்ந்து திரிந்து
போட்டக் கழிவுகளில்
முளைத்த
தர்பைப் புற்கள்
உங்கள் கைகளில்!

இப்போது
சொல்லுங்கள்
யார்
தீண்டத்தகாதவர்கள்?

-கவிஞர் கு.தென்னவன்

Courtesy:
WhatsApp University 

எனது நீண்ட கால நண்பர் "சமூக நீதிக் கவிஞர் தென்னவன்", அவர்கள் இன்று எழுதிய கவிதை!
🌸☘️❣️❣️☘️🌸