Translate this blog to any language

சனி, 18 ஜனவரி, 2020

இப்படியே போய்விடாதே காலமே!


இன்னும் செய்ய
ஆயிரம்
இருக்கையில்
முகநூலில் மூழ்கியும்
குறுந்தகவல்களில் குலைந்தும்
தூரத்து மின்மினிகளில்
இலயித்தும்
ஒரு சுனாமியின் பாய்ச்சலாய்
கடந்துபோய் கழிந்துவிடாதே!
என் புத்திக்குள் சக்தியேற்று!
வேண்டிய பலவற்றை
விடாது செய்யவும்
வேண்டாத சிலவற்றை
யான் விலக்கி வைக்கவும்
வீரிய விருப்பம்
என்னுள் திணித்துவை!

வெறும் "முப்பத்தாறாயிரத்து
ஐநூற்று சொச்சத்தை"
அடிக்கடி நினைவூட்டு;
சீர்வாழ்வின் வீணை மீட்டு!
இருந்தவர் மறைந்த
ஏழாயிரம் கதையளி!
இருப்பதில் சிறப்பது
எதுவெனத் தெளிவி!
உள்ளம் உடையாதிருக்க
காலத்தில் அருள்செய்!
'இருமை' கடந்தேக
இதமாய்க் கற்பி!
என்னுள் கிடக்கும்
ஏகாந்தம் உணர்த்து!

எளிய உயிர்களையும்
ஏற்று 'மதிக்கும்' இங்கிதம் தா!
ஆனபணிகளை ஆற்றும் போது
அடங்கிநிற்கும் உள்ளம் உதவு!
சிறிது பெரிதென பேதமொழித்த
சீரிய சமநிலை தவறாது அளி!
குழந்தைகள் போற்று !

கூடி வாழ்ந்திடும் கூடுகள் கொடு!
நிலாச்சோறுண்ட அற்றைநாட்களை
அப்படியே மீண்டும் கையளித்துப்போ!
வீதியில் முளைத்த மூங்கில் கட்டிலில்
முதியவர்கள் 'கதைக்க'
இளைஞர்கள் 'கலக்கும்'
கலகலப்பு காட்டு!
எங்கள் வானத்தில்
மகிழ்ச்சியின் பூரிதத்தை
தாய் மழையாக்கு !

அன்பின் தலைமையில்
அறிவின் "சிறுபண்டங்கள்"
தொல்லை தராமல்
இருந்து கொள்ளட்டும்!

-YozenBalki

(Will continue... sometime if destiny permits...)
**********
www.yozenmind.com

ஞாயிறு, 17 நவம்பர், 2019

திருக்குறளை பழித்தாரா பெரியார்? இல்லவே இல்லை!

குறளை பழித்தார் பெரியார் என்று யாராவது சொன்னால் இதைப் படிக்கச் சொல்லுங்கள்!
_________________________________________

"குறளும் - நானும்" : தந்தை பெரியார் பேசிய உரை இது!

பேரன்பு படைத்த தலைவர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே, வணக்கம்!


வள்ளுவர் குறளையும், அந்தப்படியே, அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன்.
எல்லாவற்றையும் குறை சொல்லும்போது, பலர் என்னிடம், 'எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான், 'இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது, அதை எடுத்து விடு என்று 
கூறினால் - அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது?' என்று பதில் கூறுவேன்.

ஏறக்குறைய மத சம்பந்தமான காரியங்களில் மக்களுக்கு நம்பிக்கையே இருக்கக்கூடாது என்று கருதி அந்தப்படியே பிரச்சாரம் புரிந்து வந்தேன். பிறகு நாளாக ஆக நல்ல அறிவாளிகளோடு - அறிவாளி என்றால்
பண்டிதர்களோடு அல்ல, பொது அறிவுள்ள மக்களோடு, திராவிட உணர்ச்சி மிக்கவர்களோடு - நம் உணர்ச்சியுள்ள அறிவாளிகளோடு பழகியபோது குறளின் மேன்மை பற்றி அவர்கள் எடுத்துக் கூறினார்கள். 

நான், 'இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே, இந்த இடத்தில் இப்படியிருக்கிறதே என்று கேட்டேன். அது பரிமேலழகரின் உரை: அது குறளாசிரியர் கருத்தல்ல' என்று எடுத்துக்கூறி உண்மை  உரையினைச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை என்று கொண்டாடப்பட்டது. அவர் மனுதர்ம சாத்திரப்படி குறளுக்கு உரை எழுதிவிட்டார். பின்னர் வந்த அறிவாளிகள் அதைக் கண்டித்து, குறளின் உண்மைக் கருத்தை எடுத்துக் காட்டினார்கள்.

அதிலிருந்துதான் நான் குறளைப் பற்றிப் பேசுகிறேன். அதுவும் அதையே ஆதாரமாக (Authority) எடுத்துக்
கொண்டல்ல! 'நான் சொல்லுகிற கருத்து - அதிலும் இருக்கிறது பார்!" என்று கூறிவந்தேன்.

அதில் சிறிது குறை இருந்தால் இப்போதைக்கு அது இருக்கட்டும் என்று கருதினேன்.