இது உளஇயல் கலைஞன் யோஜென் பால்கியின் வலைப் பூந்தோட்டம்: A Chennai Psychologist
Translate this blog to any language
செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023
வரி மேல் வரி போட்டு சாகடிக்கிறீங்க?
திங்கள், 14 ஆகஸ்ட், 2023
நாங்குநேரி பள்ளிக்கூட ஜாதீய அரிவாள் வெட்டு;
சமீபத்தில் தமிழகத்தில் "நாங்குநேரியில்" ஒரு தலித் பள்ளிக்கூட மாணவனை வேறு சமூகத்தை சார்ந்த மூன்று மாணவர்கள், வீடு புகுந்து சரமாரியாக கத்தியால் வெட்டி இருக்கிறார்கள்!
வயது முதிர்ந்தவர்களிடம் தமிழகத்தில் ஓரளவுக்கு இருந்து வந்த ஜாதிப் பிரிவினை வெறுப்பு இன்று பள்ளிக் குழந்தைகள் வரை இறங்கி வந்திருக்கிறது!
அதற்குக் காரணம் என்ன?
கிராமங்களில் நிலை பெற்று வாழும் இடங்களில் ஊரும் சேரியும் தனித்தனியாக இருக்கின்றன! ஊர் மாறும் பொழுது ஜாதிப் பெருமை பேசுவது ஒழிந்து போய் விடுகிறது!
அது, சமீப காலமாக குறிப்பாக தந்தை பெரியாரின் மறைவுக்குப் பின்னால் அரசியல் பொதுக்கூட்டங்களில் ஜாதிக் கட்சி தலைவர்கள் பலரும் ஆளாளுக்கு தங்களுக்கான ஓட்டு வங்கியை தக்க வைத்துக்கொள்ள பேசி வரும் "ஷத்திரிய வீரம்" பற்றிய பேச்சுகளே ஆகும்!
அது ஒரு விதமான தவறான வீண் பெருமையை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மனதில் விதைத்து அவர்களை ஒரு ஜாதீய வெறி பிடித்த தீவிரவாதிகளாக மாற்றுகிறது! அவர்கள் இனி கல்வியில் கவனம் செலுத்த மாட்டார்கள்; ஒரு தலைவனுக்கு அடிமையாக ஜாதிப் பெருமை மட்டும் பேசிக் கொண்டு திரிந்து கல்வி வேலைவாய்ப்பு மீது கவனம் செலுத்தாமல் சீரழிந்து போவார்கள்!
நீங்கள் ஒன்றை கூர்மையாக கவனித்து பார்த்திருக்கிறீர்களா? காதல் திருமணங்களையும், சாதி மறுப்பு திருமணங்களையும் இந்தியாவிலேயே ஒரு கொள்கை ரீதியாக ஒரு தொடர்ந்த வேலைத் திட்டமாக தந்தை பெரியார் துவங்கி வைத்த திராவிடர் இயக்கங்கள் மட்டுமே தொடர்ந்து செய்து வந்தன/ வருகின்றன/ வரும்!
ஏனென்றால், வெறும் கல்வி அறிவு வழியாக மட்டுமே ஒரு அடிப்படை சமூகப் புரட்சியைச் செய்துவிட முடியாது!
அதற்கு ஒரு தொடர்ந்த உயர்நோக்கம் உள்ள சமூகத் தொண்டு, இடையறாமல் நடைபெற வேண்டும்! அதனால் தான் அம்பேத்கர் இயக்கங்கள், வெறும் ஓட்டு அரசியல் மட்டும் பேசிக் கொண்டு வடக்கில் படுதோல்வி அடைந்து விட்டன!
ஈராயிரம் வருடத்திற்கு மேலான இறுக்கமான சாதி அமைப்பு, கொஞ்சமாவது தளர்ந்து இன்று நமது தமிழகத்தில் இயங்கும் பற்பல திருமண பதிவு மையங்களில் "எந்த சாதியானாலும் பரவாயில்லை!" என்று பேசும் நிலை தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது!
அதற்கு மூல காரணம் பெரியார் இயக்கங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும், சொல்ல போனால் அத்தகு சாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு தரும் சாதி மறுப்பு திருமணங்கள் தாம்!
ஆனால் நமக்கு கொஞ்சம் கெட்ட காலமாக, வன்னியர் கட்சி (பா.ம.க) ராமதாஸ், புதிய தமிழகம் கிருஷ்ணமூர்த்தி போன்ற ஜாதிக்கட்சி ஆட்களால் தமிழகத்தில் சாதியின் இறுக்கம் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது!
அது ஆரிய பார்ப்பன பாஜகவுக்கு குதூகலம் ஏற்படுத்தியுள்ளது! ஆரிய பாஜகவுக்கும் ஜாதி கட்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைந்த நன்மைகள் இருக்கின்றனவே!
மேலும் பார்ப்பனீய சனாதன சாதிக் கட்சிகளை பாஜகவினர் உள்ளே கொண்டு வந்து வடநாடு போல தமிழ்நாட்டை துர்நாற்றம் வீசும் வர்ணாஸ்ரம சாக்கடையாக மாற்றத் துடிக்கிறார்கள்!
ஆனாலும் நாம் அந்த சாதி அமைப்பை, உயர் கல்வி மற்றும் பெரியாரிய தொடர் பரப்புரைகள் வழியாக உடைத்தெறிந்து ஒரு சமத்துவ சமூகத்தை தமிழ்நாட்டில் உருவாக்க முடியும்! அது ஒன்றே வழி!
சரி! அதை, பெரியார் இயக்கங்கள் துணை இன்றி வெறும் அம்பேத்கர் இயக்கங்கள் வழியாக செய்ய முடியுமா என்றால் நிச்சயம் முடியாது! காரணம் அம்பேத்கர் இயக்கம் என்று வரும் பொழுது அது தலித்துகள் பெரும்பான்மை பங்கு வகிப்பது தானே என்று உயர் தட்டு வர்க்கம் சட்டென வெறுப்பு கொள்கிறது!
அதில் கலந்து பெரும்பான்மைச் சமூகம் எவரும் பங்களிப்புச் செய்ய முன் வருவதில்லை! (Don't say about Exceptions. Exceptions cannot be a Rule)
ஏழைகள் பேசும் கம்யூனிசத்தை பணக்காரர்கள் எப்படி ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ, அப்படியே சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் பேசும் சமத்துவ நெறியை உயர் வகுப்பினர் என்று தம்மைக் கருதுபவர்கள் கருத்தில் கொள்ள மாட்டார்கள்!
அங்குதான் அனைத்து சமூக மக்களும் கலந்து பங்களிக்கும் தந்தை பெரியாரின் இயக்கங்கள் நமக்கு ஒரு நம்பிக்கை ஊட்டுகின்றன! ஒரு சமரசம் இன்றி செயல்பட்டவாறு தொடர்ந்த சமூக மாற்றத்தை அவை ஏற்படுத்தி வருகின்றன!
சொல்லப் போனால், இந்தியாவின் பிற மாநிலங்களிலேயே தமிழகத்தில் மட்டும் தான் சாதி மறுப்பு திருமணங்களுக்கு 95% அளவுக்கேனும் சட்டப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளது! சங்க காலம் போல காதல் மனம் தான் ஜாதியை ஒழிக்கும் சிறந்த துணையாகும்!
அதைப் புரிந்து கொண்ட ஜாதி வெறியர்கள் காதல் மணத்துக்கும் இப்போது தடையாக இருந்து அவர்களைக் கொலை செய்யும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள்! அங்கு சாதி ஓட்டு வாங்கி பிழைக்கும் அரசியல் கட்சிகள் மவுனம் சாதிக்கும் நிலை ஏற்படுகிறது!
ஆனாலும், இங்கு ஓட்டு கேட்கும் அரசியல் கட்சியாக இல்லாமல் வெறும் சமுதாய இயக்கமாக செயல்படுகின்ற தலைவர்களைக் கொண்ட பெரியார் இயக்கங்கள் உலகிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அதிகம் காணப்படுகின்றன!
அதுவே தந்தை பெரியார் மீது நாம் வைக்கும் பெருமதிப்பிற்கு இன்னும் ஆழமான காரணமாக அமைந்து விடுகிறது!
தந்தை பெரியார் ஆரம்பித்த திராவிடர் கழகத்தை இன்று வரை வழி நடத்தும் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், தோழர் கோவை கு. ராமகிருஷ்ணன், தோழர் கொளத்தூர் மணி அவர்கள், மே 17 இயக்க தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் போன்றோர் எந்தவித சிறு சுயநலமும் இல்லாமல் தொடர் பரப்புரை செய்கிறார்கள்! அவர்கள் பேசுகின்ற நடத்துகின்ற, தமிழ் மக்களை பண்படுத்தி வரும் சமூகப் புரட்சிதான் என்ன என்பதை சற்று நிதானமாக நாம் படித்தால் அதன் வீரியத்தை அதனால் நாம் பெற்றுவரும் நற்பலனை நன்கு உணரலாம்!
அது புரிய வேண்டும் என்றால் பிற மாநிலத்து சாதி மறுப்பு இணையர்கள் தமிழ்நாட்டில் வந்து அடைக்கலம் புகுந்து திருமணம் செய்து கொள்வது ஏன் என்றும் நமக்கு எளிதாகப் புரியும்!
ஆக, இங்கு கடைசியாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால், இந்தியாவில் ஒரு சமத்துவ சமூகம், சாதியற்ற சமூகம் உருவாக வேண்டும் என்றால் தந்தை பெரியாரின் கொள்கைகள் பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்லப்பட வேண்டும்!
சனாதன அதர்மத்தை, அது ஏற்படுத்திய ஜாதியை ஒழிக்க பெரியாரின் கொள்கைகள் என்னும் படைக்கலன்கள் தான் முக்கிய பங்கு வகிக்க முடியும்! அவை மட்டுமே ஒழிக்கும் கருவிகளாக செயல்படும்! அதற்கு மாறாக கல்வி கற்பது மட்டுமே போதும், ஜாதியை ஒழித்து விடலாம் என்ற அம்பேத்கர் வழியில் சென்றால் அது வெறும் கேடயத்தை தூக்கிக்கொண்டு போருக்கு செல்வது போன்றதாகும்!
கேடயங்கள் வெறும் தற்காப்பு வேலைகளுக்கு பயன்படுகின்றன; அது முன்னேறிச் சென்று தீமைகளை அழிக்க பயன்படாது!
கேடயத்தினால் பெரும் பயனேதும் கிட்டி விடாது! அதையே நாம் நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!
ஆனால், படைக்கலன்கள் என்பன சமூகத் தீமைகளை, சாதீய கட்டுமானங்களை, நாட்டில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை எல்லாம் ஒழிக்கும் கருவிகளாக செயல்படும் சக்தி மிக்கவை!
ஆகவே தந்தைப் பெரியாரைப் புறம் தள்ளிவிட்டு இந்தியாவில் ஒரு பெரிய சமூக புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்று சில பல தலைவர்கள் நினைப்பதும் பேசுவதும் வெறும் பகல் கனவே ஆகும்!
நான் சொல்வதை நீங்கள் யோசித்துப் பாருங்கள்!
-YozenBalki
💫💫💫💫