Translate this blog to any language

வெள்ளி, 28 நவம்பர், 2008

கொஞ்சம் வீரமாய் மாறு!


கொஞ்சம் விட்டுக் கொடு-
கொஞ்சம் சண்டை இடு!
வாழ்வின் விதி இதுதான் !

நீயோ,
சண்டையிட வேண்டிய
இடங்களில்-
தருணங்களில்
அடங்கிப் போகிறாய்-
சமரசப் படவேண்டிய போது
சண்டையிட்டு நிற்கிறாய்!

உனது பிரச்சினைதான்
உலகின் பிரச்சினையும்!

விஷயங்களை
வைக்க வேண்டிய இடத்தில் வைக்க
கற்றுக் கொள்!

ஆம்,
கொஞ்சம் வீரமாய் மாறு-
கொஞ்சூண்டு விட்டுக் கொடு!


-மோகன் பால்கி
3rd January 2004
From MBK Diary

செவ்வாய், 18 நவம்பர், 2008

ஒரு துளி அமைதி!




ஒரு துளி அமைதி
ஓராயிரம்
தெய்வீக
வார்த்தைகளைக் காட்டிலும்
புனிதமானது!

-மோகன் பால்கி



"எதை' எதாக மாற்ற?


உலகில் இதை அதாகவும்
அதை இதாகவும் மாற்றுவதற்கு
'நான்' முயன்றேன்!

ஆனால்,
அன்பைப் போதிக்க
ஆயுதம் ஏந்தும்படியாகவும்

அகிம்சையைப் புரிய வைக்க
பிறரை இம்சிக்கும்படியாகவும்
ஆகிப் போனது!

உலகம் அதாகவே இருந்துவர
'நான் தான்" வேறு எதாகவோ
மாறிப் போனதை உணர்ந்தேன்!

"நான்" அழிந்தபோது....

உலகம் உயிர்த்தது!

-மோகன் பால்கி

பன்மரத் தோப்பில் சிற்சிறு மரங்கள்!




ஒரு மர வளர்வும கால முதிர்வும்
இணைந்து தருவது ஒரு பயன் என்னில்
பன்மரத் தோப்பில் சிற்சிறு மரங்கள்
பல்கி வளர்தலே பெரும்பயன் என்போம் !

ஒரு மரம் வளர்ப்போன் அத்தனை யுக்தியும் 
அம்மரந்தன்னில் அமுக்கி வளர்ப்பதாம்
நினைப்பில் வருபயன் பொய்மை மகிழ்வே!
ஒன்றெலா மென்றுமே தோட்ட மாகிடா!

விதவிதம் விதைப்போன் அனுதினம் உடல்மன
வலிகள் பொறுத்து தோட்டம் காப்போன்
தொய்விலா முயற்சியில் முளைப்பனவற்றில்
வருபொருள் நீட்டமே  பன்மைப் பயனாம்!

-மோகன் பால்கி

Intra Day/Bonanza
T.Nagar
19.04.2007

திங்கள், 17 நவம்பர், 2008

குரு ஒரு கெட்ட பழக்கம் !



எப்போதுமே
ஒரு கெட்ட பழக்கத்துக்கு விலையாக
இன்னொரு கெட்ட பழக்கம்
தவறாமல் வந்து நம்மைச்
சேர்கிறது!

ஆம்!
நல்லதொரு சீடனுக்கு
குருவும் ஒரு கெட்ட பழக்கம்தான்!
விட முடியாத
கடைசி கெட்ட பழக்கம்!

ஆனால்,
குருவே முன் வந்து
தன்னை விடச்சொல்லி
சீடனை
வேறொரு கெட்ட பழக்கத்துக்குள்
வலிந்து
தள்ளி விடுகிறார்!

கடைசி கடைசியான
அந்தக் கெட்ட பழக்கத்துக்கு
பெயர்தான் 'தியானம்'
அல்லது
'இறைவன்'!

-மோகன் பால்கி
கில்ட் பில்டிங்
தியாகராய நகர்
சென்னை



புதன், 12 நவம்பர், 2008

இரட்டை நாக்கு "பாதி- சேஷனா"?


'கல்லானாலும் கணவன்'
'புல்லானாலும் புருஷன்'
எனினும்

எவ்வளவு தூரம் தான்
அவமானங்களை;
அடி உதைகளைத்
தாங்கமுடியும் என்பதை
அந்த
மனைவி அல்லவா
தீர்மானிக்க வேண்டும்?

அப்படிக்கின்றி
அதையெல்லாம் தீர்மானிப்பது
அவளது
புருஷன் கூட இல்லை;
அக்கம் பக்கத்தில் வாழும்
"அதி மேதாவிகள்தான்" என்று
ஏதேனும் நாட்டில்
புது வித பழக்கம்
இருக்கிறதா என்ன?

எங்கு இருக்கிறதோ இல்லையோ
இங்கே இருக்கிறது நண்பனே
அவ்விதப் பழக்கம்!

பக்கத்து நாட்டில்
அவமானப் பட்டு
அடி உதை பட்டு
காலகாலமாய்
உயிர்விடுகின்ற
தாய் மொழித் தமிழரை

இன்னும் படு-நன்றாய்ப் படு!
நக்கிப் பிழைத்து
நாய் போல் வாழ்ந்திடு!


இன்னும் குனிந்து
அடங்கிப் போ என
"மேதைகள்" சிலரிங்கு
சொல்லும் உரிமையை
மமதையை என் சொல?

'பசு வதை' தடுக்க
ஆத்திரப் படுபவர்-
பூச்சி புழுக்களில்
இறைவனை காண்பவர்-
"எல்லாம் பிரம்மம்"
என்று கதைப்பவர்-
இந்தக் கதையிலோ
வீடண ஆழ்வார்!

எப்படி இந்த
இரட்டை அளவுகோல்?

ஐயோ இவர்கள்
மனிதர்கள் தானா ?
இரட்டை நாக்கு
"பாதி- சேஷனா"?

-மோகன் பால்கி

செவ்வாய், 11 நவம்பர், 2008

நல்லோர் உலகு எள்ளிச் சிரிக்கும்!



தன்னலத்தில் இருந்து விரியும்
பொதுநலமே மெத்தச் சரி!

தன்னை விரும்பாதவனின் ;
தன்மொழி-இனத்தை விரும்பாதவனின்
பொதுநலத்தை
என்னென்று சொல்லி அழ ?

இயற்கையின் மொழியும் அதுவன்றோ?

ஒளி- ஒலி கூட
அருகில் அதிகமாகவும்
தூரம் செல்லச் செல்ல
அடர்த்தி குறைந்தும்தான்
மறைந்து போகிறது!

மனிதா நீ மட்டும் எவ்வாறு
தலைகீழாய்
இலக்கணம் வகுக்கிறாய்?

முதலில்
"அகில உலக சமத்துவமாம்" !!

அதன்பின்
"அகண்ட தேசியம்"-
"மொழிவாரி மாநிலம்"-
மாவட்ட நலம்,
வட்டம்,
பகுதி,
தெருக்கள்,

அதன் பின்

உன் வீடு
என்வீடு,
என்மக்கள்

அதன் பின் தானாம்
தன் நலம் சுய-நலம் !

ஆகா அருமை!

ஐயோ!
குழப்பத்தின்
ஒட்டுமொத்த குத்தகைக்காரனே!

ஏதோ ஒரு
தூர தேசத்து அம்மாவையும்
வேற்று மொழி நாட்டையும்
அங்கே ஒரு
ஊர் பேர் தெரியாத குடும்பத்தையும்
பற்றிப் பேசி
அவர்களை
பெரிதும் நேசிக்கும்
ஒரு நல்லவன் போல் காட்டி
'நோபிள்' பரிசு பெறத் துடிக்கிறாய்!

உன் சொந்தச்-சோதரர்கள்
துன்பம் காண்கில்லாய்!

உனது
இந்த நடிப்பையும் துடிப்பையும் கண்டு
உன் இனமும்
குடும்பமும்
உன் தாய்மொழி பேசும்
நல்லோர் உலகும்
உள்ளுக்குள்
எள்ளிச் சிரிப்பதை
உன் அறியாமை உள்ளம்
ஒருபோதும்
அறியாதோ நண்பனே ?


- மோகன் பால்கி