Translate this blog to any language

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

காலக் கடற்கரை..புதுப் புது சாமியார்கள் !

                                          Just wigs and hair pieces 
நேற்று முன் தினம் ஒருவர் எனது பக்கத்து அலுவலகத்தில் ( நண்பர்கள் திரு. மீனாக்ஷி சுந்தரம் & திரு. நம்பி ) உள்ள ஒரு வழக்குரைஞரைப் பார்க்க வந்திருந்தார். அப்படியே எனது "யோ-ஜென்" மனோ தத்துவ மையத்தைப் (YozenMind Psychology & Counseling Centre) பார்த்து விட்டு என்னிடம் பேச முற்பட்டார்.

அவருடைய கையில் சமீபத்தில் பிரபலம் அடைந்த ஒரு சிறு வயது சாமியாரின் புத்தகம் கையில் இருந்தது. எனது மனோ தத்துவ வழி முறைகள் மற்றும் குணப்படுத்தப் படும் உளவியல் பிரச்சினைகள் பற்றி மேம்போக்காக கேட்டு விட்டு அதன் பின் அந்த சாமியாரின் புத்தகத்தை என்னிடம் காட்டி இவரை பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா, பார்த்து இருக்கிறீர்களா என்றெல்லாம் ஆர்வத்துடன் ஒரு "கிறிஸ்துவ மிசனரியைப்" (Christian Missionary) போல பேச ஆரம்பித்து விட்டார். எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்று மென்மையாக மறுத்தேன். "என்னங்க! பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் அவருக்கு சீடர் ஆகி வராங்க. நீங்க என்னமோ! உங்களுக்குத் தெரியுமா, பிரபல எழுத்தாளர் CN இப்ப அவரை எத்துகிட்டார். அவரே யாரையும் நம்பமாட்டார். அவரைப் பாத்தே எவ்வளவோ பேரு சேந்து இருக்காங்க. இன்னும் எவ்வளவோ நடிகர் நடிகைகள், பிரபலங்கள் சேந்துகிட்டே இருக்காங்க! நீங்க ஒரு தரம் அங்க வாங்க சார்!" என்று வலுக் கட்டாயம் செய்தார்.

விட்டால் என்னைக் கைப் பிடித்து உடனே கொண்டு போய் அங்கு அந்த சாமியாரிடம் ஒப்படைத்து விட்டு தான் மறு வேலை பார்ப்பார் போலிருந்தது. நான் எப்படியோ எனது சக்தியை வீண் விவாதத்தில் (Argument) விரயம் செய்யாமலும், அதே சமயம் அவரது மனதை, மற்றும் நம்பிக்கையை கேலி செய்யாமலும் ஒருவாறாக பேசிக் கொண்டிருக்கும் போதே பக்கத்து அலுவலக நண்பர் வழக்குரைஞர் திரு.நம்பி வந்து என்னைக் காப்பாற்றினார் எனலாம். (பழைய பகுத்தறிவு இயக்க பாலுவாக இருந்தால் இது போன்ற வாதப் பிரதி வாதங்கள் எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி! பத்து பேர் சுற்றி நின்று வாள் வீசினாலும் தூசு எனக்கு அது! அது ஒரு காலம்! இப்போதெல்லாம் மவுனம் பிடித்திருக்கிறது. சும்மா இருக்கப் பிடிக்கிறது! பேச்சு-வெறும் பேச்சு என்றே படுகிறது; அது எவ்வளவு சிறந்த நல்ல பேச்சென்றாலும். எனவே அதை தவிர்க்கவே விரும்புகிறது மனம் !)

பல சமயம் இப்படித்தான் ஆகி விடுகிறது.
என்ன செய்வது என்று தெரியாமல் சிலரிடம் மாட்டிக் கொண்டு இப்படி முழிக்க வேண்டியதாகி விடுகிறது. பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும்.
இப்படி "மந்திரித்து விட்ட கோழி" மாதிரி சிலர்-பலர் இந்த சாமியார்களிடம் ஈர்ப்புடன் இருப்பதற்கும், தெருவில் நின்று ஆள் பிடிக்காத குறையாய் மாய்ந்து மாய்ந்து அப்படி புகழ் பாடுவதற்கும் என்ன காரணம்?

அதாவது அதற்க்கான மனோதத்துவ காரணம் (Psychological Reason) என்ன என்று, எனக்கு தெளிவாக தெரியும். ஆனால் அதைச் சொன்னால் தெளிவாக எல்லோர்க்கும் புரியும் என்று நான் நம்பவில்லை. ஏன் என்றால், நூற்றுக்கு தொண்ணுற்றி ஒன்பது பேர் இப்படிதான் ஏதோ ஒரு தலைமை, ஏதோ ஒரு புத்தகம் அல்லது தத்துவத்துக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். நானும் அப்படி ஒரு காலத்தில் இருந்தவன் தானே! தலைவர்கள்-சாமியார்கள் என்று! அதன் பின் ரொம்ப கஷ்டப்பட்டு அந்த "வசிய" (Mesmerized World) உலகங்களில் இருந்து விடுபட்டு சுதந்திரக் காற்றை இன்று சுவாசித்துக் கொண்டு இருக்கிறேன். இப்போதிருக்கும் நிலை எந்த புத்தர் வந்து எதிரில் நின்றாலும் ஆச்சர்யப்படுகிற அல்லது பூமியில் இருந்து ஆகாயத்துக்கு நான் எம்பிக் குதிக்கிற நிலை அல்ல என்பது மட்டும் எனக்கு தெரிகிறது.

அது சரி! மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்க்க நம்மால் ஏன் முடிவதில்லை!
குறைந்தது அவர்கள் சராசரிக்கு பத்து இருபது சதவிகிதம் மேற்பட்டவர்கள் என்பதாக மட்டும் நம்மால் ஏன் கருத முடிவதில்லை?

மாறாக அவர்களை ஒரு தேவ தூதர்கள் அல்லது இறைவனின் அவதாரம் போன்று எது நினைக்க வைக்கிறது?

1. அவர்கள் புத்தகங்கள் பலவும் படித்து நன்றாக (Articulation) பேசுகிறார்கள்.
2. நிறைய "அரைத்த மாவுக்" கதைகள் சொல்கிறார்கள்.
3. தேர்ந்தெடுத்த நடை உடை பாவனைகள் கொண்டு வித்தியாசமான உடைகள் அணிந்து ஒரு சராசரிக்கு மேற்பட்டவர்கள் போன்ற தோற்றத்தை வலிந்து ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
4. இவ்வுலக பிரச்சினைகள் மற்றும் "அவ்வுலக பேறு" பற்றி அரை குறையாக பேசுகிறார்கள்.
5. எல்லாவற்றிற்கும் ஒரு "சர்வ ரோக வலி நிவாரணி" மாதிரி ஒரு சில
மந்திரங்களை, வார்த்தைகளை, வசனங்களை கை வசம்
வைத்திருக்கிறார்கள். அவை வேலை செய்யும் என்பது மக்களின் நம்பிக்கை.
6. பெருங்கூட்டம் கூடுகிறது-எனவே அங்கு உண்மை இருக்கவீண்டும் என்ற தவறான கருத்து மக்களிடம் மலிந்து கிடக்கிறது.

ஆனால், ஒன்றை மட்டும் எல்லா மனிதர்களும் வசதியாக மறந்து விடுகிறார்கள்.
இதே போன்று நிறைய ஊர்களில் நிறைய நாடுகளில், நிறைய சாமியார்களுக்கும், மத போதகர்களுக்கும், இவ்வாறு பெரும் கூட்டம் கூடுகிறது. அவர்களும் மற்ற அமைப்புகளை நேரடியாக அல்லது மறை முகமாக கேலி கிண்டல் செய்கிறார்களே சண்டைகள் வருகிறதே-அப்படியாயின் அதில் எது உண்மையான அமைப்பு? உலகில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு சாஸ்வதமான மத அமைப்பு உண்டா?

என்னிடம் உள்ளதே உண்மையான கோஹினூர் வைரம் என்று ஒவ்வொரு வியாபாரியும் சொன்னால் பிறகு எது தான் உன்மை கோஹினூர் வைரம் சொல்லுங்கள் ?

அது சரி! வியாபாரியாவது தன் பொருளை போற்றி புகழ்ந்து விற்பனை செய்வது நியாயம் என்று கொள்வோம். ஆனால், "இறைமை" பற்றி பேசுகிற ஒரு அமைப்பு, அதன் அங்கங்களான பிற மனிதர்கள், ஏன் ஆள் பிடிக்க அப்படி அலையோ அலை என்று அலைகிறார்கள்?

அதன் காரணம், இதில் ஏதோ ஒன்றாக இருக்கலாம்!

1. தன்னைச் சார்ந்தவர்களையும் தான் சேர்ந்திருக்கும் ஒரு அமைப்பில் இணைத்துவிட்டால் தன்னைப் பிறகு அவர்கள் கின்டல்கேலி செய்ய மாட்டார்கள் ; தனது 'தன்முனைப்பும்' கெடாது என்ற எண்ணமாய் இருக்கலாம்.
2. பொருள் வரவு அல்லது ஆள் சேர்த்ததால் அந்த அமைப்பில் கிடைக்கும் புகழ் வரவு காரணமாய் இருக்கலாம்.

இதைத் தவிர நான் கேட்கும் கேள்வி என்னவென்றால்,
மேற்படி ஏதோ ஒரு தெய்வீக அமைப்பில் சேர்ந்ததால் மட்டுமே ஒரு மனிதர் 150 வருடம் நோய் இன்றியும் நிம்மதியாகவும் வாழ்ந்தார். அவரது சாமியாரும் அதே போல 200 வருடங்கள் நரை, திரை, பிணி, மூப்பு இன்றி வாழ்ந்தார் என்ற செய்தி இது வரை உலகில் காணக் கிடைக்கவில்லை. மாறாக, யாரோ ஒரு முனிவர்.....எங்கேயோ.... எப்போதோ....பல நூறு வருடங்களுக்கு முன்பு...வாழ்ந்தார் என்று கடந்த காலங்களை சொல்லியே நமக்கு "காது குத்துவதை" நாம் தான் அடிக்கடி பார்க்கிறோமே!

(உம்! இலட்சக் கணக்கான சாமியார்கள்..கோடிக் கணக்காக நீண்ட அந்த கடந்த காலம்! இன்னும் வர இருக்கும் பல கோடி சாமியார்கள்- மற்றும் அவர்களின் புகழ் பாடிகள்! நினைத்துப் பார்க்கிறேன்!)

நிகழ் காலத்தில் மேற்படி சாமியார்கள் ஏன் அங்ஙனம் தெய்வீக செயல்கள் புரிவதில்லை-அதாவது செத்தவர்களை எழுப்புவது, வானில் பறப்பது, கூடு விட்டு கூடு பாய்வது....இத்யாதி என்று எவரும் எந்த சாமியாரையும் பார்த்து கேள்வி கேட்பதில்லை! ( ஆனால் மேற்படி வாழ்கிற இன்றைய சாமியார்கள் பற்றிய, அவர்களது பிற்கால சரித்திரத்தில், செத்தவர்களை அவர்கள் எழுப்பியதாகவும், வானத்தில் அவர்கள் பறந்ததாகவும் கதைகள் எழுதி-பிற்கால மக்களால் அது இக்காலம் போலவே நம்பப்படும்!)

இதெல்லாம் நான் எத்தனைதான் விவரமாக உங்களிடம் சொன்னாலும் உங்களின் "வசிய" மனம், எதையாவது நம்பச் சொல்லி உங்களை நிர்பந்திக்கும் என்றும் எனக்குத் தெரியும்.

ஒன்று
, சாமியார்கள் வாய்ப்பேச்சை நம்புவது, அல்லது 
"கடவுள்
இல்லை" என்று  சொல்லுபவர்கள் வாதத்தை அப்படியே நம்புவது,
அல்லது சுயமுன்னேற்ற (Self Development Bookish Knowledge Orators) கதைகளைப்  பேசும் 'வசீகர வாய்ப் பேச்சாளர்களை' நம்புவது...
என்று
எதையாவது நம்ப வேண்டும் உங்களுக்கு!
ஆராய்கிற
மனம் உங்களிடம் அடியோடு கிடையாது!
உண்மையை கண்டு கொள்ளும் சக்தியும் உங்களிடம் அறவே இல்லை!

ஆராய பயம் என்று கூட நான் சொல்ல மாட்டேன்!

இறந்து போன உங்கள் அன்பு பாட்டியை ( நான் 'அப' வார்த்தை சொல்ல விரும்பாமல் பாட்டியோடு விட்டு விட்டேன்) ஒரு சாமியார் எழுப்ப முடியும் என்ற நம்பிக்கையை நீங்கள் கெடுத்துக் கொள்ள விரும்புவீர்களா என்ன ?
மேலும், உங்கள் வாழ்க்கையை ஒரு சின்ன மந்திரம், "குண்டலினி சக்தி" நல்ல படியாக மாற்றி விடும் என்ற நம்பிக்கையை விட்டு விட உங்கள் மனம் இடம் தருமா?
நீங்கள் நல்லவர் என்றும், உங்களுக்காக அவ்வுலகத்தில் ஒரு இருக்கை காத்திருக்கிறது என்று உங்கள் சாமியார் சொல்வதை நம்புவது உங்களுக்கு கசப்பாகவா இருக்கும்?

உங்கள் நம்பிக்கையை, உங்களின் எதிர் பார்ப்பை போட்டு வைத்திருக்கும் கல்லாப்பெட்டி அல்லவா உங்களின் சாமியார் மற்றும் அதன் அமைப்பு சார் பொருள்கள்/மத-அரசியல் மற்றும் சுயமுன்னேற்ற உள-வசிய சிந்தனைகளை சுமந்த சொற்கள்
அட! அவை யாவுமே பிறர் வாயிலிருந்து வருகின்ற நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட சொற்கள், எழுத்துகள் தாமே? 
பிறகு அந்த அலங்கரிக்கப்பட்ட சொற்கள் சுமந்து வரும் நம்பிக்கைகள் பொய் வாக்குறுதிகள், அவற்றை விட்டு விட நீங்கள் எப்படி மனம் வந்து சம்மதிப்பீர்கள்?
அதாவது 'உங்கள்' (நம்பிக்) "கையை" நீங்களே... 'உங்களது கையால்' வெட்டிவிட எப்படி 'உங்களால்' முடியும்?

அதனால் தான் இங்கே இப்பூவுலகில், போற்றி பாதுகாக்கப் படும் நிறைய பிரிவுகள் ; அதனால் ஏற்படும் மதப் பூசல்கள் அரசியல் பகை-சண்டைகள் உட்பட!
உம்! என்ன சொல்லி என்ன பயன்?
இயற்கையை நாம் நம்பாத வரை- "நடு நிலைப் பார்வை" என்ற ஒன்று
நம்மிடம் இல்லாத வரை !

சரி போகட்டும்!
எனக்கொன்றும் அதில் வருத்தம் இல்லை!
அது அப்படியே பல ஆயிரம் வருடங்கள் இருந்து தொலைத்திருக்கிறது.
மக்களிடம், முக்கியமாக படித்தவர்களிடமாவது ஒரு நல்ல
மாற்றம், தெளிவு, சிந்திக்கும் ஆற்றல் வர வேண்டும். அது வரை நிறைய போலிச் சாமியார்கள்-போலி அரசியல்
வாதிகள், சுயமுன்னேற்றப் பேச்சாளர்கள் உங்களை முன்னேற்றுகிறேன் பேர்வழி என்று வந்து கொண்டே இருப்பார்கள்!

அதாவது இந்தக் காலக்கடற்கரை யில்
அந்த நல்ல நாள் வரும் வரை
புதுப் புதுச் சாமியாரகள் / புதுப் புது போதனையாளர்கள்
புதுப் புது வேடங்களில்
வரவே செய்வர்-
நமக்குப் பிடிக்கிறது என்பதால்!

-மோகன் பால்கி

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

நீங்கள் யாராவது சிட்டுக் குருவிகளைப் பார்த்தீர்களா ? Have You seen any Sparrow?



நீங்கள் யாராவது சிட்டுக் குருவிகளைப் பார்த்தால்
எனக்கு சொல்லுங்களேன்

நமது
நவீன அறிவியல்,
முக்கியமாக செல் போன் கோபுரங்கள்
வெளியிடும் கதிர் வீச்சு,
நாம் எப்போதும் பார்த்து ரசிக்கும்
அந்தச் சின்னஞ் சிறு குருவிகளைக்
அடியோடு நிர்மூலம் செய்து விட்டதாக தகவல்!

இன்னும் நிறைய பறவை இனங்கள் அழிந்து
விட்டதாகவும் மேலும் மேலும் பல சிறு பறவை இனங்கள் அழிந்து
வருவதாகவும் பறவை ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.

மனிதன் மட்டுமே இங்கு வாழ வேண்டும் என்ற குருரம்!

அடுத்து
, இயற்கை மனிதனுக்கு வேட்டு வைக்கும் நாள்
வெகு தொலைவில் இல்லை!

-மோகன் பால்கி

_______________________________________________________________________________
சிட்டுக் குருவிகள் பற்றி மேலும் சில செய்திகள்!

               நம் நாட்டில் மொத்தம் 8 வகையான குருவிகள் காணப்படுகின்றன.​ நம் நாட்டைப் பொருத்தவரை குருவிகளை நாம் எல்லா காலகட்டங்களிலும் நேசித்து வந்துள்ளோம்.​ சாப்பாட்டிற்கு வழியில்லாத காலத்தில் கூட மனைவி அடுத்த வீட்டில் இருந்து வாங்கி வந்த அரிசியை குருவிகளுக்குப் போட்டு அதன் அழகில் மயங்கினான் பாரதி.​ இப்படி நம்முடன் பின்னிப் பிணைந்த குருவிகள் நம்மை விட்டு வெகு தூரம் சென்றுவிட்டன.​ நகரப்பகுதிகளில் சிட்டுக் குருவிகளைப் பார்ப்பது அரிதிலும் அரிதாகி விட்டது.

            சிட்டுக் குருவிகளைப் போன்றே மற்றொரு குருவி வகையான முனியா குருவிகளும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.​ காரணம் இவற்றைப் பிடித்து சாயம் அடித்து விற்பது அதிகரித்து வருகிறது.​ முனியா குருவி தமிழகத்தில் நெல் குருவி,​​ அல்லது தினைக்குருவி என்று அழைக்கப்படுகிறது.​ இதற்கு "சில்லை' என்ற பெயரும் உள்ளதாக,​​ பறவை ஆர்வலர் சலீம்அலி தனது பறவை உலகம் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

                     வடஇந்தியர்கள் இந்த வகை பெண் குருவிகளை பிரியமாக முனியா என்றும் புத்ரிகா என்றும் அழைக்கின்றனர்.​ இதற்கு மகளே என்று அர்த்தம்.​ ஆண் குருவிகளை லால் என அழைக்கின்றனர்.​ ​ எம்.ஏ.பாஷா என்ற தமிழ்நாட்டு வன உயரதிகாரி,​​ அவரது பறவைப் பட்டியலில் தோட்டக்காரன்,​​ ராட்டினம்,​​ வயலாட்டா,​​ இப்படியாக பல பெயர்களில் இப்பறவை அழைக்கப்படுவதாக குறிப்பிடுகிறார்.நம் நாட்டில் 8 வகையான முனியாக்கள் உள்ளன.​ அவை ரெட் முனியா,​​ வைட் துரோடட் முனியா,​​ வைட் ரம்ப்டு முனியா,​​ பிளாக் திரோடட் முனியா,​​ பிளாக் ஹெடட் முனியா,​​ ஸ்பாட்டட் முனியா,​​ கிரீன் முனியா,​​ ஜாவன் முனியா.இவற்றில் கிரீன் முனியா இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது.​ ஜாவன் முனியா வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு,​​ காடுகளில் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.​ நாட்டின் பல பகுதிகளுக்குப் பறந்து திரிந்து அதுவே தன் இனத்தைப் பெருக்கியுள்ளது.இருப்பிடம்:​ உயரமான புல்வெளிகள்,​​ தானியம் முற்றிய விளைநிலங்களிலும் கூட்டமாக இவை காணப்படும்.​ 

                சில சமயங்களில் 200-க்கும் மேற்பட்ட பறவைகள் ஒன்றாகக் காணப்படும்.​ அச்சுத்துறுத்தல் ஏற்படும் சூழலில் ஒன்றாக வானில் கூட்டமாகப் பறக்கும்.​ சொல்லிவைத்தாற்போல ஒரு கூட்டத்தில் உள்ள அனைத்துப் பறவைகளும் ஒரே சமயத்தில் மேலே செல்லும்;​ திடீரென கீழ் நோக்கி வரும்;​ பக்கவாட்டில் திரும்பும்.​ ​உணவு:​​ சிறிய தானியங்களைக்கூட பொறுக்கி உண்ண இதன் அலகு ஏதுவாக அமைந்துள்ளது.​ தானியங்களை மட்டுமன்றி,​​ சில சமயம் பூக்களில் உள்ள தேன்,​​ சிறிய ஈசல் போன்ற சிறு பூச்சிகளையும் உண்ணும்.வாழ்விடம்:​ ஆணும் பெண்ணும் சேர்ந்து கூடுகட்டி அடைகாக்கும்.​ நீள்வடிவில் பை போன்ற அமைப்பில் காய்ந்த புல்லை வைத்து வெளிப்புறக் கூட்டை கட்டும்.​ மென்மையான புல்லை வைத்து உள்பகுதியை கட்டுகிறது.​ சில முனியாக்கள் கூட்டை மேலும் மென்மைப்படுத்த,​​ பஞ்சு,​​ மலர்கள் மற்றும் இறகுகளை கூட்டிற்குள் வைத்துக்கொள்ளும்.​ ​பிளாக் திரோடட் முனியா,​​ வேளாண் பூமிக்கு அருகில் உள்ள விவசாயிகளின் வீட்டுச் சுவற்றில் உள்ள சிறு ஓட்டை மற்றும் மரப்பொந்துகளில் முட்டைகளை வைக்கிறது.​ ​வைட் துரோடட் முனியா,​​ தூக்கணாங் குருவிகள் விட்டுச்சென்ற கூடுகளை ​ முட்டையிடப் பயன்படுத்துகின்றன.​ ஸ்பாட்டட் முனியா,​​ முட்புதர் மற்றும் சிறிய மலர்பூக்கும் மரங்களில் கூடுகட்டி முட்டையிடுகின்றன.​ 4 முதல் 8 முட்டைகள் வரை இடும்.​ முனியாவின் வகைகளுக்கேற்ப இவற்றின் எண்ணிக்கை மாறும்.​ ​

                        ஒரு இடத்தில் உள்ள தானிய விதைகள் மற்றும் புல் விதைகள் மற்றொரு இடத்தில் விழுந்து முளைக்கவும்,​​ விதைப்பரவலுக்கு முனியா குருவிகள் உதவுகின்றன.​ மேலும் பூக்களில் தேன் உண்ணும் போது அயல்மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது.​ ​அழிவின் காரணங்கள்:​ நகரமயமாக்கல்,​​ நம் வாழ்வியல் முறை மாற்றம்,​​ விளை நிலங்கள் கட்டடங்களாக மாறுவது.​ மேலும் முனியாக்கள் செல்லப் பறவையாக வளர்க்க பிடிக்கப்படுவது போன்ற காரணங்களால் முனியாக்கள் குறைந்து வருகின்றன.​ இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்படி இந்தப் பறவையை பிடிப்பதோ,​​ வளர்ப்பதோ,​​ கொல்வதோ தண்டனைக்குரிய குற்றம்.​ ​காணப்படும் இடங்கள்:​ ரெட் முனியா,​​ இமயம் முதல் குமரி வரை காணப்படுகிறது.​ கிரீன் முனியா,​​ தமிழ்நாட்டில் காணப்படுவதில்லை.​ வைட் துரோடட் முனியா,​​ இமயமலைச் சாரலிலும்,​​ இலங்கை,​​ பாகிஸ்தானில் வறண்ட பகுதியிலும் காணப்படுகின்றன.வைட் ரம்ப்டு முனியா,​​ இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறன.​ ​பிளாக் துரோடட் முனியா,​​ மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது.​ ஸ்பாட்டட் முனியா,​​ ராஜஸ்தான்,​​ பஞ்சாப்பை தவிர அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகிறது.​ பிளாக் ஹெட்டட் முனியா,​​ இந்தியா முழுவதும் காணப்படுகிறது!
தகவல்: http://www.dinamani.com/edition 

திங்கள், 8 பிப்ரவரி, 2010

BT கத்திரிக்காயின் வண்டவாளம்!


பெங்களூருவில் நேற்று நம் சுற்று சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் மரபணு மாற்றம் செய்யப்பட்ட Bt (Bacillus Thuringenesis) கத்திரிக்காய் பற்றிய கருத்தரங்கில் ரொம்பதான் கோபப் பட்டாராம். அதாவது BT கத்திரிக்காய் எதிர்ப்பாளர்களை மனநலம் இல்லாதவர்கள் என்று தாக்கும் அளவுக்கு அவர் ரொம்பவே உணர்ச்சி வசப் பட்டு பேசியிருக்கிறார்.

இந்தியாவில் அனைத்து விவசாய அமைப்புகளும், சமுக ஆர்வலர்களும் , மற்றும் பல்வேறு விஞ்ஞானிகளும் BT கத்திரிக்காய்க்கு பெரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் . மேலும் மேற்கு வங்கம், பீகார், ஒரிசா கேரளா கர்நாடகா, மத்ய பிரதேஷ் போன்ற மாநிலங்கள் அதற்க்கு அனுமதி மறுத்துள்ளன. இந்நிலையில் அமைச்சருக்கு மட்டும் ஏன் இந்த பதைப்பு- ஆத்திரம் என்று விஷயம் தெரிந்தவர்களுக்கு தெளிவாகவே புரிந்திருக்கும்.

என்ன செய்வது ? அதிகாரம் படுத்தும் பாடு என்பதோடு காலகாலமாக மண்ணில் உழுது பாடுபடும் விவசாயிகளுக்கு ஆங்கிலம் பேசும் முழுக் கால் சட்டை அமைச்சர்கள் ..விரல் நுனியில் மண்ணு படாமல் விவசாயம் சொல்லிக்கொடுக்கிற காலமாகப் போய்விட்டது! எல்லாம் கலியின் கொடுமை!
BT கத்திரிக்காயின் வண்டவாளத்தை நீங்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்:

" Bt Brinjal is being developed in India by M/s Mahyco [Maharashtra Hybrid Seeds Company]. Now, the company wants to take up large scale field trials with the permission of the GEAC in 2006-07.......
http://www.csa-india.org/downloads/GE/bt_brinjal_briefing_paper.படப்
http://business.rediff.com/interview/2010/feb/08/inter-introducing-bt-brinjal-in-india-will-be-disastrous.ஹதம்

-மோகன் பால்கி

வியாழன், 21 ஜனவரி, 2010

Be ready to Transform my Friends! மாற்றத்துக்கு நாம் தயார் ஆவோம் நண்பர்களே!

BSNL-Broad Band அய்யோ வேண்டவே வேண்டாம்!
போதுண்டா சாமி!

நாமும் Air Tel, Reliance, Tata என்று மூன்று Service Provider-களை மாற்றி
நம்ம அரசு நடத்தும் BSNL நல்லா இருக்கும்னு எல்லாரும் சொல்றதை நம்ம்பி.....
ஆறு மாசமா படற பாடு கொஞ்சம் நஞ்சம் இல்ல!

எப்பவும்
1. No connectivity.
2. Disturbed Connection.
3. No Phone connection-No dial tone in the phone.
4. No speed...that is less than 50 Kbps (they boast uppp...to 10 Mbps speed)
5. No service...No one will pick your complaint phone.

கடந்த ரெண்டு நாளா நானும் விடாம காலை மதியம் இரவு என்று, இவங்க இலட்சணம் தெரியட்டும்னு, அவங்க சொல்லியிருக்குற, அதாவது Telephone-பில்லில் போட்டு இருக்கிற மற்றும் எனக்கு சொல்லப்பட்ட எல்லா நம்பர்களுக்கும் போன் போட்டு வெறுத்துப் போனதுதான் மிச்சம். Grievances complaints GM (Central) GM(North) GM(South) GM(West) GM(O,BD & BB) இந்த மாதிரி 15 விதமான நம்பர். எல்லாம் ரிங் ஆவுது. ஆனா ஒருத்தர் போனை எடுக்கனுமே? இதையெல்லாம் monitor பண்ண இந்தியாவுல யார் இருக்காங்க சொல்லுங்க.
அதனால நான் என்ன முடிவுக்கு வந்தேன் என்றால்... அரசு நடத்தும் எல்லாம் இப்படித்தான் இருக்கும். ஏன் என்றால் அரசு ஊழியர்களுக்கு கொஞ்சம் கூட பதவி பறிப்பு பயமோ, தண்டனை பற்றிய அச்சமோ கிடையாது.
(There is no Reward and Punishment System)

மேலும் எந்த அரசும் ஒரு தனியார் நிறுவன முதலாளியைப் போல "உன்னால் எனக்கு என்ன லாபம்" என்று தொழிலாளியை பார்த்து எந்த விதமான கேள்வியும் கேட்பதில்லை. Customer Care Unit - என்ற ஒரு விஷயமும் அங்கு இல்லவே இல்லையே! எனவே அரசுத் தொழிலாளிகள் பெரும்பாலும் எந்தக் கேள்வி முறைகளும் இன்றி பாதி நாள் கூட ஒழுங்காக வேலை பார்க்காமல் பொது மக்களுக்கு துன்பம் விளைவித்து வருவது கண்கூடு. (சில அரசுத் துறைகள் சில நல்ல மனிதர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு)
எனவே நண்பர்களே!
தயவு செய்து BSNL பக்கம் தலை காட்டாதீர்கள்!
முடிந்தால் மாற்றிவிடுங்கள்!
நானும் மாற்றப் போகிறேன்!
எப்படியோ இந்த அரசுத் துறைகள் நாசமாக போகட்டும்!
இது எல்லாம் அழகாக மாறும், சிறப்பாக செயல் படும் என்ற நம்பிக்கை எனை விட்டுப் போய்விட்டது.
நீங்களும் பாருங்களேன்!

அரசு பேருந்துகள் - தனியார் பேருந்துகள்..
அரசு கட்டிடங்கள் - தனியார் கட்டிடங்கள்..
அரசின் சாலைகள் - தனியார் சாலைகள் ..
அரசுப் பணியாளர்கள் - தனியார் நிறுவன பணியாளர்கள்..
நீங்களே ஒப்பிட்டு பாருங்கள்.

இன்னும்,
சிதைந்து அழுக்கடைந்து துர் நாற்றம் அடிக்கும் நமது அரசாங்க ரயில்கள் உலகப் பிரசித்தம்!
எனவே, மாற்றத்துக்கு நாம் தயார் ஆவோம் நண்பர்களே!

-மோகன் பால்கி

வெள்ளி, 1 ஜனவரி, 2010

2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புத்தாண்டு பிறந்து விட்டது நண்பர்களே !
எப்போதும் போல இந்த 2010 ஆம் ஆண்டு நமக்கு நன்மைகள் பலவும் கொண்டு வரும் என்று நன்றாக நம்புவோம். என்ன செய்வது நம்பிக்கை தானே வாழ்க்கை. 2009 ஆம் ஆனது நமக்கு பல சோகங்களை கொணர்ந்து தந்து விட்டு சென்று உள்ளது. ஆறாத ரணங்களையும் வரலாற்றில் அவப்பெயரையும் தான். ஆம் ! என்னதான் போராடினாலும் சில சமயம் உண்மை தற்காலிகமாக தோற்று அதர்மம் ஜெயித்து விடுகிறதே. அதைதான் விதி என்றார்களோ?
ஈழத் தமிழர்களின் முடிவற்ற துன்பம், முத்துக் குமாரின் தியாகம் வீண் போனது, இந்திய இலங்கை அரசுகளின் துரொகம் மத்திய மாநில அரசுகளின் நாடகம், இன்னும் உலக நாடுகளின் பாரபட்ச-பாராமுகம் போன்ற அதிர்ச்சியான காட்சிகள் கண்டேன். எனினும் உலகம் தன்னை தொடர்ந்து செப்பனிட்டே வந்துள்ளது உண்மை. எனவே, நம்புவோம்! கதி இழந்த நல்லவர்களுக்கு நன்மைகள் வந்து சேரும் என்றும் "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் பின்னொரு நாள் தர்மம் வெல்லும்" என்றும்!
சரி! நீங்கள், உங்கள் குடும்பம், தெரு, ஊர் யாவும் நன்றாக இருக்க வாழ்த்துக்கள்!
-மோகன் பால்கி

வெள்ளி, 17 ஜூலை, 2009

தமிழின் சிறப்பு இயல்புகள் !



நண்பர்களே!
நான் ஏதோ ஒரு செய்திக்காக விக்கி பீடியாவை பார்க்க நேர்ந்த போது

தமிழ் பற்றி
நிறைய செய்திகள் இருந்தது. நீங்களும் பாருங்களேன். உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்!




http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D#.E0.AE.A4.E0.AE.AE.E0.AE.BF.E0.AE.B4.E0.AF.8D_.E0.AE.AA.E0.AE.B1.E0.AF.8D.E0.AE.B1.E0.AE.BF.E0.AE.AF_.E0.AE.A8.E0.AF.82.E0.AE.B2.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D

அன்புடன்
மோகன் பாலு.
சென்னை.

திங்கள், 13 ஜூலை, 2009

எனது மூத்த மகள் வேலன்டினாவின் திருமணம்


எனது மூத்த மகள் வேலன்டினாவின் திருமணம் 9.07.2009 வியாழன் அன்று காலை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள "மகேஷ் மஹால்" திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடை பெற்றது.

முன்தினம் புதன் கிழமை 8.07.2009 அன்று மாலை வரவேற்பு விழாவின் போது எடுத்த மணமக்களின் ஒளிப்படத்தை இத்துடன் தற்சமயம் இணைத்துள்ளேன். பிறகு மேலும் படங்களை இங்கு சேர்ப்பேன்.
உங்கள் நல்வாழ்த்துக்களை மானசீகமாக இங்கிருந்தே அனுப்பி வையுங்கள்!

மணமகள்: M.B.Valentina
மணமகன்: D.Vijay