Sunday, February 6, 2011

To Expel Falsity Do You Have that Guts? பொய்யை உதறித் தள்ளும் பெருந்துணிவு உங்களிடம் உள்ளதா?

"உண்மையை" (Truth) விரும்ப அதிக தைரியம் தேவை! பொய் கவிதைக்குத் தேவைப் படலாம்; வாழ்க்கையின் மகத்தான தேடல்களில் பொய்யின் தோழமை எதற்கு?


இறை நம்பிக்கை, ஆன்மிக தேடல்கள் என்று வரும் போது ஒரு இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி என்று ஒருவரையும் இன்று பார்க்க இயலவில்லை! (நாத்திகம் என்று வருகையில் அவர்களை விட பெருஞ்செல்வம், சமூகப் புரட்சியாளர் நம் பெரியார் ஈவேரா அவர்கள்!)

எனக்கு ஒரு சில உண்மைகள் பற்றி விலாவரியாகச் சொல்ல வேண்டும்

என்று தோன்றுகிறது. அதாவது இன்றைய மக்களின் மனோ பாவம் பற்றியும், அது கண்டு நான் அடைகிற ஆச்சர்யம் பற்றியும்! ஆனால் நிறைய எழுதினால் யாரும் படிப்பதில்லை-நேரமும் இல்லை- எனவே சுருக்கிவிட்டேன்!

ஒரு முடிபு என்னவென்றால், தனியொரு மனிதன் ஒரு கூட்டத்தோடு இணைந்து ஒரு சில பழக்க வழக்கங்களில் ஊறித் திளைத்ததற்க்குப் பிறகு அவனால் அதில் இருந்து வெளியேற ஒரு போதும் இயலாது என்று தெரிகிறது!


நல்ல பழக்கமோ அல்லது கெட்ட பழக்கமோ, மனிதன் என்பவன் பழக்கத்துக்கு அடிமை. அவ்வளவுதான்! பழக்கத்துக்கு அடிமையான ஒரு மனிதன், தனது அடிமைத் தனத்துக்கு ஏதோ ஒரு மேன்மையான காரணம் கற்பிப்பான். அதற்கொரு மெய்ஞான, விஞ்ஞான விளக்கம் சொல்வான். அறிவு கொண்டு ஆராய்ந்து தீதான ஒரு பழக்கத்தில் இருந்து விடுபடவே மாட்டான்!

இந்த விஷயத்தில் அவனது நிலை ஒரு குடிகாரனின் நிலையை விட மோசமானது ஆகும். மதம். அரசியல் என்னும் போதைப் பழக்கத்துக்கு அடிமை ஆனவர்கள் கதை அப்படித்தான்! குடிகாரனாவது அதில் இருந்து விடு பட வழி உள்ளது. இவர்களுக்கோ அது போன்ற வழிகள் முற்றிலும் கிடையா!

தாம் ஏற்றுக் கொண்ட ஒரு மதத் தலைவனை/அரசியல் தலைவனை உலகம் தவறு காணும் போதும் அது நிரூபணம் செய்யப்படும் போதும் 'அந்தப் படகில் ஓட்டை விழுந்துவிட்டது' என்று தப்பித்துக் கொள்பவர்கள் எவருமிலர்!


அதற்கு பல சம்பவங்களை நான் சொல்ல இயலும் என்றாலும் தற்போதைய இரு சம்பவங்களை நினைவு படுத்த விரும்புகிறேன்!

1 நித்யானந்தா எனும் சாமியாரின் போலி சந்நியாசம்.

2 சபரிமலை- 'மகர ஜோதி' என்னும் போலியான தீவட்டி வெளிச்சம்.

மேற்கண்ட இரு சம்பவங்களிலும் தாம் ஏமாற்றப் பட்டதை எண்ணி கோபப் பட வேண்டிய பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் அமைதியாக இருந்தனர் என்பது மட்டும் அல்ல, நடுநிலையாளர்கள் அதிர்ச்சியடையும் வண்ணம், அந்தப் போலித் தனத்தை தோலுரித்துக் காட்டிய ஊடகங்கள் மீதே கோபப் பட்டனர்!

இந்தக் கட்டுரை நித்யாநந்தன் - அல்லது மகர ஜோதியின்

உண்மை/பொய்மை தன்மை பற்றி ஆராய வரவில்லை. அதனால் சமூகத்துக்கு ஏற்படும் சில நன்மைகள்/தீமைகள் பற்றி இங்கு அலசவும் வரவில்லை!அதற்கு வேறு ஒரு சமயம் வரும்!

இது, மக்களின் மனோ பாவம் பற்றியே ஆராய வருகிறது.

நித்யானந்தன் ஒரு இளைஞன். ஒரு இளைஞனுக்கு இருக்க வேண்டிய அனைத்து உணர்ச்சிகளும் அவனுக்கு இருக்கும்-இருக்க வேண்டும்! பசி,தாகம், நுகர்ச்சி உட்பட! அப்படி நுகர்தல் தவறில்லை! எங்கே கேள்வி எழுகிறது என்றால் இப்படி காவி உடையில் பெண் வாடை படாத "சன்யாசம்" பேசிக் கொண்டு தான் ஒரு அனைத்தையும் அடக்கிக் கொண்ட ஞானி போன்று நடித்து ஊரை ஏமாற்றி, திரைக்குப் பின்னால் ஒரு சாதாரண அபிலாட்சைகள் உள்ள சராசரி இளைஞனாக வாழ்ந்து தான் சார்ந்த மதத்தைக் கேவலப் படுத்தியது ஏன் என்று தான்!

இந்த லட்சணத்தில் "நான் ஏன் ஒரு சந்நியாசி" என்ற பேச்சுரை வேறு! அதை " you-tube" இல் போட்டு வைத்திருந்தனர். தொலைக் காட்சிகளில் நித்யா-ரஞ்சிதா லீலைகள் வெளியான ஓரிரு நாளில் அந்த உரையை அவனது பக்தர்கள் வெட்கப் பட்டு எடுத்து நீக்கி விட்டனர்!

அது போகட்டும்! இவ்வளவு அக்கப் போர்கள், அசிங்கங்கள் நிகழ்ந்து ஊரே நாறிய பின்னும் இன்னும் விடாமல் 'நித்யனுக்கு' நித்யம் காவடி தூக்கும் சில என் 'தூரமாய்த் தெரிந்தவர்களைப்' பற்றி யோசிக்கும் போதுதான் ஒன்று தோன்றுகிறது! அது முற்றிலும் உளவியல் காரணம் சார்ந்தது!

தவறென்று தெரிந்தும் 'மீள முடியாதவர்களின்' நிலைக்கு

என்ன உளவியல் காரணம்?

1 . மனிதர்களில் முக்கால்வாசிக்கும் மேலானவர்கள் ஒரு அப்பழுக்கற்ற உண்மையை நேசிப்பதை விட அதிகம் சேரும் கூட்டத்தை நேசிக்கிறார்கள். கூட்டம் சேரும் அளவுக்கு ஏற்ப அங்கு உண்மையும் இருக்கும் என்று நம்புகிறார்கள்!

2 . அங்கு தாம் ஏதோ ஒரு சமயத்தில் ஏமாற்றப்பட்டாலும் கூட, 'மீசையில் மண் ஒட்டாதது' போல் காட்டிக் கொண்டு எதுவும் நடவாதது போல் நடிக்க ஆயத்தமாய் இருக்கின்றார்கள்! (நடிப்பதில் சிவாஜி கணேசன் தோற்கவேண்டும் போங்கள்!)

3 . ஏனென்றால் இவர்கள் போய் வலியச் சென்று, விழுந்து விழுந்து ஆள் சேர்த்த பிற 'புதிய அடிமைகள்' காறித் துப்புவார்களே என்ற அச்சம்தான்!

4 . பிறகு, இருக்கவே இருக்கிறது 'மக்களின்-மறதி-நோய்'. எத்தனையோ பெரிய பெரிய கெட்ட விஷயங்களை எல்லாம் காலம் எனும் நதி மறந்து/ மறைத்துவிட்டு இன்று எத்தனையோ 'பெருசுகள்' எல்லாம் உலகின் அரியணையில், புகழ் உச்சியில் அமரவில்லையா என்ன? அவர்களுக்கு 'நல்லவர்கள்' பலரும் நேற்றும் இன்றும் வெண்சாமரம் வீசவில்லையா என்ன?


என்னமோ போங்கள்! உண்மையை விரும்பவும், ஒன்று பொய்யென்று தெரிந்தால் பாதி வழியிலேயே பிரயாணத்தை நிறுத்திவிட்டு திரும்பி விடவும் மகத்தான தைரியம் தேவைப் படுகிறது! அந்த தைரியத்தை எல்லோரிடமும் நாம் எதிர் பார்ப்பது அறிவீனம்!

யோஜென் பால்கி

yozenbalki