குறளை பழித்தார் பெரியார் என்று யாராவது சொன்னால் இதைப் படிக்கச் சொல்லுங்கள்!
_________________________________________
"குறளும் - நானும்" : தந்தை பெரியார் பேசிய உரை இது!
வள்ளுவர் குறளையும், அந்தப்படியே, அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன்.
எல்லாவற்றையும் குறை சொல்லும்போது, பலர் என்னிடம், 'எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான், 'இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது, அதை எடுத்து விடு என்று
கூறினால் - அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது?' என்று பதில் கூறுவேன்.
ஏறக்குறைய மத சம்பந்தமான காரியங்களில் மக்களுக்கு நம்பிக்கையே இருக்கக்கூடாது என்று கருதி அந்தப்படியே பிரச்சாரம் புரிந்து வந்தேன். பிறகு நாளாக ஆக நல்ல அறிவாளிகளோடு - அறிவாளி என்றால்
பண்டிதர்களோடு அல்ல, பொது அறிவுள்ள மக்களோடு, திராவிட உணர்ச்சி மிக்கவர்களோடு - நம் உணர்ச்சியுள்ள அறிவாளிகளோடு பழகியபோது குறளின் மேன்மை பற்றி அவர்கள் எடுத்துக் கூறினார்கள்.
நான், 'இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதே, இந்த இடத்தில் இப்படியிருக்கிறதே என்று கேட்டேன். அது பரிமேலழகரின் உரை: அது குறளாசிரியர் கருத்தல்ல' என்று எடுத்துக்கூறி உண்மை உரையினைச் சொன்னார்கள். அந்தக் காலத்தில் பரிமேலழகர் உரைதான் சிறந்த உரை என்று கொண்டாடப்பட்டது. அவர் மனுதர்ம சாத்திரப்படி குறளுக்கு உரை எழுதிவிட்டார். பின்னர் வந்த அறிவாளிகள் அதைக் கண்டித்து, குறளின் உண்மைக் கருத்தை எடுத்துக் காட்டினார்கள்.
அதிலிருந்துதான் நான் குறளைப் பற்றிப் பேசுகிறேன். அதுவும் அதையே ஆதாரமாக (Authority) எடுத்துக்
கொண்டல்ல! 'நான் சொல்லுகிற கருத்து - அதிலும் இருக்கிறது பார்!" என்று கூறிவந்தேன்.
அதில் சிறிது குறை இருந்தால் இப்போதைக்கு அது இருக்கட்டும் என்று கருதினேன்.