Translate this blog to any language

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

இட ஒதுக்கீடு என்பது நீதியா அநீதியா? பொருளாதார அளவுகோல் சரியா?

💛💚❤💚💛💜❤💚💙

உலகில் வேறெங்கும் காணப்படாத ஒரு மாபெரும் அநீதி இந்தியாவில் இன்றும் உண்டு! அது என்னவென்றால் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தில் பிறப்பதனால் குத்தப்படும் "பிறப்பின் அடிப்படையிலான சாதி முத்திரையே ஆகும்!"



இந்த நாட்டில் மட்டுமே ஒருவனின் கல்விப் பெருமையினாலோ அல்லது அவனது நன்னடைத்தை பற்றியோ அன்றி, இன்ன சாதித் தந்தைக்கு பிறப்பதினாலேயே ஒரு குழந்தை பிறப்பிலேயே உயர்ந்த சாதிக் குழந்தையாக மதிக்கப்படுவது, அல்லது பிறப்பின் அடிப்படையிலேயே "தீண்டத்தகாத சாதி குழந்தையாக ஒதுக்கப்படுவது", எனும் அவலம் ஆயிரம் ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றது! 

அப்படி குழந்தை பருவத்திலேயே முக்கியமாக பள்ளிப் பருவத்தில், பிற மாணவர்களால் ஆசிரியர்களால், சாதி அடிப்படையில் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கப்பட்டவரே டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் ஆவர்!


ஆதி தமிழர்களுக்கு பிறவியின் அடிப்படையிலான சாதிமுறை இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் இல்லை! தொல்காப்பியம், திருக்குறள் போன்ற பழைய இலக்கிய நூல்கள் வழியாகவும் திராவிட சிந்து சமவெளி நாகரிகம், தமிழக கீழடி நாகரிகம் போன்ற புதைபொருள் ஆராய்ச்சியின் வழியாகவும் ஆய்வு செய்தபோது தமிழர்களின் சாதியற்ற சமுதாயம் தெரியவந்தது!


பிறவியின் அடிப்படையிலான நால் வர்ண, வர்ணாஸ்ரம சாதி முறை (சதுர் வர்ணாஸ்) ஆரியப் பார்ப்பனர்கள் வடநாட்டில் நாடோடிகளாக கைபர், போலன் கணவாய்கள் வழியாக நுழைந்த போது கடைபிடித்த முறையாகத் தெரிகின்றது! 

அந்தச் சாதி முறைகள் இந்நாட்டில் அக்காலத்தில் இருந்த 56 நாட்டு அரசர்கள் கடைபிடித்த நெறியன்று! அந்த வகைத் தீய சாதீய முறைகள் உச்சம் பெற்றது தமிழ்நாட்டில் ராஜராஜசோழன் (அவனது தமிழ்ப் பெயர் அருள்மொழி வர்மன் என்பதாகும்! அவனுக்கு பார்ப்பனர்கள் சூட்டிய சமஸ்கிருத பெயரே இராஜராஜன்!) காலத்தில் தான், என்ற கல்வெட்டுச் சான்றுகளும் நமக்குக் கிடைக்கின்றன!


சரி இப்போது கட்டுரையின் மையப் புள்ளிக்கு வருவோம்!

ஆக, இப்படிப்பட்ட பிறவி அடிப்படையில் மதிப்பிடப்படும் சமுதாயத்தில் உள்ள நலிந்த பிரிவினரின் வளர்ச்சியை அளவிடும் பொழுது அதை

1. கல்வி ரீதியாக
2. சமூக ரீதியாக 

ஒடுக்கப்பட்டவர்களா, படாதவர்களா 
என்ற இரண்டு வகையில் மட்டுமே பார்க்க வேண்டும் 

என்று, இந்திய சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசியல் அறிஞர்கள் பலரும் கூடி முடிவெடுத்து அதை சட்டமாக்கியும் வைத்துள்ளனர்! 

அதில், ஒருபோதும் பொருளாதார அளவுகோலை (Economy Scale is null and void) நுழைக்கவே கூடாது, என்றும் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளனர்!

That means, a growth of the people shall be measured by 2 scales only.
1. Education of the family
2. Social status of the family. 

இந்த இடத்தில் "பொருளாதார அளவுகோல்" (Economic Scale) என்பதை யாரும் கொண்டு வரவில்லை! ஏனென்றால் இந்த பொருளாதார அளவுகோல் என்பது நாளுக்கு நாள் கூலி என்று ஒரு கூலிக்காரனுக்கும், மாதத்துக்கு மாதம் என்று ஒரு சம்பள காரனுக்கும், வருடத்துக்கு வருடம் என்று ஒரு வியாபாரிக்கும் மாறக் கூடியது ஆகும்!

(பிறப்பின் அடிப்படையில் அமைந்த ஒருவனது குடும்பத்தின் சாதி அப்படி மாதந்தோறும் அல்லது வருடந்தோறும் மாறக்கூடியது அல்ல!)

சரி! மேற்படி அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு அந்த மனிதனைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பம் திடீரென்று கல்வி அறிவு பெற்றதாகவோ அல்லது சமூக அந்தஸ்து பெற்றதாகவோ யாரும் சொல்லிவிட முடியாது அல்லவா?


(1) கல்வி ரீதியாகவும், (2)சாதியின் பெயரைச் சொல்லி சமூக ரீதியாகவும் 
பல்லாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களை கை தூக்கி விடுவதற்காக அதே சாதியின் பெயரால் (வைரத்தை வைரத்தால் அறுப்பது போல) கொண்டுவரப்பட்ட ஒரு "சமூகப் பரிகார" முறையே இட ஒதுக்கீடு என்பது (ரிசர்வேஷன்) ஆகும்! 

இந்த திட்டம் ஒரு சமத்துவ சமுதாயம் உண்டாக்குவதற்காக, சனாதன தர்மம் என்ற போலியான "பிறவி பேதம்", சொல்லி பள்ளத்தில் அழுத்தப் பட்டு கிடக்கும் மக்களை கைதூக்கி விடுகின்ற வகையில் கொண்டு வரப்பட்டதாகும்! 

இந்த இட ஒதுக்கீட்டின் நியாயம் புரியவேண்டும் என்றால், இந்தியம் முழுவதும் இன்று வரை நலிந்த நிலையில் உள்ள தலித் மக்கள், பழங்குடியினர் போன்றோரின் கல்வி நிலையும், சமூக அந்தஸ்தும் 5% கூட மாறாமல் அப்படியே இருப்பதை மனசாட்சி உள்ளவர்கள், உணரமுடியும்! 

அதே சமயத்தில் நூற்றுக்கு 3% சதவீதம் மட்டுமே உள்ள இந்திய பார்ப்பனர்கள், இந்தியாவில் உள்ள உயர்கல்வி அமைப்புகளில், உயர் வேலைவாய்ப்புகளில் சூழ்ச்சி முறைகளில் 90% பங்கை தாங்கள் மட்டுமே அநியாயமாக அனுபவித்து வருகிறார்கள்!


அப்படிப்பட்ட உயர்பதவி அமைப்புகளில் வெறும் 10 சதவீத இடங்களை மட்டுமே பிற உயர்சாதியினரும் பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் மலை சாதியினரும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்தால் தான் இந்த இட ஒதுக்கீட்டின் நியாயம் உங்களுக்கு மிகத் தெளிவாக புரியும்! 

இட ஒதுக்கீடு முறை என்பது ஒருவன் ஏழையா பணக்காரனா என்பதற்காக கொண்டுவரப்பட்ட பிற பொருளாதார நலத்திட்டங்கள் போன்றது அல்ல!

அது, சாதியின் பெயரால் அழுத்தப்பட்ட ஒரு குடும்பத்தின் குழந்தையை அதே சாதியின் பெயரைச் சொல்லி இட ஒதுக்கீடு தந்து கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் உயர்த்தி ஒரு சமநிலை சமுதாயம் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட "சமூக சமநிலை" (Social Justice) அமைப்பாகும்"

அது ஏதோ, போகிற வழியில் 10 மாணவர்களுக்கு ஆளுக்கு தலா 100 ரூபாய் கை செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லக்கூடிய "பொருளாதார சமநிலை முறை", அல்ல!

எந்தச் சாதியின் பெயரை சொல்லி 
"நீ தொட்டால் தீட்டு! 
நீ தெருவில் நடக்காதே! 
கோயிலுக்குள் வருவதற்கு உனக்கு உரிமை இல்லை! 
நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு! 
என் வீட்டுக்கு உள்ளே வராதே! சூத்திரர்களுக்கு கல்வி கற்க உரிமை இல்லை!"


என்று இந்த இந்திய சமூகம் தடுத்து வைத்ததோ, அப்படி ஈராயிரம் ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்ட மக்களை மட்டும் கண்டறிந்து இனம் பிரித்து அவர்களது குழந்தைகளை முதல் தலைமுறையாக பொறியாளர் ஆக்குவது, மருத்துவர் ஆக்குவது, வழக்குரைஞர் ஆக்குவது என்ற முயற்சிக்கு பெயர்தான் இட ஒதுக்கீட்டு முறை ஆகும்! இது ஒரு சமூகநீதி (Social Justice) முறையாகும்!

பிற சாதாரண நோயாளிகள், நோயாளிகளின் ஆரோக்கியமான உறவினர்களை விட, அவசர  சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு முதலுரிமை அளித்து,  அவர்களைக் காப்பாற்றுகின்ற நீதியுள்ள உலகியல் முறை!

இந்த முறையானது தந்தை பெரியாரின் தீவிரப் போராட்டத்தினால், முதன்முறையாக அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய இந்திய அரசியல் சட்டமே திருத்தப்பட்டு மேற்படி இடவொதுக்கீட்டுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்!


இந்தச் சட்டம் அமுலில் இருந்தும்கூட இன்று வரை இந்திய கிராமங்களில் கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட பல கோடி குடும்பங்களும், அவர்களுக்குச் சேர வேண்டிய பங்கினை சூழ்ச்சிகள் மூலம் கொள்ளையடித்து வாழ்கின்ற பார்ப்பனர்களை பற்பல கல்வி வேலைவாய்ப்புகளில் 90% அமர்ந்திருப்பதையும் நாம் புள்ளிவிவரங்களை வைத்து நிரூபிக்க முடியும்!

நிலைமை இவ்வாறு இருக்க, திடீரென்று பாஜக அரசு, "அரிய வகை ஏழைகளுக்கு", பொருளாதார அடிப்படையில் தாழ்ந்தவர்கள் என்ற வகையில் 10% இட ஒதுக்கீடு என்று கொண்டு வந்து மிகப்பெரிய அநீதியை இழைத்திருக்கிறது! யார் அந்த அரிய வகை ஏழைகள் என்று கேட்டால், மாதம் ரூபாய் 67,000 வரை சம்பளம் வாங்கக் கூடியவர்களாம்! அதாவது வருடத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குபவன் இவர்கள் கணக்கில், பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்ட அரியவகை ஏழையாம்!

அதிலும் ஒரு சூட்சுமம் என்னவென்றால் ஏற்கனவே இருக்கிற தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, மலை சாதியினர் இட ஒதுக்கீடு இவற்றிற்குள் இந்த 10% சதவிகிதம் வராது! என்ன ஒரு அநியாயம் பாருங்கள்! இதைத்தான் அன்று பாராளுமன்றத்தில் மதிப்புக்குரிய திருமதி கனிமொழி அவர்கள் வீறு கொண்டு எதிர்த்து உடனடியாகப் பேசினார்கள்!

வடநாட்டில் நீதிக்கட்சியும் பெரியார் இயக்கமும் இல்லாத காரணத்தால் அங்குள்ள மக்களுக்கு பார்ப்பனர்கள் தங்களது நலனுக்காக கொண்டுவரும் பல விதமான மோசடியான கல்வி, வேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்த தன்னுணர்வு இன்னும் காணப்படவில்லை!


அது போக, இன்று வரை நவீன கல்வி திட்டம் (NEP2019) என்ற பெயரில் கிராமப் புற பிள்ளைகள் கொஞ்சம் கூட மேலே வராத அளவுக்கு, "மூன்றாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கே அரசாங்கத்தின் பொதுத்தேர்வு", என்று வைப்பது எதற்காக என்று விளங்குகிறதா? அவர்களை மேலே வரவே விடாமல் வடிகட்டி பழைய 'சம்பூகன்', 'ஏகலைவன்', காலம் போல சூத்திரர்களாக அடிமைகளாக இருக்க வைப்பதற்காக தான் இது, என்று தெளிய இன்னொரு பெரியார் வேண்டுமா?

பிறகு எதற்காக உலகில் வேறு எங்கும் காணப்படாத 12 வருட பள்ளிப் படிப்புக்கு பின்னாலும் அல்லது 3 முதல் 8 வருட கல்லூரிப் படிப்புக்குப் பின்னாலும் மாணவர்களை வைத்து வடிகட்டுகின்ற "நீட்" Next, பார் கவுன்சில், gate போன்ற நுழைவுத் தேர்வு முறைகளை இவர்கள் பாஜக ஆட்சியில் சர சரவென்று கொண்டு வருகிறார்கள்? 

படித்து வேலையில் அமர்ந்த பின்னும், சூத்திரர்களை வடிகட்டி வேலையை விட்டு துரத்துவதற்காக மூன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஆசிரியர்களுக்கு, மருத்துவர்களுக்கு, பொறியாளர்களுக்கு, வழக்குரைஞர்களுக்கு அடிக்கடி தேர்வு வைக்கப் போகிறார்களாம்!! இத்தகைய சூழ்ச்சி எதற்காக என்றும் நமக்குப் புரியவில்லையா?

அட! வட இந்தியாவில் தமிழகத்தை விட மிகச் சிறந்த கல்வி அறிஞர்கள், கல்வி கற்று தரும் நல்ல பல்கலைக்கழகங்கள் இருக்கின்றனவா என்ன? அவர்களுக்கு நல்ல கல்வியைப் பற்றிப் பேச ஒரு எள்முனை ஏனும் அருகதை உண்டா, சொல்லுங்கள்! 

வடநாட்டில் தேர்வு எழுதும் பொழுது பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் கும்பல் கும்பலாக கல்வி நிறுவன கட்டிடங்கள் மீதேறி 'பிட்' அடிக்கின்ற காட்சிகளை இணையத்தில் நீங்கள் தாராளமாக பார்க்கலாமே!


தமது தாய்மொழியாம் இந்தியிலேயே நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பேர் தோல்வி அடைகின்ற உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வந்து, இங்குள்ள ரயில்வே துறைகளில் (தமிழில் எழுதி?), அறிவு நிலையில் முதன்மை வகிக்கும் தமிழர்களை பின்னுக்குத்தள்ளி அவர்கள் மட்டும் வேலைக்கு சேர்கிறார்கள்!! அவர்களுக்கு அவ்வளவு அறிவாம்!!
இதை நீங்கள் நம்புகிறீர்களா?

மேலும், மனசாட்சியோடு இந்தியாவின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களை நீங்கள் பார்த்தால் நூற்றுக்கு 90% சதவீதம் கலெக்டர்கள், 90% வெளிநாட்டு தூதர்கள், 90% அமைச்சர்களின் அதிகாரிகள், 90% ராணுவ உயர் பதவி அதிகாரிகள், 90% இந்தியாவின் ஊடக முதல் ஆசிரியர்கள், 90% ஐஐடி ஐஐஎம் பேராசிரியர்கள் போன்றோரெல்லாம் பார்ப்பனர்களாக மட்டுமே இருப்பது எப்படி சமூக நீதி ஆகும்!


நூறு வித மிருகங்கள் வாழும்
ஒரு சர்க்கஸ் கூடாரத்தில், உள்ளே வைக்கிற 100 கிலோ நல்லுணவில் 90 கிலோ நல்லுணவை, வெறும் மூன்றே மூன்று நரிகள் மாத்திரம் தின்று விடுவதை மனசாட்சி உள்ளவர்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்! 

ஆக, இட ஒதுக்கீட்டை ஆதரிக்கின்ற திராவிட இயக்கம், பிற இயக்கங்கள் ஏதோ வேலை வெட்டி இல்லாமல், அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எவரேனும் கருதுவார்களேயானால் அவர்களது அறிவை, அவர் சார்ந்துள்ள உயர்சாதி குணத்தை, நடு நிலைமைத் தன்மையை ஒருவர் சந்தேகப்பட வேண்டும் என்று நான் உங்கள் ஒவ்வொருவரையும் வலியுறுத்திக் கோருகிறேன்!

"மேலும் வெறும் மனப்பாடக் கல்வி முறையை, "உரு டப்பா போடும் மந்திர முறையை" (Rote Memory Learning) பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இந்திய உயர் சாதியினர், செயல்முறை கல்வியைக் (Practical Education) கொண்டுவந்து உண்மையான திறமையை அளவிட வேண்டுமா இல்லையா", என்று நான் மேலும் உங்களிடம் ஒரு முக்கியமான கேள்வியை முன்னிறுத்த விழைகிறேன்! 



நீச்சலைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதுவது கல்வி ஆகாது; நீச்சல் அடிப்பது கல்வி!

உணவுப் பொருட்கள் எப்படி உருவாக்கப் படுகின்றன என்று படிப்பது கல்வி அல்ல; அதை செய்து காண்பிப்பது தான் கல்வி!

உடை எப்படி உண்டாக்கப்படுகிறது என்று மனப்பாடம் செய்வது கல்வி அல்ல; அதை உண்டாக்கி காண்பிப்பதற்கு பெயர்தான் கல்வி!

கட்டிடங்கள் எப்படி கட்டப் படுகின்றன என்பது பற்றி "மந்திர மனப்பாடம் செய்வது", அல்ல கல்வி; கடைகால் போடுவது முதல் கூரை வேய்ந்து தரையை பூசி மெழுகி கட்டிடம் முடிவது வரை செயல்முறையாக செய்து காண்பிப்பதற்கு பெயர் தான் கல்வி!

ஆக,
உணவு 
உடை 
உறையுள் 

இவற்றைச் செயல்முறையில் (Practically Living Dravidian Races) செய்து இந்த உலகத்தில் பிற உழைக்காத மக்களுக்கு அளித்து வரும் உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு உண்டான உரிமையை அவர்களே எடுத்துக் கொள்வார்கள்! நீங்கள் ஒன்றும் தர வேண்டியதில்லை!


Reservation (for the socially and educationally backward) is the birthright of working class people; not ever the begging from others!

கல்வி மற்றும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட (Never in the scale of Economy) மக்களுக்கான இடவொதுக்கீடு என்பது, உழைக்கும் மக்களின் உரிமை; பிறரிடம் யாசிக்கும் பிச்சை அல்ல!


-யோஜென் பால்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: