Translate this blog to any language

சனி, 28 மார்ச், 2020

Virus: அச்ச நெருப்பை அச்சில் ஏற்றும் பேராசை!

எதை வேண்டுமானாலும் 
விற்று பணமாக்கிவிட 
முடிகிறது அவர்களால்!
அதுபோன்றே
தெளிந்த உண்மைகளைத்
தெளித்து விடவும்
முடிவதில்லை நம்மால்!

ஒருதுளி நெருப்பை 
கோடை காலத்து 
இலையுதிர் காட்டில் 
வைத்தால் போதும்! 
என்ன நடக்கிறது 
என அறியும் முன்னே 
எரிந்து போகிறது காடு! 
நாடும் அங்ஙனமே!

அச்ச நெருப்பை 
அச்சில் ஏற்றி விதவிதமாகப் பரப்பினால் போதாதா,
விற்க முடியாதவை எல்லாம் 
விற்றுப் போய்விடுமே!


இனி விற்பனையில் வரும் 
உலக சந்தைக்கு ஒன்று!

நோயில் நொந்து 
"அவ்விடம்" போனவன், 
சீரிய அறிவினன் 
கொடுத்து வைத்தவன்! 

இருப்பவர் கோடிதான் 
இல்லாமலாகி 
இருந்த மதிப்பும் கெட்ட புழுக்களாய் பூமியின் மீதில் 
அகதிகளாகியே 
அல்லல் படுகிறார்!

உறிஞ்சும் அட்டைக்கு 
செந்நீரோ கண்ணீரோ 
எல்லாம் ஒன்றுதான்!
பணத்தை நோக்கியே ஓடும் முதலைக்கு பற்கள் பெரிதன்றோ?

தேவையோ இல்லையோ 
தேவைக்கு மீறியே ஏழைகளை 
அடித்து உலையில் போடுகிறது உலகப் பேராசை!

பெரிய நாடகம் இறைவன் போட
"அதுகளே" போட்ட நாடகம் என்று கரிய பாம்புகள் கருதுகின்றன பாவம்!


குண்டு போடும் விமானங்களுக்கும் மேலாய் 
விசும்பில் சிரித்தபடி
குறி பார்த்து நிற்கும் கூற்றுவன்
நீ அறிகிலாய்!

நீ போடும் கணக்கெல்லாம் உனக்கே பிணக்காய் உடனே திரும்பும் பார்! 
உன் வரவுப் புத்தகத்தில் செலவின் பக்கத்தில் இதை அழுத்தி எழுதிக் கொள்ளேன்!

"நல்ல நாடகமே எனினும் 
கொள்ளை முடிந்து பங்கு பிரிக்கும் நேரம் நெருங்குகையில் இலாபக் கணக்குகளைச் எழுத முடியாதபடி உங்கள் உட்பிரிவில் உயிர்-மை தீர்ந்திருக்கும்!"

ஆனாலும் எப்பொழுதும் போலவே பசுமை போர்த்திய இந்த பூமியில் அருவிகளின் இசையையும், பறவைகளின் பாடல்களையும் 
கேட்ட வண்ணம் நடக்கும்
அந்தக் கள்ளம் கபடறியா ஏழைகளின் ஓய்வறியாப் பாதங்களை 
இறைவன் தொழுதிருக்க 

நெடும் பயணமது 
நில்லாமல் தொடரும்!

-யோஜென் பால்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: