Translate this blog to any language

ஞாயிறு, 7 மார்ச், 2010

மன்னர் ஆட்சியே எனக்குப் போதும்!


மன்னர் ஆட்சி முறை ஒழிந்து மக்கள் ஆட்சி ஏற்பட்டுவிட்டது என்று நம்ப முடியவில்லை!

இன்னும் சொல்லப் போனால் மன்னர் ஆட்சியே மேல் என்று தோன்றுகிறது.

காரணம், அன்றைய முகலாய மன்னர்கள் அல்லது அதற்கும் முன்னர் தென்னிந்தியாவில் சேர சோழ பாண்டிய மன்னர்களின் ராஜ போக வாழ்க்கையை விட அதிகமான சொகுசு வாழ்க்கை நமது மாநில மத்திய அமைச்சர்கள்/ அவர்களது குடும்பங்கள் வாழ்வது கண்கூடு. அன்றைக்காவது ஒரு நாட்டுக்கு ஒரு மன்னனும் அவனது ஒரே ஒரு குடும்பம்/சில பல மனைவியர்கள், ஒரு சில தேர்கள், கொஞ்சம் யானைகள், கொஞ்சம் குதிரைகள், கொஞ்சம் வைரம்-தங்க நகைகள், ஓரிரு அரண்மனைகள் என்று இருந்து விட்டு செத்துப் போனார்கள். இன்றைக்குப் பார்த்தால், சுதந்திரம்!!! பெற்ற இந்தியாவில் ஒரு 300 - 400 பாராளுமன்ற அமைச்சர்கள், 20 -25 மாநிலங்களில், ஒரு மாநிலத்துக்கு 100 - 300 எம்-எல்-ஏ க்கள், அதோடல்லாமல் மாநில அமைச்சர்கள், மாநில கவர்னர்கள், அரசுச் செயலாளர்கள், கலக்டர்கள் என்று ஒரு பெரிய மெகா-சைஸ் கும்பலே இருந்து கொண்டு ராஜ வாழ்கை அனுபவிக்கிறது.

பத்திரிக்கைகள் சொல்கிற புள்ளி விவரம், பொது மக்கள் பேசுவது, இதை எல்லாம் வைத்துப் பார்த்தால் ஒரு சாதாரண வட்டச் செயலாளர் ( ஆளும்/அல்லது ஆளாத கட்சியாக இருக்கலாம் ) முதற் கொண்டு கோடிக் கணக்கில் கொள்ளையடித்து வருவது தெரிகிறது. அதோடு, ஒரு அரசியல்/அரசு பிரமுகர் காரில் போனால் பின்னால் நூறு கார்கள், ஆயிரம் தொண்டர்கள் ஜே! ஜே! போடுவது, காலில் விழுவது, ஆங்காங்கு மேடை போட்டு அரசாங்கப் பணத்தில் இலவசங்களை மக்களுக்கு அள்ளித் தருவது! வழியெங்கும் தோரணங்கள்! வாழ்த்து Baner -கள், கொடிகள், அன்ன தானம், வஸ்த்ர தானம், கோவில் பூஜைகள், பண முடிப்புகள் வழங்குவது, இதையெல்லாம் பார்க்கும் போது, இந்த மக்கள் ஆட்சி முறை, ஆயிரக்கணக்கான குறுநில மன்னர்களின் தான்தோன்றித் தனமான ஆட்சி போலவும், அதிக செலவு பிடிப்பதாகவும், அதிக ஓட்டைகள் உள்ள பானையாகவும் தோன்றுகிறது.

மக்களின் அரசு என்பது நூறு ரூபாய் வருமானம் வந்தால் அதில் தொண்ணூறு ரூபாயை மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவு செய்ய வேண்டும். ஆனால், இப்போதுள்ள "மக்கள் - அரசாங்கப் பசு", நூறு ருபாய்க்கு புல்லும், புண்ணாக்கும் வாங்கிப் போட்டால் பத்து ரூபாய்க்கு மட்டும் பால் கறக்கிறது!! கொடுமை! தொண்ணூறு ரூபாயை இந்த மாதிரி, வழியில் போகிறவன் வருகிறவன் எல்லாம் கொள்ளையடித்து விடுகிறான். உழைக்கும் மக்களுக்கு, நல்ல தண்ணீர், நல்லக் காற்று, நல்ல சாலைகள், பயமுறுத்தாத விலையில் அரிசி, பருப்பு எதுவும் கிடைப்பதில்லை. ஆனாலும், உலகப் பணக்காரர்கள் வரிசையில் நம் நாட்டு தொழில் மன்னர்களும், அரசியல் மந்திரிகளும் தவறாமல் இடம் பெறுகிறார்கள். நூறு கோடி மக்களிடம் இருக்க வேண்டிய பணம், ஒரு சில "தற்கால குறு-நில மன்னர்களிடம்" மட்டுமே குவிந்து கிடக்கிறது! என்ன எழவோ! இதற்குப் பெயர் மக்கள் ஆட்சி! ஜன நாயகம்! வெங்காயம்!

எனக்கு என்னமோ அந்த பழைய காலத்தில் தலைக்கு மேல் கிரீடம் வைத்து மன்னர் வருகிறார்!பராக்கு! பராக்கு! என்று சொல்லும் ஒற்றை மன்னர் முடியாட்சியே சிறந்தது என்று தோன்றுகிறது!

உங்களுக்கு எப்படி?

-மோகன் பால்கி

சனி, 6 மார்ச், 2010

"தூசு - தொங்கப்பா" என்று ஒருவன் !!

...................அழகான வீடும்-மோசமான அரசாங்க ரோடும்!

ஒரு ஊரில் தூசு தொங்கப்பா என்று ஒருவன் இருந்தான்.
வேலை வெட்டி இல்லாதவன். அதனால், பகலில் தெரு மண்ணை எடுத்து ஜல்லடையில் போட்டு சன்னமாக சலித்து மூட்டை மூட்டையாக வைத்துக் கொள்வான். அதை நடு இராத்திரியில் காற்று வீசும் திசையில் வைத்து தூவுவான்.

அது போய் அந்தத் தெருவில் எல்லோர் வீட்டிலும் அடை அடையாகப் படியும். பிறகு, காலையில் போய் அதைத் துடைக்கிறேன் பேர்வழி என்று ஒரு சில பணக்கார வீடுகளுக்குப் போய் கொஞ்சம் துடைத்து விட்டு, கையை காலை ஆட்டி விட்டு கைச்செலவுக்குப் பணம் வாங்கிக் கொண்டு வந்து விடுவான்.


அந்த 'தூசு தொங்கப்பா' கதையாக இருக்கிறது நம்ம corporation மற்றும் High ways கதை! வருஷம் முழுவதும் தெருக்களை, சாலைகளைத் ஏதோ ஒரு காரணத்துக்காக தோண்டுவது.

மூடுவது-மீண்டும் தோண்டுவது!
தூசு தும்புகளைப் போட்டு மூடுவது!

அது அங்கு செல்லும் ஆயிரக்கணக்கான வண்டிச்சக்கரங்களில் பட்டு ஆகாயத்தில் மேல் எழும்பி, ஜாலியாக பறந்து வந்து நம் நுரை ஈரலுக்குள் போய் வசிக்க ஆரம்பித்து விடும்.
இது ஒரு நாள் ரெண்டு நாள் கதை அல்ல. பற்பல வருஷங்களாக இதே கதைதான். இத்தனைக்கும் நம்ம ஊரில் "தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்" என்ற  ஒன்று...வெட்டியாய் இருக்கிறது..நம்பினால் நம்புங்கள், இல்லாவிட்டால் போங்களேன்!
அவர்கள் மொத்தம் எத்தனை பேர், எவ்வளவு அரசாங்க சம்பளம் போகிறது, அப்படி என்னதான் தினமும் செய்கிறார்கள் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? எனக்கும் தான் தெரியாது- அதுக்கு நான் என்ன பண்ண?அது போகட்டும், அதைப் பார்க்க, பார்க்காமல் இருக்கத்தான் அரசு-அரசு என்ற ஒன்று எப்பவும் வந்து போகிறதே ! நமக்கு என்ன வீண் கவலை! அது தவிர பொதுவாகவே...

நமக்குதான் "Pollution" பற்றிய பிரக்ஞையே கிடையாதே!
நாம தான் எது பற்றியும் முணுமுணுக்கக் கூட மாட்டோமே!
யாராவது தப்பித் தவறி முணுமுணுத்தால், அதை 'உனக்கு அரசியல்-பகை'
என்று உடனே இன்னொருவர் சொல்லிவிடுவோமே!

சரி, மேற்படி அந்தப் பள்ளத்தில் ஒரு வருஷ காலத்துக்கு அப்பப்ப ஏதாவது ஒரு பெரிய லாரியோ, பஸ்சோ மாட்டிக்கொண்டு அவதிப் படும்!

இல்லையென்றால், அந்த பள்ளத்தின் மீது ஒரு சமாதி-மேடு மாதிரி என்னமோ ஒன்றைக் கட்டுவார்கள்! கண்ணில்லாதவன் கறி சமைச்ச கதையாய்!

அதன் மீது ஆயிரக் கணக்கான வண்டிகள், ஆண்டுக் கணக்கில், இமயமலை ஏறுவது போல், ஏறி இறங்கி செல்லும்! உள்ளே பயணம் செய்பவர் எப்படியோ உயிர் வாழ்ந்து தொலைக்க வேண்டும்! ( பாவம்! இந்த முழு நேர டிரைவர்கள்! குடலெல்லாம் இறங்கிப் போய் இருக்கும்!) சென்னையில், பல சாலைகளில், பல ஆண்டுக் கணக்கில் இருக்கும் மேடு-பள்ளங்கள், சமாதி மாதிரி ஒட்டு போட்ட தார் ரோட்டு வேலைகள் (patch works) இன்னும் என் மனக் கண்ணில் அப்படியே இருக்கிறது.

அழகழகான வீடுகள் கட்டி இங்கே என்ன பிரயோஜனம்?
இப்படி அசிங்கமான சாலைகளை வைத்துக் கொண்டு?
(உங்கள் மனக் கண்ணில் இந்த "மக்கள் அரசுகளின்"  தெரு-சாலைகளை மறைத்து விட்டு, வெளிநாட்டுச் சாலைகள் போல கற்பனை செய்து பார்த்தால்...நாம் எல்லோருமே ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் இருப்பது போலத் தான் இருக்கும்! அந்த அளவு தனி மனிதர்களின் கட்டிட அமைப்புகள் சிறப்பாக இருக்கின்றன! அதைக் கெடுக்கும் பின்புலத்தை அரசு சாலைகள், தெருக்கள், குப்பைகள் ஏற்படுத்துவது கண்கூடு!)

வீட்டுக்கு உள்ளே இருக்கிற வரைக்கும் நாம் எல்லோரும் ராஜா-ரோட்டுக்கு வந்தா நசுங்கிப் போன கூஜா!

இன்னும் மழைக் காலத்தில் எந்தெந்த சாலைகளில், தெருக்களில், வெள்ளம் வடியாமல் நிற்கும் என்பது நிறைய பேருக்கு அத்துப்படி. ஆனால் இதெல்லாம் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் தெரியவே தெரியாதாம்! ( உலகத்தில் பல நாடுகளில், எவ்வளவு அழகான சாலைகள் உள்ளன! தொலைக் காட்சிகளில் தான் நாம் தினமும் பார்க்கிறோமே! நம் மந்திரிகள், அதிகாரிகள் எல்லாம் அந்த நாடுகளுக்குப் போய், எப்படி அவர்கள் அந்த மாதிரி உருப்படியான சாலைகள், மேம்பாலங்கள் கட்டுகிறார்கள் என்று பார்த்துவிட்டு வரவேண்டும்.)  ஆனால் இது போல பலப் பல மழை காலங்கள் எப்பவும் போல வரும்-போகும்! இந்தத் தொல்லைகள் மட்டும் தலைமுறை கடந்தும் தொடரும்!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,தூசு பறக்கும் சாலைகள்!
 எப்படியோ....
வாழ்க! தூசு-தும்புகள்!
வாழ்க! மேடு பள்ளங்கள்!
வாழ்க! சமாதிகள்!
வாழ்க! வெள்ளம் தேங்கும் சாலைகள்!

-மோகன் பால்கி