Translate this blog to any language

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

Cutting Trees & Expecting Rain? இருக்கும் மரங்களை இன்னும் வெட்டு (கவிதை)!




நான் மழை-மழை நான்!
தாயினும் சாலப் பரிந்தே ஊட்டும் வான் மழை!

ஜடமென நினைக்கிறாய் மனிதா-என்னை!
கண்ட இடத்திலும் கணக்கின்றி பெய்வதாய்;
சில நாள் பொய்த்து மோசமும் செய்வதாய்
சிற்றறிவால் எனை சிறுமை செய்கிறாய்!

சிந்தனையற்ற சிறுமதியாளனே
சொல்வது கேளாய்!
கன்றுக்கு வைத்த முலைப்பால் தன்னை
எந்தப் பசுவும் மண்ணில் சொரியா!
உழைத்த பணத்தை நல்லான் ஒருவன்
வீணர்களுக்கு தானமும் செய்யான்!

"விண்ணில்-உலவும்-சிந்தனை" நான்!
உன் வறண்ட பூமியில் பொய்திடுவேனோ?
இருக்கும் மரங்களை வெட்டிச் சாய்த்துநீ
பாலை நிலங்களாய் மாற்றி வருகிறாய்!


ஏரி குளங்களை ஒழித்தும் பழித்தும்
உயர்ந்த 'சமாதிகள்' கட்டி வைக்கிறாய்!
ஒருசிறு செடியும் புழுவும் வாழா
சுற்று சூழலை வலிந்து செய்கிறாய்!



உன்னிடம் எனக்கென்ன வேலை-அற்பனே!
இன்னும் மேற்றிசை மேற்றிசை ஏகுவேன்!
வானோக்கி தவம்செய் காடுகள் மீதும்
"பச்சை பசுந்தரைப் புற்கள்" மீதுமென்
அன்பின் மிகுதியால் அளவாய்ப் பொய்வேன்!
நீ இருக்கும் மரங்களை இன்னும் வெட்டு!



வெள்ளி, 21 அக்டோபர், 2011

ஜனநாயகத் திருடர்கள்! Democratic Thieves!!

நாடு நாய்களிடம் போய்
நாட்கள் ஓடி விட்டன!

மக்கள் பிணி தீர்க்கும் 
மனமிலா தலைவர்கள் 
இந்தத் தேசம் முழுவதும் 
புற்று நோயாய் பரவிப் போயினர்!

முடிமன்னர் ஆட்சியை 
முடித்த மடமையில் 
கிடைத்த பரிசு 
இதோ!
ஊரை அடித்து உலையில் போடும் 
ஜனநாயகத் திருடர்கள்!

உழைக்கும் மக்களின் 
அடிப்படைத் தேவைகள் 
எதுபற்றிய அக்கறையுமின்றி 
நகர்கிறது காலம்!

அன்று

தாடி மீசை ஒட்டி 
அதிகாரிகள் அறியாவண்ணம் 
"நகர்வலம்" வந்து
குறைகள் களைந்து 
ராஜ பரிபாலனம் செய்த 
பழங்கால 'ஒரு-மன்னன்' 
எங்கே;

இன்று...

ஏற்றிய கண்ணாடியும் 
ஏசியின் சொகுசுமாய் 
முன்னும் பின்னும் 
வண்டிகள் மறைத்து 
பூனைகள் புடை சூழ 
வாரிச் சுருட்டும் 
"ஆயிரம்-மந்திரிகள்" 
பதவி சுகம் எங்கே..?

ஆனாலும்...
ஒன்றும் கிழித்தபாடில்லை!

மன்னர் ஆட்சிக்குப் பிறகு
இருந்தது-கெட்டதுதான் மிச்சம்!

வெள்ளைக்காரன் கூட 
இந்தக் கொள்ளைக்காரர்களை 
பின்னுக்குத் தள்ளி 
நல்லவனாகிப் போனான்!
நாளுக்கு நாள்
இந்த தேசத்தில் 
விஷமாய் உயரும் விலை வாசி..
சிதிலமடைந்த உட்கட்டச் சாலைகள்....

மூஞ்சியில் விழுந்து 
பாதை மறைக்கும் 
பறக்கும் குப்பைகள்...
பெருக்காத தெருக்களில் 
பெருகும் தூசு...
இரத்தம் உறிஞ்சும் கொசுக்கள்...
சாக்கடை கலந்த குடிநீர்..
தொப்புள் கொடி துவங்கி 
சுடுகாடு வரைக்கும் 
தொடரும் கையூட்டு...

ஸ்விஸ் வங்கியில் 
இலட்சம் கோடிகளில் பதுங்கிய 
ஏழைகளின் உழைப்பு...
விதவிதமான
கல்விச் சுரண்டல்..
இன்னும் ஒழியாத
சா'தீய' கலவரங்கள்... 
அன்றாடம் நிகழும் 
கொலை கொள்ளைகள்..
மகளிர்-குழந்தைகள் மீது
பாலியல் வன்முறை..

கறி-சோறு போட்டு 
குற்றவாளிகளை கொஞ்சும்
சிறைச் சாலைகள்.... 
கிரிமினல்களின் அரசியல் பிரவேசம்..
பொறுப்பிலா அதிகாரிகள்...
அரசுப் பணியாளர்கள்...
அடிப்படை வசதியற்ற 
இந்திய கிராமங்கள்...
பட்டினிச் சாவுகள்..

அதற்கும் மேலாய்...
விண்வெளிக்கு இராக்கெட் அனுப்பும் 
வல்லரசு இந்தியாவில்...

த்...த்...தூ...! 
நன்னீர் மற்றும் 
கழிப்பிடம் தேடியே 
தொலைகிறது வாழ்வு!