Translate this blog to any language

சனி, 6 மார்ச், 2010

"தூசு - தொங்கப்பா" என்று ஒருவன் !!

...................அழகான வீடும்-மோசமான அரசாங்க ரோடும்!

ஒரு ஊரில் தூசு தொங்கப்பா என்று ஒருவன் இருந்தான்.
வேலை வெட்டி இல்லாதவன். அதனால், பகலில் தெரு மண்ணை எடுத்து ஜல்லடையில் போட்டு சன்னமாக சலித்து மூட்டை மூட்டையாக வைத்துக் கொள்வான். அதை நடு இராத்திரியில் காற்று வீசும் திசையில் வைத்து தூவுவான்.

அது போய் அந்தத் தெருவில் எல்லோர் வீட்டிலும் அடை அடையாகப் படியும். பிறகு, காலையில் போய் அதைத் துடைக்கிறேன் பேர்வழி என்று ஒரு சில பணக்கார வீடுகளுக்குப் போய் கொஞ்சம் துடைத்து விட்டு, கையை காலை ஆட்டி விட்டு கைச்செலவுக்குப் பணம் வாங்கிக் கொண்டு வந்து விடுவான்.


அந்த 'தூசு தொங்கப்பா' கதையாக இருக்கிறது நம்ம corporation மற்றும் High ways கதை! வருஷம் முழுவதும் தெருக்களை, சாலைகளைத் ஏதோ ஒரு காரணத்துக்காக தோண்டுவது.

மூடுவது-மீண்டும் தோண்டுவது!
தூசு தும்புகளைப் போட்டு மூடுவது!

அது அங்கு செல்லும் ஆயிரக்கணக்கான வண்டிச்சக்கரங்களில் பட்டு ஆகாயத்தில் மேல் எழும்பி, ஜாலியாக பறந்து வந்து நம் நுரை ஈரலுக்குள் போய் வசிக்க ஆரம்பித்து விடும்.
இது ஒரு நாள் ரெண்டு நாள் கதை அல்ல. பற்பல வருஷங்களாக இதே கதைதான். இத்தனைக்கும் நம்ம ஊரில் "தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்" என்ற  ஒன்று...வெட்டியாய் இருக்கிறது..நம்பினால் நம்புங்கள், இல்லாவிட்டால் போங்களேன்!
அவர்கள் மொத்தம் எத்தனை பேர், எவ்வளவு அரசாங்க சம்பளம் போகிறது, அப்படி என்னதான் தினமும் செய்கிறார்கள் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? எனக்கும் தான் தெரியாது- அதுக்கு நான் என்ன பண்ண?அது போகட்டும், அதைப் பார்க்க, பார்க்காமல் இருக்கத்தான் அரசு-அரசு என்ற ஒன்று எப்பவும் வந்து போகிறதே ! நமக்கு என்ன வீண் கவலை! அது தவிர பொதுவாகவே...

நமக்குதான் "Pollution" பற்றிய பிரக்ஞையே கிடையாதே!
நாம தான் எது பற்றியும் முணுமுணுக்கக் கூட மாட்டோமே!
யாராவது தப்பித் தவறி முணுமுணுத்தால், அதை 'உனக்கு அரசியல்-பகை'
என்று உடனே இன்னொருவர் சொல்லிவிடுவோமே!

சரி, மேற்படி அந்தப் பள்ளத்தில் ஒரு வருஷ காலத்துக்கு அப்பப்ப ஏதாவது ஒரு பெரிய லாரியோ, பஸ்சோ மாட்டிக்கொண்டு அவதிப் படும்!

இல்லையென்றால், அந்த பள்ளத்தின் மீது ஒரு சமாதி-மேடு மாதிரி என்னமோ ஒன்றைக் கட்டுவார்கள்! கண்ணில்லாதவன் கறி சமைச்ச கதையாய்!

அதன் மீது ஆயிரக் கணக்கான வண்டிகள், ஆண்டுக் கணக்கில், இமயமலை ஏறுவது போல், ஏறி இறங்கி செல்லும்! உள்ளே பயணம் செய்பவர் எப்படியோ உயிர் வாழ்ந்து தொலைக்க வேண்டும்! ( பாவம்! இந்த முழு நேர டிரைவர்கள்! குடலெல்லாம் இறங்கிப் போய் இருக்கும்!) சென்னையில், பல சாலைகளில், பல ஆண்டுக் கணக்கில் இருக்கும் மேடு-பள்ளங்கள், சமாதி மாதிரி ஒட்டு போட்ட தார் ரோட்டு வேலைகள் (patch works) இன்னும் என் மனக் கண்ணில் அப்படியே இருக்கிறது.

அழகழகான வீடுகள் கட்டி இங்கே என்ன பிரயோஜனம்?
இப்படி அசிங்கமான சாலைகளை வைத்துக் கொண்டு?
(உங்கள் மனக் கண்ணில் இந்த "மக்கள் அரசுகளின்"  தெரு-சாலைகளை மறைத்து விட்டு, வெளிநாட்டுச் சாலைகள் போல கற்பனை செய்து பார்த்தால்...நாம் எல்லோருமே ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் இருப்பது போலத் தான் இருக்கும்! அந்த அளவு தனி மனிதர்களின் கட்டிட அமைப்புகள் சிறப்பாக இருக்கின்றன! அதைக் கெடுக்கும் பின்புலத்தை அரசு சாலைகள், தெருக்கள், குப்பைகள் ஏற்படுத்துவது கண்கூடு!)

வீட்டுக்கு உள்ளே இருக்கிற வரைக்கும் நாம் எல்லோரும் ராஜா-ரோட்டுக்கு வந்தா நசுங்கிப் போன கூஜா!

இன்னும் மழைக் காலத்தில் எந்தெந்த சாலைகளில், தெருக்களில், வெள்ளம் வடியாமல் நிற்கும் என்பது நிறைய பேருக்கு அத்துப்படி. ஆனால் இதெல்லாம் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் தெரியவே தெரியாதாம்! ( உலகத்தில் பல நாடுகளில், எவ்வளவு அழகான சாலைகள் உள்ளன! தொலைக் காட்சிகளில் தான் நாம் தினமும் பார்க்கிறோமே! நம் மந்திரிகள், அதிகாரிகள் எல்லாம் அந்த நாடுகளுக்குப் போய், எப்படி அவர்கள் அந்த மாதிரி உருப்படியான சாலைகள், மேம்பாலங்கள் கட்டுகிறார்கள் என்று பார்த்துவிட்டு வரவேண்டும்.)  ஆனால் இது போல பலப் பல மழை காலங்கள் எப்பவும் போல வரும்-போகும்! இந்தத் தொல்லைகள் மட்டும் தலைமுறை கடந்தும் தொடரும்!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,தூசு பறக்கும் சாலைகள்!
 எப்படியோ....
வாழ்க! தூசு-தும்புகள்!
வாழ்க! மேடு பள்ளங்கள்!
வாழ்க! சமாதிகள்!
வாழ்க! வெள்ளம் தேங்கும் சாலைகள்!

-மோகன் பால்கி

வெள்ளி, 5 மார்ச், 2010

காந்தியின் உண்மைச் சீடர் - 'கோட்சே'-வை கொண்டாடலாமா?

நித்யானந்த சுவாமிகளின் அந்தரங்க வாழ்க்கைப் பற்றி பேச எவருக்குமே உரிமை இல்லை என்பது சிலரது வாதம்.

அவரும் ஏதோ ஒரு பெண்ணும் சேர்ந்து.....
(உங்கள் கண்களுக்கு மேலே உள்ள படத்தில் எலிகள் போன்று தெரிந்தால் நான் அதற்கு பொறுப்பில்லை. அதற்காக அவர்களின் அந்தரங்கங்களை ஆயிரம் தரம் போட்டு இந்த டிவி-காரர்களும் பத்திரிக்கை காரர்களும் நம் வீட்டை அசிங்கம் பண்ணியது போன்று நம்மால் இங்கே பண்ண முடியாது! )

.....ரகசியமாக எப்படி இருந்தாலும் உங்களுக்கு என்ன வந்தது என்று அந்த சிலர் கேட்கிறார்கள். ஆனால், எனது அடிப்படையான வாதம் என்னவென்றால்,

வள்ளலாரின் பக்தர் ஒருவர் பிரியாணி கடை வைக்கலாமா?

பெரியாரின் அத்யந்த சீடர் ஒருவர் அலகு குத்தி காவடி எடுக்கலாமா?

காந்தியின் உண்மைத் தொண்டர் ஒருவர் கோட்சே-வை கொண்டாடலாமா?

இந்த மாதிரி அடிப்படைக்கே விரோதமான காரியங்களை ஒருவர் செய்தால் யாருக்கும் கோபம் வருமா வராதா?
இதை ஏன் சொல்கிறேன் என்றால், நித்தியானந்த சுவாமிகள் ஒரு பிரமச்சாரி. அதோடு அவர் பிரம்மச்சர்யத்தை, பல முறை ஒசத்தியாக பேசி உள்ளார். தான் அதை முழுமையாக கடை பிடிப்பதாக சொல்லி மக்களை ஏமாற்றியும் வந்து உள்ளார்.
அவரது சொந்தப் பேச்சை இங்கே நீங்களும் You-Tube-இல் காண்க: http://www.youtube.com/watch?v=ve0Z6B5Q0BM

ஒரு வேளை
இந்தப் படம் திடீரென்று அவரது சீடர்களால் நிறுத்தப் பெற்றால் கீழ்க் கண்ட இந்த லிங்கில் பாருங்கள்: (sorry its not uploading. takes time too longer. If you unable to see from you-tube as i said, you just send me a mail. I will send you the other link)

அதுதான் அவரை நம்பி பின்னால் சென்ற பல பிரமசாரிகளின் கோபமும் ஆத்திரமும். அது மட்டும் இன்றி, பெண் வாடையே படாத சாமியார் என்ற பிராண்டுக்கு இந்தியாவில் மதிப்பு அதிகம். அந்த பிராண்ட் போலி என்று தெரியும்போது மக்களின் ஆத்திரம் பன்மடங்கு ஆகிறது.

மற்ற படி உடற் கூறு விஷயங்கள் என்பது, அது ஒரு இயற்கை உபாதை மாதிரி என்று நமக்குத் தெரியாதா? கோபம் என்னவென்றால், இயற்கையான ஒரு விஷயத்தைத் தான் அடக்கி விட்டதாகப் பீற்றிக் கொண்டு, மக்களை மடையர்களாக்கும்- மற்றும் சாதாரண மக்களின் சம்சார வாழ்க்கையை கேலி வேறு செய்யும் ஒரு மிக கேவலமான இழி செயலைத்தான் நான் இங்கு கண்டிக்க விரும்புகிறேன்!

(ஆதி காலம் தொட்டு இந்த சோம்பேறிச் சாமியார்களுக்கு சோறு போடுவதே இந்த உழைத்துப் பிழைக்கும் சாதாரண சம்சாரிகள் தான்...ஆனால் என்ன ஒரு தெனாவெட்டாக எந்த ஒரு சாமியாரும் பேசுகிறார்கள் என்று பாருங்களேன்)

இந்த சாமியார்கள் என்னமோ வேற்று கிரக வாசிகள் போலவும், எல்லாவற்றையும் அதாவது... பசி, தாகம், மூச்சு விடுவது, மல ஜலம் கழிப்பது உட்பட எல்லாவற்றையும் விட்டு விட்ட மாதிரியும் நடிப்பதை பார்த்தால் பற்றிக் கொண்டு எரிகிறது! என்னமோ இவர்கள் ஆயிரம் வருடம் வாழ்ந்தவர்களைப் போலவும், நரை, திரை, மூப்பு கடந்தவர்கள் போலவும் வெட்டி பந்தா பண்ணுகிறார்கள்!

போங்கடா, நீங்களும் உங்கள் இயற்கையை மதிக்காத வெங்காய ஆன்மீகமும் என்று எட்டி மிதிக்கத் தோன்றுகிறது!

என்ன செய்வது? நாம் ஏமாறும் வரை ஏமாற்றுக் காரர்களும் இந்த பூமியில் நம்மை ஏமாற்றிக் கொண்டு இருக்கத்தானே செய்வார்கள்?

-மோகன் பால்கி