Translate this blog to any language

சனி, 17 டிசம்பர், 2011

Is there a gain without pain? எல்லோருக்குமே லாபம் தரக்கூடிய செயல் இந்த உலகில் உளதா?


Left or Right Gain or Pain
நம் மனித மனம் விசித்திரமானது!
எந்த ஒரு செயலிலும் லாப நஷ்ட கணக்கு பார்க்கும் இயல்புடையது!
அதிலும் "அதிகம் படித்த மேதாவி மனம்" எப்போதும் ஒரு தராசு தட்டுடன் (Weighing scale) அமர்ந்து கணக்குப் பார்த்துக் கொண்டே கிடக்கிறது!!

பிச்சை இடுவதால் என்ன லாபம்?
இன்னாருக்கு உதவுவதால் என்ன லாபம்?
இந்த வழியை தேர்ந்து எடுப்பதால் என்ன லாபம்?
இன்னாரை மணம் புரிவதால் என்ன லாபம்?
இந்த நேரத்தில் துவங்குவதால் என்ன லாபம்
என்றெல்லாம் 'என்ன-லாபம்-என்ன-நஷ்டம்' என்னும் கணக்கு
பார்த்து பார்த்து அங்கலாய்க்கிறது அறிவாளி மனம்!!

உண்மையில் அப்படி, ஒரு செயலினால் ஒருவனுக்கோ அல்லது பிறருக்கோ நஷ்டமே இல்லாத இலாபம்தான் உண்டா என்று இங்கு ஆராய்வோமா? அதாவது எல்லோருக்குமே லாபம் தரக்கூடிய ஒரு செயல் இந்த உலகில் உளதா என்று நாம் பார்ப்போமா? அதாவது இழப்பே இல்லாத ஈட்டமும் உண்டோ?

1 . மாட்டுவண்டிப் பயணத்தை விட ஆகாய விமான பயணம் நேர-லாபம் உடையது. நெடுந்தூர மாட்டு வண்டி பயணம் உடல் அயர்ச்சி தரும். எல்லாம் சரி! ஆகாய விமானப் பயணம், கரணம் தப்பினால் மரணம். உயிர்-நஷ்டம்!
2 . அரசியல் பிழைத்தோர்க்கு அரும்புகழ் பொருள் சேரும்; அது லாபம். ஒருநாள், காரணம் இருந்தோ இல்லாமலோ இகழ்ச்சியும் வீழ்ச்சியும் வந்து சேரும்; அது நஷ்டம்!

3 . புத்தரும், இயேசுவும் ஆற்றிய பெரும்பணி மனித குலத்துக்கு லாபம்; அதிலிருந்து பிரிந்த பிரிவுகளால் சச்சரவும் உட்பகையும் அதனால் பெரும் போர்களும் மரணமும் மனித குலத்துக்கு நஷ்டம்!

4 . பொதுவுடைமை சித்தாந்தங்கள் உள்ள நாடுகளில் மக்களுக்கு அரசாங்கத்தால் பலவகையிலும் லாபம்! ஆனால், லாப வெறி இல்லாத முதலாளிகள் இல்லாதவிடத்தில் அங்கு தொழில்களும் வளர்ச்சியும் இல்லாததால், அது நஷ்டம்!

5 .ஒருவன்  'திரை கடலோடி திரவியம் தேடுவது' அவனது குடும்பத்தினருக்கு பொருள்-லாபம்! அங்கே பிரிந்து வாழ்வதால் ஏற்படும் துன்பங்களும், அவன் தன-குடும்பத்தோடு சேர்ந்து வாழாத காலமும் பெரும்-நஷ்டம்!

6 . கையளவு அணுவை பிளந்து கடலளவு சக்தி பெறுகின்ற 'அணு-உலைகள்' லாபம்! ஆனால், அதற்காகும் அதீத செலவுகளும், என்றும் அழியாமல் 'அபாய அணுக்கதிர் வீசும்' கழிவு எச்சங்களும் மனித குலத்துக்கு பெரும் நஷ்டம்!

இப்போது, கொஞ்சம் சின்ன சின்ன விஷயங்களுக்கு வருவோம்!

7 .  பள்ளிப்படிப்பை முடித்த ஒருவன், தான் பொறியாளர் ஆவதா.. மருத்துவர் ஆவதா...வழக்குரைஞர் ஆவதா என்று லாப நஷ்டக் கணக்கு பார்த்தான்!

மருத்துவர் ஆவது மரியாதை தரும்; அது லாபம்! ஆனால், நோய்களோடு, நோயாளிகளோடு வாழ்க்கை நடத்தவேண்டும், நேரங்காலமின்றி பணியாற்றவேண்டும்; அது நஷ்டம்!

வழக்குரைஞர் ஆவது அதி-கம்பீரம், காசு பார்க்கலாம்; அது லாபம்! ஆனால், தெரிந்தோ தெரியாமலோ 50% குற்றவாளிகளுக்குத் துணை போகும் குற்ற உணர்ச்சி, மற்றும் அதனால் வெளியில் இருந்து வரும் கட்புலனாகாத அபாயங்கள்; அது நஷ்டம்!

பொறியாளர் ஆவது அறிவாளியாவது, பணம்-புகழ் தரும்; அது லாபம்! ஆனால், ஊர் ஊராகச் செல்லவேண்டும், அதிகப் பொருள்களோடு, மனிதர்களோடு, வரைபடங்களோடு மல்லுக்கு நிற்கவேண்டும்; அது நஷ்டம்!

8 . பேருந்தில் பயணம் செய்யும் போது ஜன்னலோர இருக்கை-சுகம், இயற்கை காட்சி, காற்று வரும், அது லாபம்!
ஆனால், ஒவ்வொரு முறையும் எழுந்திருக்கையில் பக்கத்தில் இருப்பவரை கெஞ்சவேண்டும், ஜன்னலோர மரக்கிளையில் கண்கள் படாமல் காக்கவேண்டும்; அது நஷ்டம்!

9 . குடிப்பழக்கத்தினால், ஒருவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் பொருள் நஷ்டம்-உயிர் நஷ்டம்! மது விற்பனையில்  கிடைக்கும் வருமானத்தினால் அரசுக்கும் மக்களுக்கும் பெரும்-லாபம்!

10 .  ஒருவன் ஆத்திகனாய் இருப்பதால் பண்டிகைகள், நெடும்பயணம் போவதில் அவனுக்குப் பொருள் நஷ்டம்! அதைச் சார்ந்து வாழும் பிற தொழிலாளர்கள், வணிகர்களுக்கு அவனால் பெரும்-லாபம்!

இன்னும் சொல்லிக் கொண்டே நான் போகலாம்! இத்துடன் நிறுத்தி உங்கள் அனுபவத்துக்கும் கற்பனைக்குமே விட்டு விடுகிறேன்! முடிவில் என்ன புரிகிறது? அந்தப் பொல்லாத இறைவன் (அல்லது நாத்திகப் பார்வையில் 'இயற்கை அன்னை') எவ்வளவு 'குசும்புக்' காரன் என்று புரிகிறதா?

புரிந்திருக்கும்! ஆம்! இந்த உலகில், நஷ்டமே இல்லாத ஒரு லாபம் இல்லை!
அல்லது, இப்படி வைத்துக் கொள்ளுங்களேன்!
எதற்கு நீங்கள் லாப-நஷ்டக் கணக்கு பார்த்து மண்டையை உடைத்துக் கொள்கிறீர்கள்...என்று இயற்கை நம்மை கேட்கிறது!


நான் எனது மாணவர்களிடம் அடிக்கடி சொல்வது இது:

' உருப்படாத ஓட்டை வண்டி' என்று பலரும் கருதிய ஒரு பேருந்து, தாமதமாய்ப் போனாலும் போக வேண்டிய ஊர் போய் சேர்ந்ததும் உண்டு.....
'அலங்காரத் தேர் மாதிரி' என்று பலரும் புகழ்ந்த மற்றொரு பேருந்து, விரைந்து புறப்பட்டு வளைவில் கவிழ்ந்ததும் உண்டு!

அதற்காக, யோசிக்கவே வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை!

யோசியுங்கள்! சீக்கிரம் முடிவெடுங்கள்...உங்கள் "கடைசி பேருந்து" புறப்படுவதற்குள்!!

( எதையும் தவறாகவே புரிந்து கொள்வது என்று முடிவெடுத்துவிட்டால் நான் ஒன்றும் 
சொல்வதற்கில்லை! ) 


-யோஜென் பால்கி
yozenbalki



வியாழன், 15 டிசம்பர், 2011

How Pyschology is an incomparable Art -Top 10 Reasons! உள இயல் ஒரு உயர் கலை - 10 காரணங்கள்!

மனித மனம்!
ஒரு உளவியல் விற்பன்னன்/ உளவியல் குரு பார்வையில்:

1 .  உடலை நம்பியே மனம் இருப்பினும் மனம்தான் மனிதனின் வளர்ச்சி நிலைக்கான முழுக் காரணி!
2 .  மனத்தில் சோர்வு அல்லது பயம் ஏற்படும்போது பல்லாயிரம்
மன/ உடல் நோய்கள் ஏற்படுகின்றன!
( WHO declares that more than 70-80% physical diseases are caused by depressed mind)
3 .  பிறவியிலேயே சிதைந்த மனத்தை யாராலும் சரி செய்ய முடியாது!
4 .  உடல் நோய்களின் தாக்கத்தால் பாதிக்கப்படும் உடல் அவயங்களைக் கூட யாரும் மாற்றிவிடலாம்,
      ஆனால் ஒருவனின் மனம் போல இன்னொரு மனத்தை/மூளையை    யாராலும் தரமுடியாது!
5 .  ஏனென்றால், இன்னொருவர் மூளையில் இன்னொருவர் வாழ்க்கையின் நினைவுகளும் அனுபவமுமே இருக்கிறது! அதை யார் விரும்புவார்?
6 .  ஆக, பாதிக்கப்பட்டவரின்  மனத்தையே செப்பனிட்டு
மீண்டும் அவரிடம் தர வேண்டும்!
7 .  மேலும், மருந்து-மாத்திரை இன்றி, கத்தியின்றி ரத்தமின்றி எந்த வித சேதாரமும் இன்றி!
8 .  அதுவும் குறைந்த சில நாட்களிலேயே; விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பது போல!
9 .  நிரூபணம் செய்யக் கூடிய அளவுக்கு நல்ல மாற்றங்கள் ஒரு சில சிகிச்சைக்குப் பிறகு தெரியவேண்டும்!
10 . நிரந்தர நற்-பலன் தரவும் வேண்டும்!


இதையெல்லாம் செய்யக் கூடிய ஒரு அதீத உளவியல் கலை
உலகின் அனைத்துக் கலைகளையும் தாண்டிய உயர் தன்மையது ஆகும்!

ஆம்! செத்தவனை உயிர்ப்பித்தல், இரும்பைத் தங்கமாக்குதல், கை அசைவில் கைக்கடக்கமான ரத்தினங்கள் வரவழைத்தல் போன்ற பிற கலைகளை விட இது மகா உன்னதமானது!

 ( உயிர்ப்பித்தவனும் உயிர்ப்பிக்கப்பட்டவனும்  மீண்டும் ஒருநாள் இறப்பர்..தங்கச் சுரங்கத்துக்கே அதிபதி ஆனாலும் நிம்மதிக்கு அதிபதியாக வேண்டுமே..ரத்தினங்கள் வரவழைப்பதை விட ஒரு நாட்டுக்கு சுபிட்சம் வரவழைக்க முடிந்தால் அது மிகவும் மேன்மையானது )

மேலும், உடலில் கோளாறுகள் இல்லாத ஒரு மாணவர், பொறியாளர், வழக்குரைஞர், சினிமா கலைஞர், வணிகர் போன்றோரைக் கூட நீங்கள் உலகில் பார்த்து விடலாம்!

ஆனால், மனதில் பயம்/துக்கம்/கோபம்/குற்ற உணர்வு. உலகத்தினரோடு ஒப்புரவு கொள்ளாமை,  அல்லது கொஞ்சமாவது மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற அளவுக்கான 'உள இயல் குறைபாடுகள்' இல்லாத ஒரு மருத்துவரையோ, மதத் தலைவரையோ, அறிவியல் அறிஞரையோ உலகில் காண்பது அரிதினும் அரிது ஆகும் ! 

மேற்படி அவர்களின் கட்புலனாகா உளவியல் குறைபாடுகளையும் உணர்ந்து உள்வாங்கி 'கத்தியின்றி ரத்தமின்றி' பழுது நீக்கி, சிற்பம் செதுக்குவது போல் செதுக்கி, அவர்களது மூளையை, அவர்களது உயர் சிந்தனையை அவர்களிடமே மீண்டும் தந்து, புத்தம் புது வாழ்வை மீட்டுத் தருகின்ற கலை, 'உயர்-யோக உள இயல்' கலை ஆகும்!

ஆக, பன்னூறு நதிகள் கடலை வந்து அடைவது போல எல்லாக் கலைகளும் வந்து சங்கமிக்கிற இடம் உள இயல் துறை! ஆயினும் நல்லதொரு உள-இயல் கலைஞரை, தேவையுள்ள ஒருவர், "இன்னும் பழுதுபடாத தனது ஒரு-பாக அறிவாற்றல்" வழியேதான் கண்டுகொள்ள வேண்டும்!

மேற்கண்ட இந்த பத்து அம்சங்களையும் நிதானமாக படித்து உணர்ந்தால், "உளவியல் நிபுணத்வம்" என்பது  ஏன் அனைத்துத் தரப்பினராலும் அதிக ஆர்வம்/பெருமதிப்புடன் கவனிக்கப் படுகிறது என்று விளங்கும்!


-யோஜென் பால்கி
yozenbalki



________________________________________________
"To me Psychology is more an Art than a science. Because, any science can be taught to multitudes.
But an Art can not be so. A real senior artist, wishing to teach for a student and a disciple who is searching for a real Guru are one day, somewhere, suddenly meeting in a same frequency! Now His heart opens up and unfolds the mysteries of all tangibles and intangibles. It is just an Art from Heart to Heart communion! Never a 'mind-game' and a science to me!".