Translate this blog to any language

புதன், 27 ஆகஸ்ட், 2025

விநாயகர் வழிபாடு எப்போது வந்தது?

எனக்கு தெரிந்து விநாயகர் வழிபாடு பிள்ளையார் வழிபாடு என்பது பவுத்த சமண சமயங்கள் தென்னிந்தியாவில் பரவ ஆரம்பித்த காலத்தில் அதை தடுக்கும் விதமாக ஆரம்பிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.


அப்போது ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்த சைவ சமயத்தினர் மற்றும் வைணவ சமயத்தினர் (அறுசமய வழிபாடு: சைவம், வைணவம், சௌரம், கௌமாரம், சாக்தம், காணாபத்யம்)
ஒன்று கூடி இந்த அறுவரும் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரு கடவுளாக வைத்து திணிக்கப்பட்ட வழிபாடாகவே அது தெரிகிறது! 

காரணங்கள் நான் சொல்கிறேன்: 

1. கோயில்கள் அதிகமாக உள்ள தமிழ்நாட்டில் விநாயகருக்கு எனறு முருகர் போன்று தொன்மையான தனிப்பட்ட பெரிய கோயில் எதுவும் கிடையாது.

2. பிள்ளையாரை "ஓம்" எனும் பிரணவத்தின் வெளிமுக குறியீடாகவே இன்றும் சொல்வதை நாம் கருத்தில் கொள்ள முடியும். 

3.  பிள்ளையார் ஓம் போலவே அமைந்திருப்பதையும் நாம் காணலாம்.
 பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கும் பிற்கால ஓலைச்சுவடிகள் அதிகம் உண்டு. 

4.  அனைத்து அறுசமய கோவில்களிலும் பிற்காலத்தில் பிள்ளையார் சிலைகளை வலிந்து திணித்திருப்பதை நாம் இன்றும் காண முடியும். அது மட்டும் புதிதாக செங்கற்களால் சில காலத்துக்கு முன் கட்டப்பட்டதாக இருக்கும். 

5. அது போதாது என்று தெருத்தெருவுக்கு ஊர் ஊராக ஆலமரம் அரசமரம் குளக்கரையில் திடீர் பிள்ளையார்கள் சைவம் தழைத்து ஓங்கிய தமிழ்நாட்டில் வைக்கப்பட்டது. 

6. அதுவும் போதாமல் தெருக்களில் நேர் குத்து வருகின்ற இடங்களில் அந்த வீடுகளின் சொந்தக்காரர்கள் ஒரு சிறிய பிள்ளையாரை கண் திருஷ்டி பிள்ளையார் என்றும் வைக்கத் தொடங்கினார்கள்.

7. சமண சமயம் தமிழகத்தில் பரவத் தொடங்கிய போது அதைத் தடுக்கும் விதமாக அவர்களை வஞ்சகமாக வாதத்திற்கு அழைத்து ஏதோ ஒரு வகையில் தோற்கடித்து 8000 சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றவன் திருஞானசம்பந்தன் என்ற ஆரிய சைவன் ஆவான். 

"வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமணொடு தேரரை வாதில்வென் றழிக்கத் திருவுள்ளமே…”
”அந்த ணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச் சிந்த வாதுசெயத்திரு வுள்ளமே…”
”வேட்டு வேள்வி செயும் பொருளை விளி மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை ஓட்டி வாதுசெயத்
திருவுள்ளமே"! இதெல்லாம் அவனுக்கு சமணர்கள் மீது இருந்த வெறுப்பை தெளிவிக்கும் பாடல்கள்! 

8. நரசிம்மவர்ம பல்லவனின் படைத்தளபதியான பரஞ்சோதி (சைவ நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர்) வாதாபியைக் கைப்பற்றிய பின்னர், அங்கிருந்த ஒரு வித்தியாசமான கணபதி சிலையை எடுத்து வந்து தமிழ்நாட்டில் பிரதிஷ்டை செய்தார். 
முதலாம் நரசிம்ம பல்லவனின் ஆட்சிக் காலம் (கி.பி. 630-668) ஆகும்.
அதுவே வாதாபி கணபதி என்று இன்றும் இந்தச் சிலை திருவாரூர்த் கோயிலில் உள்ளதாக ஒரு சாராரும், திருச்சங்காட்டங்குடியில் உள்ளதாக வேறு ஒரு சாராரும் கருதுகின்றனர். இது பல்லவர்கள் மற்றும் சாளுக்கியர்களின் கலை மற்றும் கலாச்சாரத்துடன் தொடர்புடையது.

9. ஆக கி.பி‌. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு இல்லை, விநாயகருக்கு (காணாபத்தியம்) என்று பெரிய கோயில்களும் இல்லை என்றே நம்மால் உணர முடிகிறது.

ஆக என்னுடைய துணிந்த கருத்து என்பது பௌத்த சமண மத சமயங்கள் தென்னிந்தியாவில் காலூன்றக் கூடாது என்பதற்காக அதைத் தடுக்கும் விதமாக ஐந்து அல்லது ஆறு சமயத்தினர் கூடி உருவாக்கிய அல்லது திணித்த ஒரு பொது இறை வழிபாடு விநாயகர் வழிபாடு என்கிற பிள்ளையார் வழிபாடு எனலாம்!

Yozen Balki