போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட்டின் இயற்ப்பெயர் ஜோசப் ராட்சிங்கர். இவர் போப்பாண்டவர் பதவிக்கு வரும் முன்பு கார்டினலாக பணியாற்றி இருக்கிறார். கார்டினலாக இருந்த பொழுது திருச்சபை உறுப்பினர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு பொறுப்பான வாடிகன் அதிகாரியாகவும் (Leader of the Congregation for the Doctrine of the Faith) ராட்சிங்கர் பொறுப்பு வகித்தர். இதன் காரணமாக உலகெங்கிலும் நடக்கும் பல்வேறு பாலியல் அத்தீமீறல்கள் குறித்த பிரச்சனைகளை நெறிப்படுத்தும் பொறுப்பும் ராட்சிங்கருக்கு இருந்து வந்துள்ளது. அவ்வாறு இருந்தும் ஒழுக்கம் தவறிய பாதிரியார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதோடு மட்டுமில்லாமல் பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள கத்தோலிக்க பாதிரியார்களை மிகவும் ரகசியமாகவே விசாரிக்க வேண்டும் என அனைத்து கத்தோலிக்கத் திருச்சபைகளுக்கும் ராட்சிங்கர் அனுப்பிய ரகசிய உத்தரவும் தற்பொழுது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. தன்னுடைய திருச்சபைக்கு களங்கம் நேராமல் காப்பாற்றவே வாடிகன் முனைந்ததே தவிர குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளானவர்களுக்கு நியாயம் கிடைக்கவோ எந்த நடவடிக்கையும் வாடிகன் எடுக்கவே இல்லை. இதன் காரணமாக குற்றம் செய்த பாதிரியார்கள் எந்த தண்டனையும் இல்லாமல் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இத்தகைய குற்றங்களை செய்து வந்திருக்கிறார்கள்.
அதுவும் இத்தகைய பாலியல் வன்முறை யார் மீது தொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா ? குழந்தைகளின் மீது. ஆம், பத்து வயது கூட நிரம்பாத சிறுவர்களையும், சிறுமிகளையுமே தங்களுடைய செக்ஸ் வக்கிரத்திற்கு இந்தப் பாதிரியார்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். Pedophiles எனப்படும் குழந்தைகளை பாலியலுக்கு உட்படுத்தும் பாலியல் வல்லூறுக்கள் தான் இந்தக் கத்தோலிக்க கிறுத்துவ பாதிரியார்கள்.
கத்தோலிக்கத் திருச்சபைகள் உலகெங்கிலும் பல்வேறு அனாதை ஆசிரமங்களையும், குழந்தைகளுக்கான காப்பகங்களையும் நடத்தி வருகிறது. இத்தகைய காப்பகங்களிலும், பள்ளிகளிலும் இருக்கும் சிறார்களின் மீது பாலியல் வன்முறைகள் தொடுக்கப்படுவதாக பலக் குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்றன. இந்தக் குற்றங்களை போப்பாண்டவர் பதவிக்கு வருவதற்கு முன்பு தற்போதைய போப்பாண்டவர் மூடி மறைத்தார் என்ற குற்றச்சாட்டே தற்பொழுது எழுந்துள்ளது.
வழக்கம் போல போப்பாண்டவரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக வாடிகன் கூறியுள்ளது. போப்பாண்டவருக்கு இத்தகையக் குற்றங்கள் நடந்தது தெரியாது என வாடிகன் பிரச்சனையை பூசி மொழுக முனைகிறது. இதை விட வேடிக்கை என்னவென்றால் வாடிகனைச் சேர்ந்த ஒரு உயரதிகாரி போப் மீதான குற்றச்சாட்டினை யூதர்கள் மீதான வெறுப்புடன் (Antisemitism ) ஒப்பிட்டுள்ளதும் சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதனை பல யூத அமைப்புகள் கண்டித்துள்ளன. பல யூதர்கள் கொல்லப்பட காரணமான யூதர்கள் மீதான வெறுப்பினை (Antisemitism ) தற்போதைய போப் மீதான வெறுப்பாக கட்டமைக்க முனைவது வேடிக்கையானது. வாடிகன் தற்போதையப் பிரச்சனையை எவ்வாறு கையாளுவது என குழம்பிப் போய் உள்ள சூழ்நிலையையே இது வெளிப்படுத்துகிறது.
எப்படி எழுந்தது இந்தக் குற்றச்சாட்டு ?
கத்தோலிக்கத் திருச்சபைகளின் மீதான இந்தக் குற்றச்சாட்டு புதியது அல்ல. பல்வேறு நாடுகளில் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் எழுப்பப் பட்டிருக்கின்றன. தற்போதையக் குற்றச்சாட்டு கடந்தக் காலங்களில் நடந்தக் குற்றங்களை ஒட்டியே எழுந்திருக்கிறது. குறிப்பாக அயர்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடந்த காலங்களில் நடந்த பாலியல் குற்றங்களே தற்போதைய குற்றச்சாட்டிற்கும் காரணமாக உள்ளது.
அயர்லாந்தில் நூற்றுக்கணக்கான பாதிரியார்கள் பல்லாயிரம் குழந்தைகளை பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பல்வேறு விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அது போல அமெரிக்காவிலும் பல்வேறு குற்றாச்சாட்டுகள் கத்தோலிக்க திருச்சபைகள் மீது வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரச்சனை என்னவென்றால் இத்தகைய எந்தப் பாதிரியார்களும் தண்டிக்கப்படவே இல்லை.
ஏன் தண்டனை இல்லை ? கத்தோலிக்க வாடிகன் தலைமைக்கு இந்தக் குற்றங்கள் தெரியாதா ?
கத்தோலிக்கத் தலைமைக்கு இந்தக் குற்றங்கள் தெரியும். ஏனெனில் திருச்சபைகளில் நடக்கும் ஒவ்வொரு பாலியல் குற்றங்களும் வாடிகனுக்கு தெரியப்படுத்தப் பட வேண்டும் என்ற நெறிமுறை உள்ளது. ஆனால் இந்தக் குற்றங்கள் கத்தோலிக்க திருச்சபைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என வாடிகன் அஞ்சியது. இதனால் இந்தக் குற்றங்களை மூடி மறைக்க கத்தோலிக்கத் திருச்சபை முனைந்தது. இத்தகையக் குற்றங்களை மூடி மறைக்க தனி நெறிமுறைகளையே வாடிகன் வகுத்துள்ளது.
1962ல் வாடிகன் ஒரு ரகசிய ஆணையை பிறப்பித்து உள்ளது. இதன் பெயர்
Crimen Sollicitationis. இதன் படி கத்தோலிக்க பேராயர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழும் பொழுது அந்தக் குற்றங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தக் குற்றங்கள் குறித்து வெளியில் எதுவும் பேசக் கூடாது என்பதும் ரகசிய உத்தரவாகும். பாலியல் குற்றம் செய்தவர், பாலியல் அத்துமீறலுக்கு உள்ளானவர்கள், குற்றத்தைக் கண்ட சாட்சிகள் என அனைவரும் இந்தச் சட்டத்தின் படி பாலியல் குற்றம் குறித்த ரகசியத்தை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு ரகசியத்தை கடைப்பிடிக்காவிட்டால் கத்தோலிக்கத் திருச்சபையில் இருந்து நீக்கப்படுவார்கள் (excommunication). திருச்சபையில் இருந்து நீக்கப்படுவது என்பது சில இடங்களில் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைப்பது போன்றது தான். இது குறித்த ஒரு
பிபிசி ஆவணப்படத்தில் தனது ஐந்து வயது பேரனுக்கு நடந்த பாலியல் வன்முறையை வெளிப்படுத்தியமைக்காக தான் எவ்வாறு திருச்சபையில் இருந்தும், கிராமத்தில் இருந்தும் ஒதுக்கப் பட்டேன் என ஒரு மூதாட்டி விளக்குகிறார்.
பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட சிறார்கள் இந்தக் குற்றத்தைக் குறித்து வெளியில் பேசக்கூடாது என வரையறுத்த கத்தோலிக்கத் திருச்சபை, குற்றம் செய்த பாதிரியார்களுக்கு எந்த தண்டனையும் வழங்கவில்லை. Pedophile என்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். இந்தக் குற்றம் குறித்து வெளியே கூறக்கூடாது என்ற ரகசிய உத்தரவு இருந்ததால் இது போலீசாருக்கோ, உள்ளூர் அரசாங்கத்திற்கோ தெரியப்படுத்தப்படவே இல்லை. கத்தோலிக்கத் திருச்சபையின் இத்தகைய நெறிமுறை குற்றம் செய்தவர்களுக்கே சாதகமாக இருந்தது. காரணம் இத்தகைய குற்றம் செய்த பாதிரியார்கள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் மட்டுமே செய்யப்பட்டனர். இதன் காரணமாக ஒரு இடத்தில் குற்றம் செய்த பாதிரியார்கள், வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக குற்றம் இழைத்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான குழந்தைகளை பல நூற்றுக்கணக்கான பாதிரியார்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் பிரச்சனைக் குறித்து வெளியே கூறக்கூடாது என மிரட்டப்பட்டனர். பலர் பல ஆண்டுகள் இதனை வெளியே கூறவே இல்லை.
பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது தான் பலர் தங்கள் மீது சிறு வயதில் இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து கூறத் தொடங்கியுள்ளனர். இதில் எரிச்சல் ஊட்டும் வேதனையான உண்மை என்னவென்றால் கத்தோலிக்கத் திருச்சபை இத்தகைய பாலியல் குற்றங்களை ஒரு பாவமாகவும், பாவத்திற்கு மன்னிப்பாக பாவமன்னிப்பையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியுறுத்தி வந்துள்ளது. இதனால் குற்றம் செய்த குற்றாவளிகளான பாதிரியார்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பல சிறார்களை தொடர்ந்து தங்கள் காமவெறிக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.
பாலியல் குற்றம் தொடர்பாக அமெரிக்காவில் தேடப்படும் சில பாதிரியார்கள் அமெரிக்காவை விட்டு தப்பி வாடிகனில் அல்லது ரோமில் சுதந்திரமாக திரிவதாக கூட ஒரு தொலைக்காட்சியில் கூறப்பட்டது. ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
இந்தக் குற்றங்களை கடந்த காலங்களில் பல ஊடகங்கள் வெளியிட்டு இருந்தாலும் வாடிகனின் போக்கில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.
2006ல் பிபிசி இந்தக் குற்றங்களைச் சார்ந்து ஒரு ஆவணப் படத்தை வெளியிட்டு உள்ளது. அந்த ஆவணப் படத்தில் ஒரு பாதிரியார் செய்த குற்றங்கள் குறித்து விவரிக்கப்படுகிறது. குற்றம் செய்த பாதியாரின் பெயர் டார்டிசியோ. முதன் முதலில் 1991ம் ஆண்டு இவர் செய்த பாலியியல் குற்றம் பிரேசிலில் வெளியாகி உள்ளது. ஆனால் இவர் மீது எந்த நடவடிக்கையையும் வாடிகன் எடுக்க வில்லை. மாறாக அவரை வாடிகன் இடமாற்றம் மட்டுமே செய்துள்ளது. இவர் இடம்மாறிய இடங்களில் எல்லாம் இத்தகைய குற்றங்களை தொடர்ச்சியாக செய்துள்ளார். இவர் குற்றம் செய்வதும், இடமாற்றம் செய்யப்படுவதுமாக நிலைமை இருந்துள்ளது. இவ்வாறு சுமார் நான்கு முறை இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இறுதியாக 2005ல் இவர் போலீசாரால் பிடிபட்ட பொழுது தான் இவர் பற்றிய விபரங்கள் வெளியுலகுக்கு தெரிய வந்தது. இந்தப் பாதிரியார் எழுதியுள்ள டைரியில் எழு வயது முதல் பத்து வயதிற்குட்பட்ட ஏழை மற்றும் பெற்றோர் இல்லாத அனாதைக் குழந்தைகளையே இவர் தன் பாலியில் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறியுள்ளார்.
பாதிரியார்கள் செய்த குற்றத்திற்கு போப்பாண்டவர் பெனடிக்ட் பொறுப்பாக முடியுமா ?
தற்போதைய போப்பாண்டவர், இந்தப் பதவிக்கு வரும் முன்பு திருச்சபை உறுப்பினர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு பொறுப்பான வாடிகன் அதிகாரியாக பொறுப்பு வகித்தவர். இதன் காரணமாக உலகெங்கிலும் நடக்கும் பல்வேறு பாலியல் அத்துமீறல்கள் குறித்தப் பிரச்சனைகளை நெறிப்படுத்தும் பொறுப்பும் ராட்சிங்கருக்கு இருந்து வந்துள்ளது.
இவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தும், குழந்தைகளை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய பாதிரியார்களை நெறிப்படுத்தும், ஒழுங்குப்படுத்தும், தண்டிக்கும் எந்த நடவடிக்கையையும் ராட்சிங்கர் எடுக்கவில்லை. மாறாக 2001ல் ராட்சிங்கர் ஒரு ரகசிய உத்தரவை பிறப்பித்து உள்ளார். அதன் படி பாதிரியார்கள் திருச்சபைகளில் செய்யும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட எல்லா செக்ஸ் குற்றங்களையும் மிகவும் ரகசியமாக பாதுகாக்க வேண்டும் என்ற உத்தரவை மறுபடியும் வலியுறுத்தியுள்ளார். அதாவது 1962ல் இருந்த உத்தரவை மிகவும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்பதே அவரது ரகசிய உத்தரவு. இவ்வாறு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிமென் (Crimen) எனப்படும் ரகசியத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை வலியுறுத்திய ராட்சிங்கர் இத்தகைய குற்றங்களை தடுக்கவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
அது மட்டுமில்லாமல் பாலியல் குற்றம் தொடர்பான ஒவ்வொரு குற்றத்தையும் வாடிகனுக்கு அனுப்ப வேண்டும் என்பதும், அவை வாடிகனின் நேரடிப் பார்வைக்கு வர வேண்டும் என்பதும் அவரது ஆணை. ஆனால் வாடிகனுக்கு அனுப்பப்பட்ட எந்தக் குற்றத்தின் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே போப்பாண்டவர் பெனடிக்ட் தான் கத்தோலிக்கத் திருச்சபைகளில் நடந்த எல்லா குற்றங்களுக்கும் முழு பெறுப்பேற்க வேண்டியவராகிறார்.
போப்பாண்டவர் பெனடிக்ட் மீது இத்தகைய குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு பாலியல் அத்துமீறலில் போப்பாண்டவர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதற்கான ஆதாரங்களைக்
கடந்த மாதம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டதை தொடர்ந்தே போப்பாண்டவர் குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவரத் தொடங்கி உள்ளன. கார்டினலாக பணியாற்றுவதற்கு முன்பு ஜெர்மனியில் பேராயராக பணியாற்றிய பொழுதும் ராட்சிங்கர் பாலியல் குற்றங்களை மூடிமறைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையெடுத்தே தற்போதைய போப்பாண்டவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல் குறித்து பிபிசி தமிழோசை இணையத்தளம் பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் முன்பு கேட்கும் திறன் அற்ற கிட்டத்தட்ட 200
சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தொடர்பாக தனக்கு என்னென்ன தெரியும் என்பதை உலகுக்கு வெளியிட வேண்டும் என்ற குரல்களை தற்போது போப்பாண்டவர் பெனடிக்ட் எதிர்கொண்டுவருகிறார்.
அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பகுதியில் ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்த சிறார்களை திட்டமிட்டு தொடர்ச்சியாக பாலியல்
துஷ்பிரயோகங்களுக்கு பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி உட்படுத்திவந்திருந்தார். இந்த துஷ்பிரயோகம் குறித்து லாரன்ஸ் மர்ஃபிக்கு மேலேயிருந்த திருச்சபை அதிகாரிகள் 1990களின் மையப் பகுதியில் அப்போது திருச்சபை உறுப்பினர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு பொறுப்பான வத்திகான் அதிகாரியாக இருந்த கார்டினல் ராட்ஸிங்கருக்கு இரண்டு முறை கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்படுகிறது.
போப்பாண்டவர் மீதான குற்றச்சாட்டு
பிற்பாடு போப்பாண்டவராக உருவெடுத்தவரான கார்டினல் ராட்ஸிங்கர் அக்கடிதங்களுக்கு பதில் எழுதியிருக்கவில்லை. பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி தனது கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும் அவர் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கவில்லை. போப்பாண்டவர் பெனடிக் உரிய
நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்று விமர்சகர்களும், துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியிருந்தவர்கள் பலரும் கூறுகின்றனர். திருச்சபைக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த விஷயத்தை மூடி மறைக்க நடந்த முயற்சிகளில்
போப்பாண்டவருக்கும் பங்கிருந்தது என்று கூட அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பிபிசியில் விடுபட்டுப் போன ஒரு தகவல் - பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி நேரடியாக ராட்சிங்கருக்கே ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதே சுமார் 200 காது கேளாத குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபியின் வேண்டுகோள். அதற்கு ராட்சிங்கர் என்ன விடை அளித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் சுமார் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்த லாரன்ஸ் மர்ஃபிக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. இறுதி காலம் வரை பாதிரியாராக இருந்து லாரன்ஸ் மர்ஃபி 1998ல் இறந்திருக்கிறார்.
இந்தத் தகவல்களை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ளது.
அமெரிக்காவில் வெளியான குற்றச்சாட்டினை தொடர்ந்து ஜெர்மனியிலும் ராட்சிங்கர் பாலியல் குற்றங்களை மூடி மறைத்தார் என்ற குற்றச்சாட்டும் தற்பொழுது வெளியாகி உள்ளது. பாதிரியார் ஹல்லர்மேன் ஜெர்மனியைச் சேர்ந்தப் பாதிரியார் ஆவார். இந்தப் பாதிரியார் பாலியல் குற்றம் செய்ததான ஒரு பிரச்சனை 1980ல் எழுந்தது. அப்பொழுது அங்கு பேராயராக இருந்தவர் ஜோசப் ராட்சிங்கர். ஒரு 11 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் பாதிரியார் ஹல்லர்மேன். பேராயராக இருந்த ஜோசப் ராட்சிங்கர் இந்தப் பாதிரியாரை முனிச் நகரத்திற்கு இடமாற்றம் செய்திருக்கிறார். ஆனால் பாலியல் குற்றம் குறித்து போலீசாருக்கோ, அரசாங்கத்திற்கோ எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இடமாற்றம் செய்யப்பட்ட பாதிரியார் இடம் மாறிய இடத்திலும் தொடர்ந்து பாலியல் வன்முறை செய்துள்ளார். இவ்வாறு இவரது பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றாலும் இவர் மீது கத்தோலிக்கத் திருச்சபை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது மட்டுமல்ல, இவர் தொடர்ந்து குழந்தைகளுடன் பணியாற்றவும் அனுமதித்து இருக்கிறது. இறுதியாக 1986ல் இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வளவு நடந்தும் அவர் பாதிரியார் பொறுப்பில் இருந்து விலக்கப்படவில்லை, கடந்த மாதம் இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியான பிறகே பாதிரியார் பொறுப்பில் இருந்து ஹல்லர்மேன் நீக்கப்பட்டார்.
இவையெல்லாம் போப்பாண்டவர் எத்தகைய பொறுப்புடன் இந்தப் பிரச்சனையை அணுகியிருக்கிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது.
போப்பாண்டவரை கைது செய்ய வேண்டுமா ?
போப்பாண்டவர் பல்லாயிரக்க்கணக்கான குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பாதிரியார்களின் குற்றங்களை மூடிமறைத்துள்ளார். அது மட்டுமில்லாமல் இந்தக் குற்றங்கள் குறித்த தகவல்கள் திருச்சபையை விட்டு வெளியில் செல்லாத வண்ணம் பாதுகாத்து மறைத்துள்ளார். அதற்கான உத்தரவுகளை பிறப்பித்து இந்தக் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற ”மறைமுக” காரணமாக இருந்துள்ளார். Pedophile என்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். அந்தக் குற்றத்தை மறைப்பதும், உடந்தையாக இருப்பதும் கிரிமினல் குற்றமே ஆகும். அந்த வகையில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை தங்களின் காமப்பசிக்கு இரையாக்கிய பாதிரியார்களை பாதுகாத்த போப்பாண்டவர் மிக மோசமான குற்றம் செய்த ஒரு கிரிமினல் என்ற குற்றச்சாட்டு உலகின் பல்வேறு நாடுகளில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த வாதங்களில் இருக்கும் உண்மையை யாராலும் மறுக்க முடியாது. போப்பாண்டவர் பாலியல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஒரு கிரிமினல் குற்றவாளி என்ற வகையில் அவர் போப்பாண்டவர் பதவியில் இருந்து விலக வேண்டும். அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.
போப்பாண்டவரை கைது செய்ய முடியுமா ? அது நடைமுறையில் சாத்தியமா ?
போப்பாண்டவர் கிறுத்துவ மதத்தலைவர் மட்டுமல்ல. வாடிகன் என்ற நாட்டின் தலைவரும் ஆவார். இந் நிலையில் அவரை கைது செய்வது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. ஆனால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் கற்பழிப்பிற்கு காரணமாக இருந்ததன் மூலம் மனித குலத்திற்கு எதிரான செயல்கள் புரிந்தவர் என்ற வகையில் அவரை கைது செய்ய முடியும் என சில பத்திரிக்கையாளர்கள் கூறி வருகின்றனர்.
போப்பாண்டவர் பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அப்பொழுது அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இதற்கான சட்டரீதியிலான முயற்சியில் சில வழக்கறிஞர்கள் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இவையெல்லாம் நடைமுறைச் சாத்தியம் அற்றது. என்றாலும், கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நடைமுறையில் சாத்தியமானதா என்பதைக் கடந்து தார்மீக நோக்கிலே சரியான கோரிக்கையாகவே உள்ளது. எனவே போப்பாண்டவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தொடர்ந்து எழுப்பியாக வேண்டிய சூழ்நிலையே தற்பொழுது உள்ளது.
************
மதங்கள் மக்களை மடையர்களாக்கவும், அடிமைகளாக்கவுமே உருவாக்கப்பட்டதாக தந்தை பெரியார் கூறுகிறார். மதத்தை புனிதத் தன்மை மிக்கதாகவும், மதவாதிகளை புனிதர்களாகவும் சமுதாயத்தில் கட்டமைத்து உள்ளனர். ஆனால் இந்த மதவாதிகளே பல்வேறு கிரிமினல் வேலைகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இது எல்லா மதங்களிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. மதத்தலைவர்கள் செய்த பல்வேறு பாலியல் வன்முறைகள், எல்லா நாடுகளிலும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு வெளிவந்தும் மதத்திற்கு புனித வட்டம் கட்டும் பணி எப்பொழுதும் நிற்பதில்லை. நித்தியானந்தாவின் பாலியல் வீடியோ காட்சிகள் வெளியான பொழுது ஹிந்து மதத்தின் புனிதத்தை அழிக்க முனைவதாக ஹிந்துத்வா கும்பல் அலறியது. ஹிந்து மதத்தின் ஆணிவேராக புனித வட்டம் கட்டப்பட்ட காஞ்சி மடத்தைச் சேர்ந்த ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி (
சமீபத்தில் நித்யாநந்தனின் லீலைகள்) ஆகியோரின் கிரிமினல் வேலைகளும், பாலியல் குற்றங்களும் கடந்த காலங்களில் வெளிவந்திருக்கின்றன. ஹிந்து மத சாமியார்கள் தொடங்கி கிறுத்துவ பாதிரியார்கள், போப்பாண்டவர் வரை எல்லோருமே பல்வேறு கிரிமினல் செயல்களை செய்து கொண்டே இருக்கின்றனர். அவர்களை பாதுகாத்து புனித வட்டம் கட்ட முனைவர்களும் தங்களின் பணிகளை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றனர். மக்களின் ஞாபக மறதி மட்டுமே வாழையடி வாழையாக தொடர்ந்து மதத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
Source:
http://blog.tamilsasi.com/