Translate this blog to any language

ஞாயிறு, 27 நவம்பர், 2011

War of the World - 'Water'! நீர்வழி காப்போம் -வெள்ளம் தவிர்ப்போம்!

உலகில் மழையின் அளவு குறைந்து வருகின்ற இந்த நாளில்
வெள்ளம் ஏற்பட்டு ஊர்கள் நாசமாகும் காரணம்தான்  என்ன?


ஒரு காலத்தில் மாதம் மும்மாரி பெய்தது என்று சொல்வார்கள். அதாவது மாதத்திற்கு மூன்று மழை வீதம் 36 நாட்கள் விடாத மழை என்று அர்த்தம்! இன்றைக்கோ இரண்டு நாள் 'ஒரு-சாதா சோதா' மழை பெய்தால் நாடு நகரங்கள் எல்லாம் அழிந்து போய்விடும் போல் இருக்கிறதே!

அட! ஒரு இயல்பான மழை பெய்வது கூட தவறா?

மழையைக் கண்டு நாம் பயப்படும் நிலை இங்கு ஏன் வந்தது?
தேங்கும் மழை நீர்! சட்டெனச் சூழும் வெள்ளம்!


சரி! திடீர் வெள்ளத்துக்கு என்ன காரணம்?

தனி மனிதனின் பேராசை என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். 

இருப்பினும், பேராசை காரணமாக கொலை, கொள்ளையில் ஈடுபடும்  ஒருவனை அரசாங்கம் சும்மாவா விட்டு விடுகிறது? கடுமையாக தண்டிப்பதில்லையா?

இந்தத் தண்ணீர் விஷயத்தில் மட்டும் அது போன்ற கடுமையான தண்டனைகள் எவனுக்கும் தரப்படுவதில்லை! அதனால் தான் இந்தத் வெள்ளம்-வெள்ள சேதங்கள் இத்யாதி!


திடீர் வெள்ளம் ஏற்படும் காரணங்கள்:

1.   நீரின் இயல்பு மேட்டில் இருந்து பள்ளத்துக்கு செல்வது.
2.   உயரமான மலைகளில் இருந்து கடைசி கடைசியாக தண்ணீர் 
      கடலைச் சென்று அடைகிறது.
3.   அதன் நீர்வழியானது  மலைகள்-நீர்வீழ்ச்சி-அணைகள்-அருவிகள்-ஆறுகள்-
      உபரியான மழைநீர் கடலுக்குள் சென்று சேர்ந்து விட வேண்டும்!

4.   இந்த ஓடைகளின் பங்கு மிக மிக முக்கியமானது! அவையே 
      தொடர்ந்த இணைப்பு வழியை ஏற்படுத்தி தங்கு தடையற்ற நீர்வழிப் 
      பாதையை கொண்டு உபரி நீரைக் (surplus water) கடலுக்குள் சென்று 
      சேர்க்கிறது?

இன்றைக்கு அந்த உபரி நீர் (surplus water) செல்லும் "ஓடைகள்" 'கால்வாய்கள்' எங்கே போயின?


'ஓடைப் புறம்போக்கு' 'கால்வாய்ப் புறம்போக்கு' என்று நிலப் பதிவேடுகளில் குறிக்கப்பட்டுள்ள அந்தக் கால்வாய் நிலங்கள் ஏறத்தாழ எல்லாவற்றையும் தமிழகத்தின் எல்லா சிறு/பெரு நகரங்களிலும் சமூக விரோதிகள் சிறுக சிறுக மூடி அதன் மீது வீடுகள்-கடைகளைக் கட்டி வைத்து விட்டனர். இன்று நீர்வழிகள் அதனால் அடைந்து போய்விட்டன!

அந்தக் கட்டிடங்களுக்கு கையூட்டுப் பெற்றுக் கொண்டு /அல்லது அறிவே இல்லாமல் கண்ணை மூடிக் கொண்டு மின்சார இணைப்பு, குடிநீர்-கழிநீர் இணைப்பு தந்து, நகர வரி வசூலிக்கும் அரசு அதிகாரிகளைக் கடுமையாக தண்டிக்கவேண்டும். அதுவும் கிரிமினல் சட்டங்களின் கீழ்! முடிந்தால் அவ்வதிகாரிகளின் சொத்துக்களையும் முடக்க வேண்டும்! 

அரசு நில-ஆக்கிரமிப்புகள்/அபகரிப்புகள் ஏன் நிகழ்கின்றன?

விவசாயத்தை அரசு ஊக்கப் படுத்தாமல் கிராமங்கள் இன்று மெல்ல அழிந்து வருகின்றன! அதனால் நீர்ப் பாசன பராமரிப்புகளும் அங்கு அடியோடு இல்லாமல் போய்விட்டன! இளைஞர்கள் தற்போது நவீன தொழில் துறைக்கு இடம்பெயர முதியவர்கள் அங்கு ஏதும் செய்ய இயலாமல் இருக்கிறார்கள்! கிராமங்களில் இருந்து வேலை வாய்ப்பு தேடி சிறு-பெரு நகரங்களுக்குக் குடி பெயரும் மக்கள் அங்கு நிலவும்  வாடகையைக் கேட்டு மயக்கம் போடாத குறை! உடனே கண்ணில் தெரிகிற காய்ந்து போன ஏரிகள், குளக்கரை, கால்வாய்களின் மீது ஒரு சிறு குடிசைப் போட்டு வாழ ஆரம்பித்து விடுகின்றனர்! ஏதோ ஒரு 'எம்-ஜி-ஆர்' நகர் ராஜீவ் நகர் என்று பெயர் வைத்துக் கொள்வார்கள்...பக்கத்தில் அப்போது  ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியின் கொடி பறந்து கொண்டு இருக்கும்! அவர்கள் ஏரிகளை அவ்வப்போது உடைத்து விடுவார்கள்...குளம் குட்டைகளைச் சிறுக சிறுக மூடுவார்கள்..குடிசைகள் கட்டுவார்கள் அவை ஓடு வீடுகள் ஆகி பிறகு கட்டிடங்களாக உருமாறும்!

அதனால் தான் இன்றைக்கு நகர்ப் புறங்களில் குழந்தைகள் விளையாட-நடமாட ஒரு இடம் கூட இல்லாமல் போய் விட்டது! அரசுக்குச் சொந்தமான ஒரு சின்ன வளைவு-நெளிவு இடங்களைக் கூட விட்டு விடாமல் ஆக்கிரமித்து வீடு-கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு சென்னை-கோவை-திருச்சி போன்ற நகரங்களை இன்று 'நரகங்கள்' ஆக்கிவிட்டனர்-சமூக விரோதிகள்!


போகட்டும்! இதெல்லாம் வெயில் காலத்துக் கதை!

மழைக் காலம் வந்தால் உபரி நீர் போக வழி இன்றி (உபரி நீர் போகும் வழி முழுவதையும்தான் இந்தப் பேராசை பிடித்த மனிதர்கள் அடைத்துக் கொண்டு இருக்கிறார்களே!) அது பாவம் அலைபாய்ந்தபடி அல்லாடி அல்லாடி கண்ட இடத்திலும் புகுந்து வழி தவறி...கடைசியில் வழி கண்டுபிடித்து கடலைச் சென்று சேர்வதற்குள் ஊரு முழுசும் நாறிப் போய்விடுகிறது!

ஒரு முரண்பாடு, வெயில் காலம் வந்ததும் ஏதோ அரபு நாடுகள் போல இங்கே தண்ணீர் பஞ்சமும் வந்து விடுகிறது! பக்கத்து மாநிலங்களில் கையேந்திப் பிச்சை எடுக்கும் நிலை! கண்டவனும் இங்கே 'பிளாஸ்டிக்' பாட்டிலில் தண்ணீரை அடைத்து 50-100 க்கு விற்க வேண்டியது!! என்னடா இது? ஒருநாள் வெள்ளம்-மறு நாள் வறட்சியா ! இந்த நவீன் உலகில் இப்படி இருந்தால் எவனாவது நம்மை மதிப்பானா?

இனி அரசுகள் செய்யவேண்டியது:

1.  அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா தருகின்ற முட்டாள் தனத்தை 
      அடியோடு நிறுத்த வேண்டும்! அது அதற்கான நிலத்தை அது-அதற்கே            
     பயன் படுத்த வேண்டும்-அது எவ்வளவு யுகங்களானாலும் சரி ! 
     அதிகாரிகள் யார் அதை reclassification போட்டு மாற்றுவதற்கு? 
      (ஏரி புறம்போக்கு, கால்வாய் புறம்போக்கு மேய்ச்சல் 
      புறம்போக்கு, குட்டை புறம்போக்கு, கோயில் புறம்போக்கு,   
      போன்ற அரசு நிலங்கள்)
      
2.  ஏற்கனவே சிட்டா-அடங்கல் புத்தகங்களில் Village A-Register இல் பதிவாகி
      உள்ள அரசு நிலங்களை கையகப் படுத்தி அதன் எல்லைகளை உறுதி 
     செய்து கல் நடவேண்டும். அரசு நில-மீட்பு, நில-காப்பு இவற்றில் அதிக 
     உறுதி தேவை. நில உரிமைச் சட்டங்களில், தண்டனைகளில் அதிக 
    கடுமை தேவை! அதிக தண்டங்கள் விதிப்பது-சொத்துக்களை ஏலம் விடுவது 
    போன்ற நடவடிக்கைகள் அவசியம்!

3.  சில நூறு மனிதர்களின் பேராசைக்கு ஒரு நாகரீகமுள்ள பெரும் 
     சமூகம் அழியத்தான் வேண்டுமா என்பதை அரசு தீர்மானிக்க 
     வேண்டும்! இங்கே ஏழைகள் என்பவர்கள் வேறு; சமூக விரோதிகள் 
     என்பவர்கள் வேறு என்பதை நாம் அறிய வேண்டும்;இரண்டையும் 
     குழப்பிக் கொள்ளக்கூடாது !

     பணம் ஒதுக்கும் தொகையில் அதை செய்து விடலாம்! வருடா வருடம் 
    மத்திய அரசிடம் நாம் பிச்சை கேட்கும் நிலையும்  இருக்காது!

5.  நீர்-வழிகள் சரியாய் இருந்தால் வெள்ளம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
   
       -யோஜென் பால்கி 

🌿🌿

நீர் வழிகளை குறிக்க தமிழில் பல்வேறு பெயர்கள் உள்ளன: 

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் 

01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

03. ஆழிக்கிணறு - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

04. ஆறு - (River) – பெருகி ஓடும் நதி.

05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

06. உறை கிணறு -(Ring Well) மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

07. ஊருணி -(Drinking water tank) மக்கள் பருகும் நீர் நிலை.

08. ஊற்று – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

10. ஓடை (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

11 கட்டு கிணக்கிணறு (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

12. கடல் - (Sea) சமுத்திரம்.

13. கம்வாய் (கம்மாய்) -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

14. கலிங்கு - (Sluice with many Ventures) ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. கால் – (Channel) நீரோடும் வழி.

16. கால்வாய் - (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

17. குட்டம் – (Large Pond) 
பெருங்குட்டை.

18. குட்டை - (Small Pond) 
சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

19. குண்டம் - (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

20. குண்டு – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. குமிழி – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

22. குமிழி ஊற்று – (Artesian fountain) - அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 . குளம் - (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

24. கூவம் – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

25 . கூவல் – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

26. வாளி (strea |m) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

27. கேணி –( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.

28. சிறை - (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

29. சுனை - (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

30. சேங்கை – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.

31. தடம் - (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

32 . தளிக்குளம் - (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

33. தாங்கல் – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

34. திருக்குளம் – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.

35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

36. தொடு கிணறு - (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

37. நடை கேணி – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.

38. நீராவி - (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்.

39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

40. பொங்கு கிணறு - (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.

41. பொய்கை - (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

42. மடு - (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

43. மடை - (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

44. மதகு - (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.

45. மறு கால் - (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

46. வலயம் - (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.

47 வாய்க்கால் - (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்.

Courtesy: Twitter

Swarna
@swarna718051021

வெள்ளி, 4 நவம்பர், 2011

"Rain-Chennai" a Menace! மழை காலச் சென்னை 'நரகம்' !



சென்னையில் (Chennai-dwellers) வாழ்பவர்களுக்கு எப்போதுமே மழைக்காலம் ஒரு அபாய காலம்! சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டக் காரர்கள் மழையை உளமார வரவேற்பார்கள்! ஆனால் சென்னைவாசிகள்  'ஐயோ இந்த மழை வந்து தொலைத்து விட்டதே' என்று சபிப்பார்கள்! 

காரணம் மழை அல்லவே அல்ல!
மழையின் பின் தொடர்ச்சியாக இங்கு வாழும் மனிதர்களுக்கு நிகழும் துன்பங்களே அவை!

அத்துன்பங்களில் 90% - த்தை  தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்த /வருகிற மாநில அரசுகள் குறைத்து இருக்கலாம்! அனால் அது ஒரு 'சிந்துபாத்' தொடர் கதையாகவே இங்கு இருந்து வருகிறது! என்னைக் கேட்டால் குறைந்தது நாற்பது வருடங்களாக சென்னையில் தண்ணீர் தேங்கும் நூற்றுக்கணக்கான சாலைகள் தெருக்களை என்னால் எளிதில் சொல்ல முடியும்! இங்கு நெடுங்காலமாய் வாழும் சென்னை மக்கள் பலருக்கும் அது தெரிந்த இரகசியமே ஆகும்!


சென்னையில் மழையின் பின் விளைவுகளைப் பார்ப்போம்!

1  தெருக்களிலும் சாலைகளிலும் தேங்கும் மழை நீர்! (stagnant water)

2  மழை நீரோடு சேர்ந்த சாக்கடை நீர், சேறு, சகதி மற்றும் குப்பைகள்!
(rain water plus sewage wastes)

3  தெரு அல்லது சாலைகளில் தேங்கும் மழை நீருக்குள் மறைந்து கிடக்கும் 
திறந்த பாதாள சாக்கடை மூடிகள் /பள்ளங்கள்!
(hidden danger of opened man-hole covers)

4 உடைந்த/ சிதைந்த சாலைகள் மற்றும் ஒழுங்கற்ற நடைபாதை மேடைகள்!
(dilapidated and hazardous streets/roads/platforms) 

5 தண்ணீருக்குள் கிடக்கும் மின்சார வயர்கள்! (hidden live electric wires)

6 வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து செல்லும் போது நம்மீது தெறிக்கும் சாக்கடை தண்ணீர்! 

7 நடக்கக் கூட இடம் இன்றி தெருவில்/சாலையில் சூழும் 
மழைநீர்/சாக்கடை நீர்!

8 சாலைகளில் உள்ள மேடு பள்ளங்களால் மெதுவாய் நகரும் வாகனங்கள். அதனால் ஏற்படும் கால விரயம், எரிபொருள் விரயம், சக்திவிரயம், பண விரயம், கெட்ட பெயர், பரபரப்பு, கோபம், ஒருவருக்கு ஒருவர் போடும் சண்டைகள், அதன் பின்விளைவுகள்! (undue traffic due to ditches /dilapidated roads) 

9 மழைகால இரவுகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகையில் தெருவில் சூழும் இருள். அதனால் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் சற்று தூரம் நடப்பதற்கு கூட அஞ்சுவது! அட! வாகனங்களில் கூட ஆண்கள் போக தயங்கும் அளவுக்கு தெரு/சாலைப் பள்ளங்கள்! ( Frequent Power cut due to heavy rain/darkness in streets)

10 மழையினால் இத்தனை துன்பங்கள் இருக்கையில் பேருந்து மற்றும் ஆட்டோக்களை ஓட்டும் ஓட்டுனர்களும் வண்டி ஓட்ட அதிகம் சிரமம் கொள்கிறார்கள்! அதனால் பேருந்துகள்-ஆட்டோக்கள் போக்குவரத்தும் மழை நாட்களில் குறைந்து விடுகின்றன. விளைவு: அதிகக் கட்டணம்! அல்லது பிதுங்கி வழியும் பேருந்துகள். ( Risky driving/ Excessive charges)

இவை தவிர நான் சொல்ல மறந்த இன்னும் பல சிரமங்களும்  இருக்கலாம்!











இதையெல்லாம் ஒரு மாநில அரசு சரி செய்ய முடியவே முடியாதா?
"ஒரு சிறு மழையைக் கூட தாங்க முடியாத சென்னை" என்னும் அவப் பெயரை நம்மால் நீக்கவே இயலாதா?
உலகில் இதை விட அதிகம் மழை பெய்யும் நாடுகள் அதில் உள்ள அழகிய சாலைகள்/தெருக்களை நாம்தான் தொலைக் காட்சிகளில் தினமும் பார்க்கின்றோமே! அவ்வளவு ஏன். பக்கத்தில் உள்ள பெங்களூருவிலும்  (Bangalore)அய்தராபாதிலும் (Hyderabad) இதைவிட சிறப்பான சாலைகள்/ தெருக்கள் இருப்பதை நம்மில் பல பேர் பார்த்திருக்கிறோமே! மேலும், குஜராத் (Gujarat) அதை விட அழகாக இருப்பதாக பார்த்தவர்கள் சொல்கிறார்களே!



இனி தமிழ் நாடு மாநில அரசு செய்யவேண்டியது:

1 வருடா வருடம் தண்ணீர் தேங்கும் சாலைகள்/தெருக்களை பிரித்து இனம் காணுதல். சிறப்பு கவனம் தருதல் !
(Finding out the low-lying water lagging streets/roads)
2 மத்திய அரசு போடும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையான தரத்தை உறுதிப் படுத்துதல்! ( Ensuring an high standard like in National high ways roads)

3 நல்ல தகுதியுள்ள பெரிய பெரிய கட்டுமான நிறுவனங்களிடம் வேலைகளை ஒப்படைத்தல்! (நாலு ஆணி ஒரு கோணி வைத்திருக்கும் சிறிய 'லெட்டர்-பேட்'  ஆசாமிகளுக்கு காண்ட்ராக்ட் தந்து மாநில அரசின் பெயரைக் கெடுத்துக் கொள்வது ஏனாம்! மக்கள் பேசிக் கொள்வது போல "வேறு-வேறு" காரணங்களா?) ( Awarding the jobs to giant constructions companies)

4 ஒரு தெருவோ-சாலையோ போட்டால் குறைந்தது ஐந்து வருடங்கள் அவை பொத்தல் விழாமல் இருக்கவேண்டும் ! அடிக்கடி தெருக்களை தோண்டுவது-மூடுவது என்ற மடத்தனம் கூடாது. அதற்கேற்ற படி திட்டமிட வேண்டும்!
(Ensuring the good roads/street for another 5 years. Save hills and natural resources)
(மாத மாதம் 'தார்' போடுவது, மலைக்கற்களை உடைத்து ரோடு போடுவது இவற்றால் நம் இயற்கை வளங்களும் சாலைகளுக்குள் மறைந்து வீணாகின்றன!மலைகளை மீண்டும் மீண்டும் நம்மால் உண்டாக்க முடியுமா?)

5  மக்கள் பணத்தை வீணடிக்கும்/திருடும் கூட்டத்துக்கு கடும் "தண்டனைகள்" தந்து அவர்களின் சொத்துக்களை அரசு கையகப் படுத்தவேண்டும்!
(Do give corporal punishments to economic criminals & recover their assets)

6  நேர்மையான அதிகாரிகள் நிறுவனங்களுக்கு மக்கள் மதிப்பிட "பரிசுகள்" வழங்கி கவுரவிக்க வேண்டும்! ( Award prizes for genuine officers and companies)
(தண்டனை அல்லது பரிசு என்னும் முறை இல்லாமல் எந்த ஒரு அரசும்/ இயக்கமும்/ நிறுவனமும் உருப்படவே உருப்படாது! without the "Prize or Punishment method" no Govt/movement/sector can do any wonder ever)


எது எப்படியோ!
இந்த மழைக் காலம் வரும் திசம்பர் 20 வரை நமக்கு நீளும்!
அது வரை ஒரு பத்தடி தூரத்துக்கு முழுதாய் ஒரு பள்ளமோ பழுதோ இல்லாத எந்தவொரு தெருவையோ/சாலையையோ நாம் சென்னையில் பார்க்க முடியாது! அது நம் சென்னை வாசிகளின் தலை எழுத்து! 
பார்த்துப் பார்த்து நாம் நடக்க வேண்டும்; நம் உடம்பும் வாகனமும் பழுது படாமல் காக்கவும் வேண்டும்!
மேலும், இப்பொழுதே சென்னையை சுற்றிலும் உள்ள ஆறு குளங்கள் அணைகள் நிரம்பி வருவதால் வெள்ளம் வரும் அபாயமும் கண்ணில் தெரிகிறது! அப்போது, சென்னை இன்னும் "புண்-பட்ட" நரகமாகும்!!

அதுவரை "சென்னை-நரகம்" சகித்து கவனமாய் நடக்கவும்  பயணம் செய்யவும் 
என் சக சென்னை நண்பர்களை திடீர் விருந்தினர்களை வேண்டுகிறேன்!

-யோஜென் பால்கி
yozenbalki
_________________________________
பிற்சேற்கை: ஒரு சோகமான செய்தி! இந்த வலைப்பூவை நான் எழுதிக் கொண்டிருந்த அல்லது வெளியிட்ட அதே வெள்ளிக் கிழமை இரவில் சென்னை தியாகராய நகரில் வடக்கு உஸ்மான் சாலையருகில் 24 வயது ஆசிரியை சரளா என்னும் இளம் பெண், மழை நீர் தேங்கி மறைத்திருந்த சாக்கடைப் பள்ளத்தில் விழுந்து உயிர் இழந்தாள்! மறுநாள் சனிக் கிழமை அச்செய்தி எல்லா நாளிதழ்களிலும் வந்திருந்தது! அரசின் அலட்சியத்துக்கு ஒரு அளவே இல்லையா? (ச்சே!இந்தியாவில் தான் இதுபோல் நடக்கிறது) அதன் பின் என்ன நடக்கும்...எப்போதும் போல செத்துப் போனவர்கள் குடும்பத்துக்கு மக்கள் வரிப்பணத்தையே எடுத்து கொடுத்து நல்ல பெயர் வாங்கும் சடங்கு தொடரும்! இது போன்ற அப்பாவிகள் இறப்பதற்கு  காரணமான அதிகாரிகளுக்குத் தண்டனை தருகின்ற செய்திகள் எப்போதாவது வந்ததுண்டா? பின் எப்படி நாடு உருப்படும்? என்ன கருமமோ!

Woman falls into stormwater drain in Chennai, dies
A 24-year-old woman died on Friday night after she fell inside a stormwater drain on North Usman Road, T. Nagar which was left open by authorities.
Pondy Bazaar police identified the deceased as M. Sarala of Anna Veethi, 1st Street in MGR Nagar. The victim was heading home after attending a Spoken English class at a school on Krishna Street in the area. Her body was recovered this morning and sent to Government Royapettah Hospital for post-mortem, police sources said.
http://www.thehindu.com/news/cities/...cle2600777.ece