Translate this blog to any language

வெள்ளி, 8 ஜூன், 2012

உன்னத மனிதர் திரு. ஜாதவ் பயேங் (Jadav Payeng)


இந்தியாவின் பெருமை திரு. ஜாதவ் பயேங் (Jadav Payeng. Called as 'Mulay')!

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது... நம் எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். கேட்டால் 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை ' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி அடக்கமாய் முடித்துக் கொள்கிறார். அப்படி என்ன செய்தார்?!! 

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் 
தனி நபராக ஒரு அழகிய பசுமைக் காட்டை
உருவாக்கி இருக்கிறார்...!

யார் இவர் ?  

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண கிராமவாசி 
திரு.ஜாதவ் பயேங் , அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அன்புடன் அழைக்கின்றனர். 

பிரம்மபுத்திரா நதியில் 1979ம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வரப்பட்டிருக்கிறன. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால்தான் இந்நிலை எனப் புரிந்து கொண்டபோது இவரது வயது 16! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம் முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்... ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார்.

1980ம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தில் அங்கு வாழும் மக்கள் மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்றுவிட, இவர் மட்டும் மரக்கன்றுகளை பராமரித்துக் கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும் மற்றவர்களும் இதனை அப்படியே மறந்து விட்டனர். அந்த பக்கம் யாரும் எட்டிக் கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு:

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்... ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்புகளை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு வெகு விரைவில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்... இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள்!!

இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும்,உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.

2008ம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என்று வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக ஆச்சர்யம்  அடைந்திருக்கின்றனர்.

மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்துக் கொள்கிறார்.

டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபடத் தயார்," என்கிறார் இந்தத் தன்னலமற்ற மாமனிதர்!!
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இதுவென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த, எந்தப் பெரும் படிப்பும் படிக்காத பாமரர் இவரை என்ன சொல்லி எந்த மொழியில் பாராட்ட?

மெத்தப் படித்தவர்கள் கேள்வி முறையின்றி மரங்களை வெட்டிச் சாய்த்து 'கான்க்ரீட் சிறை-நகரங்களை' உருவாக்கிக் கொண்டிருக்க, படிக்காத பாமர தெய்வங்கள் அழகிய வனங்களை இந்நாட்டில் சப்தமின்றி உருவாக்கிக் கொண்டு தான் இருக்கின்றனர்! வெட்கப்பட வேண்டும் நாம்! 

ஜாதவ் போன்ற மனித தெய்வங்களை வணங்கி, அவரளவுக்கு இல்லாவிட்டாலும் நம் வாழ்வில் குறைந்தது பத்து மரங்களாவது நட்டு வளர்ப்போம்!

புவி வெப்ப மயமாவதை தடுத்து நமது வருங்கால சந்ததிகளுக்கு இந்த பூமியை ஒரு 'வாழும்-நிலையில்' நாம் விட்டுச் செல்லுவோமே!

- நன்றி: http://tamil.webdunia.com
                   http://www.huffingtonpost.com
                   http://www.treehugger.com
_________________________________
மேலதிக விவரங்களுக்கு: Jadav "Molai" Payeng
Go to Google and just type "Jadav Payeng" or 'Jadav "Molai" Payeng.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: