Translate this blog to any language

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

தள்ளுவண்டி காய்கறி 5 இலாபம் என்ன?

ஒரு தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஒருவரின் வித்தியாசமான சப்தம் என்னைக் கவர்ந்தது.

 “சார் என்னிடமிருந்து காய்கறிகள் வாங்கினால், சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் வாங்குவதை விட உங்களுக்கு 5 நன்மைகள் அதிகம் அந்த நன்மைகள் என்னவென்று தெரிய வேண்டுமா”.

திரும்பி பார்த்தேன். 

ஒரு அழுக்கு கைலியும் சட்டைக்கு பதில் தோளில் ஒரு துண்டும்அணிந்த ஒரு இளைஞன். 

பக்கத்தில் இருந்த செயறில் ஆறேழு வயதில் ஒரு பையன். 

அவன்தான் கேஷியர் என்று நினைக்கிறேன். 

நான் வாங்க நினைத்த என்னுடைய லிஸ்ட்டிலுள்ள அனைத்து காய்கறிகளும் இவரிடமும் இருக்கிறது. 

இன்று இவரிடமிருந்து வாங்கினாலென்ன?. (வீட்டுக்காரிக்கு தெரிய வேண்டாம்).

“அந்த ஐந்து நன்மைகள் என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா”.

கண்டிப்பாக..... 

சார் என்னிடமிருந்து வாங்கும் காய்கறிகளுக்கு நீங்கள் ஜி எஸ் டி தரவேண்டாம். 

நூறு ரூபாய்க்கு ஆறு ரூபாய் லாபம். 

முதல் நன்மை.

சார் நீங்கள் சூப்பர் மார்க்கேட் செல்ல வேண்டாம், நானே உங்கள் வீடு தேடி வந்துள்ளேன். நேரம், பெட்ரோல், மற்றும் உழைப்பு மிச்சம். சிரமம் இல்லை.

இரண்டாவது:

சார் நீங்கள் வாங்கும் பொருட்களை கொண்டு போக நான் தரும் கவர் ஃப்றீ... 

சூப்பர் மார்க்கெட்டில் இந்த கவருக்கு குறைந்தது ஐந்து ரூபாய் தர வேண்டும். 

( நாம் காசு கொடுத்து வாங்கும் கவரில் அவர்களுடைய விளம்பரம்). 

இது 2வது நன்மை.

மூன்றாவது நன்மை என்ன என்று அறிய ஆவலுடன் அவரைப் பார்த்தேன். 

சார் சூப்பர் மார்க்கெட்டில் அவர்கள் கேட்கும் விலையை நீங்கள் கொடுக்க வேண்டும். 

எங்களிடம் நீங்கள் விலை பேசி வாங்கலாம். 

நூறு ரூபாய் பொருளை 80 ரூபாய்க்கு கேட்டாலும் தருவோம். 

ஏனென்றால் எங்கள் வயிற்றுப்பிழைப்பு இது. 

எங்களுக்கு வேறு வருமானம் ஒன்றும் இல்லை. 

20 ரூபாய் லாபம் இது மூன்றாவது நன்மை.

சரிதான் என்று தலையாட்டிவிட்டு அவரையே பார்த்தேன்.

 “சார் நான்காவது நன்மை இந்த காய்கறிகள் பக்கத்து கிராமங்களில் நாங்களே இயற்கையாக பூச்சிக்கொல்லி மருந்துகள் ஒன்றும் தெளிக்காமல் விவசாயம் செய்தது. 

இந்த காய்கறிகளை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த தீங்கும் வராது சார்...

அவர் சொல்வது அனைத்தும் சரியாகவே எனக்கு பட்டது. 

மேலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் அவர்கள் கேட்கும் விலையை கொடுத்து, விஷம் சேர்த்த காய்கறிகளை கியூவில் நின்று வாங்குவதற்கு தயாராகும் நாம் இதையெல்லாம் சிந்திக்கிறோமா?.....

சிந்தனையில் நிற்கும்போதே நான் கொடுத்த லிஸ்டில் உள்ள காய்கறிகளை பேக் செய்து கொடுத்தார். 

அவர் கேட்ட தொகையை கொடுத்தேன். 

பிறகு நான் அவரிடம், “எல்லாம் சரி ஐந்தாவது நன்மை என்னவென்று சொல்லவே இல்லையே” என்றேன் ஆவலுடன்.

“இது என்னுடைய மனைவி இவளுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது. 

இவளுடைய மருத்துவத்திற்காக நான் யாரிடமும் கையேந்தியதில்லை. 

நீங்கள் விலை பேசாமல் கொடுத்த இந்த பணத்தின் ஒரு பகுதி இவளுடைய மருத்துவ செலவிற்கு உபயோகப்படும். 

இதுவும் நீங்கள் செய்யும் ஒரு சாரிட்டிதான் இதற்குரிய நன்மை இறைவனிடம் இருந்து உங்களுக்கு கிடைக்கும். புண்ணியம் கிடைக்கும்.

இதுதான் நான் சொன்ன ஐந்தாவது நன்மை.

புன்னகையோடு அவர் சொல்லி நிறுத்தினாலும் அவருடைய கண்கள் நிறைந்திருந்தது நானும் கண்ணீரை மறைக்க முயன்று தோற்றேன்!

இது போன்ற துக்கங்களும், துயரங்களும் வழியோரங்களில் வியாபாரம் செய்யும் பலருக்கும் இருக்கலாம். 

நம்மால் இவர்களுக்கெல்லாம் உதவ முடியுமா?

கோடிக்கணக்கில் மூலதனமுள்ள சூப்பர் மார்க்கெட் முதலாளிகளுக்கும், கார்ப்ரேட்டுகளுக்கும் பாக்கெட் நிறைக்க நாம் கொடுப்பதில் ஒரு பங்கை இதைப்போன்ற வழியோர சிறுகடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கும் கொடுத்து உதவுவது அல்லவா உண்மையில் தொண்டு!

(Courtesy: WhatsApp University)
😂😂


புதன், 29 செப்டம்பர், 2021

எங்களை பார்த்து நீங்க திருந்திக்கணும்! ஹிந்தி வேண்டாம்

பெயர் வெளியிட விரும்பாத ஒரு பெண்மணி:

கடந்த சனிக்கிழமை ஹஸ்பெண்டோட ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருந்தோம்.

அவரோட அப்பா பெங்களூர் யுனிவர்சிட்டி ரிட்டயர்டு ப்ரஃபசர்.

கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, துளு, ஆங்கிலம் என பல்மொழி வல்லுனர்.

கன்னட மொழி குறித்து ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கியவர்.

கன்னடர். அவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. 

 அவர் கூறியது, எனது ஹிந்தி மொழிகுறித்த சிந்தனையையே மாற்றிவிட்டது.

அவர் கூறியது... :

உங்கள் தமிழகம் போல ஆட்சி செய்யனும்னுதான் நாங்களும் விரும்பறோம்... 
( அவர் சொன்னது மேடம் மறைவுக்கு முன்னர் வரையிலான அரசுகள்..)

அங்க கருணாநிதியும் ஜெயலலிதாவும் அருமையான கட்டமைப்பை உருவாக்கி வச்சிருக்காங்க. 

ஆனா இப்ப அங்கேயும் வடமாநில ஆதிக்கம் ஊடுறுவரத பாக்க முடியுது. 

ரொம்ப வேதனையா இருக்கு.

 எங்களை பார்த்து நீங்க திருந்திக்கணும். 

இங்க பெங்களூர்ல ஹிந்தி மொழி ஆதிக்கம் வந்து பல காலமாகிடுச்சி.

கொஞ்சம் கொஞ்சமா ஊடுருவி இப்ப எங்களால சமாளிக்க முடியாத அளவு ஆக்கிரமிச்சிட்டாங்க.

அவன் வடநாட்டுல எங்கிருந்தோ இங்க வந்து ஹிந்தில பேசறான். 

 எனக்கு ஹிந்தி மட்டுந்தான் தெரியும்னு ஆணவமா சொல்றான்.

கன்னடம் தெரியாதுங்கறான்.

எவரும் உலகத்துல எங்க போனாலும் அந்த பிரதேச மொழியில பேசறதுதான் வழக்கம். 

ஆனா இங்க மட்டும் அவனுக்காக நாங்க எங்க தாய்மொழிய விட்டுவிட்டு அவன்கிட்ட ஹிந்தில பேசற நிலைமைக்கு வந்துட்டோம்.

 மொழிங்கறது வெறும் பேச்சில்லைமா.

அது வாழ்க்கை. 
ஜீவாதாரம்.

ஆனா நாங்க அந்த ஜீவாதாரத்தை தொலைச்சிகிட்டு இருக்கோம்.

இப்ப எங்க தாய்பூமி பெங்களூர்ல குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வாழ முடியும்கிற அளவுக்கு ஒடுக்கப்பட்டு வருகிறோம்.

சிட்டியில முக்கிய இடங்கள்ல அவனுங்கதான் வாழறாங்க.

.... சித்தராமையா கூட

நான் ஸ்கில் லேபர்ஸ் கன்னடர்களாகத்தான் இருக்க வேண்டும் என சட்டம் போடப்போறதா அறிவிச்சாரு. 

ஆனா முடியவில்லை. 
வடமாநில பிரஷர்தான் காரணம்மா.

இதுக்கெல்லாம் அடிப்படை காரணம்..

தமிழகம் மாதிரி மாநிலநலன் சார்ந்த கட்சிகளை நாங்க ஆதரிக்காம தேசியகட்சிகளை ஆதரித்ததுதான் மிக முக்கிய காரணம்.#

தமிழகம் போல இருமொழி கொள்கை இல்லாம மும்மொழி கொள்கையை ஏற்றதுதான் அழிவு!

நவோதயா பள்ளி ஆரம்பிச்சா மத்திய அரசு நிதி தரும்.
அது தரும் இது தரும்னு 
ஆசை காட்டுவாங்க. 

அது உங்க நன்மைக்கு இல்லை. 

அவன் ஆளுங்களுக்கு வாழ்வாதாரத்தை அதிகப்படுத்ததான்.

தமிழுக்கு என்னம்மா குறை??

ஏன் ஹிந்தி கற்க ஆர்வப்படுறீங்க..?

உள்ளூர் தொடர்புக்கு தமிழ் ,
உலகத்தொடர்புக்கு ஆங்கிலம் போதும்மா.

இப்பவே பல நிலைகளிலும் உங்க வேலைவாய்ப்புகளை ஹிந்திகாரங்க பறிக்க துவங்கியாச்சி. 

நீங்க ஹிந்திமேல ஆர்வப்பட்டா அவங்க ஊடுருவுவதும் தன் ஆட்களை தென் மாநிலங்களில் குடியேற்றுவதும் எளிதாகிவிடும்...

எனவே,
அனுபவபட்டவன் என்கிற முறையில நான் சொல்றேன்.

ஹிந்தி கற்க ஆர்வப்படாதீங்க.

ஒருவேளை வடமாநிலத்துக்கு யாராவது வேலைக்குபோனா அவன் தானா ஹிந்தி கத்துக்குவான்.

ஹிந்தி கத்துக்க ஆர்வப்படாதீங்க. மும்மொழிக்கொள்கையை ஆதரிக்காதீங்க.

தேசிய கட்சிகளை ஆதரிக்காதீங்க.
இதெல்லாம் செஞ்சா உங்க
வாழ்வாதாரமே சீரழிஞ்சிடும்.

 உங்க தலைமுறைக்கு பிறகு உங்க இனமும் அவனுக்கு அடிமைபட்டு போய்டும்..._ 
என வருத்தப்பட்டு கூறினார்.

இது எந்தளவு ஏற்புடையது என நீங்கதான் சொல்லணும். 

எனக்குத் தெரிந்த சில மொழியியல் பேராசிரியர்கள் பெங்களுருவில் உண்டு, அவர்களுடைய கருத்தும் இதுவே!

மும்பையில் வாழ்பவருக்கு மராத்தி கொஞ்சம் கூட தெரிய வேண்டிய அவசியம் இல்லை! கண்ணன். ஏன் இந்த நிலைமை அந்த மண்ணுக்கு ஏற்பட்டது?

நாங்கள் ஓரளவுக்கு மொழிகளின் வரலாறும், மானுடவியலும் படித்தவர்கள் . இந்தியோ சம்ஸ்கிருதமோ இத் தமிழ்மண்ணில் வளர்ந்தால், தமிழ் தானாக அழிந்து படும்.

அப்படி, தமிழ் அழிந்து தான், மலையாளம், கன்னடம், தெலுங்கு உருவாயின.

மறைமலையடிகள் சோமசுந்தர பாரதியார், திரு வி க, கி ஆ பெ, பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் ஆகியோரால் நம் மொழி காப்பாற்றப் பட்டது.

இந்த வரலாறு எதுவும் அறியாமல் பி ஜே பி கட்சியைச் சார்ந்த தமிழர்கள், மும்மொழித் திட்டம் சிறப்பானது, எனப் பேசி வருகின்றனர்.
இந்த ஒரு விஷயத்திலாவது நீங்கள் வித்தியாசமாக இருங்கள்! நாளைக்கு உங்கள் மனசாட்சி உங்களைத் ' தாய் மொழித் துரோகி என சபிக்கும் நிலைக்கு ஆளாகி விடாதீர்கள்.

உடனே, இவர் பெரியாரியவாதி ! இப்படித்தான் பேசுவார் என்று நினைக்காதீர்கள்!

ஒரு மொழி தோன்றிய பின்னரே மதம், கடவுள்,ஜாதி . கலாச்சாரம் பண்பாடு ஆகிய எல்லாம் தோன்றும்! ஆனால் பயத்தின் விளைவால், நாம் கடவுளின் பால் காட்டும் ஈடுபாட்டில், சிறிதளவு கூட தாய்மொழி மேல் காட்டுவதில்லை.

 தாய் மொழி மறந்த சமூகம் அடிமைச் சமூகமாக மாறும் என்பது திண்ணம்! இதுவே கடந்த கால வரலாற்று உண்மை!

Msg forwarded as received...
----------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

தமிழகத்தில் பெருகி வரும் சவுகார்பேட்டைகள் - எச்சரிக்கை!!!!

சென்னை, பாரிமுனைப்பகுதி, சவுகார்பேட்டையில், தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகள் 28க்கும் மேல் உள்ளன. அந்தப் பள்ளிகள் வடநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே உள்ளதல்ல.
அந்த வட்டாரத்தில் இருக்கும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்குமானது.

ஆனால் நடைமுறையில் அப்பள்ளிகள் முழுக்க முழுக்க வடநாட்டுக்காரர்களுக்கு மட்டுமே இயங்கும், தனியார் பள்ளிகள் போல இயங்குகின்றன என்பது அதிர்ச்சியானதாகும்.

1. AG JAIN Higher secondary school
2. Gujarathi Kendal Higher secondary school
3. SKPD TELUGU Higher secondary school
4. Ramdev Higher secondary school
5. MFSB Higher secondary school
6. Ganesh Bhai Kannada Higher secondary school
7. Sugni Bhai girls Higher secondary school
8. Moonbei Bhai girls Higher secondary school
9. Manilal Mehta higher secondary school

உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகள் சென்னை சவுகார்பேட்டையில் மட்டுமே உள்ளன. இப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் வடநாட்டினர். 20 ஆண்டுகளுக்கும் முன் பணியமர்த்தப்பட்ட ஓரிரு தமிழக ஆசிரியர்கள் அங்கு உள்ளனர். அவர்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அங்கே எந்தப் பள்ளியிலும் தமிழ் பயிற்றுவிப்பது இல்லை. தமிழ் மாணவர்களைச் சேர்ப்பதில்லை.
தமிழ் மாணவர்களைச் சேர்க்கச் சென்றால் அவர்கள் சொல்வது, 'அவர்களைச் சேர்த்தால் எங்கள் பள்ளியில் வீண் பிரச்சினை ஏற்படும்' என்பதாகும். மேலும் ஓரிரு ஆசிரியர்களைத் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் பார்ப்பனராகவே இருக்கவேண்டும். பார்ப்பனராக இருந்தாலும் இந்தி தெரிந்தவராக இருக்க வேண்டும். இங்கு மட்டும் ஆசிரியர் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது. 

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து இப்பள்ளிக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். பள்ளிகளாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. சென்னையின் நடுப்பகுதியான சவுகார்பேட் டையில் தமிழ் மொழிக்கும், தமிழ் மாணவர்களுக்கும் வஞ்சகம் செய்து கொண்டிருக்கும் இவ்வகையான பள்ளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இப்பொழுது குஜராத்தில் தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகக் கூறி தமிழ்வழிப் பள்ளியை மூட வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது குஜராத் அரசு.
அந்தத் தமிழ்ப்பள்ளி, தங்கள் பள்ளியில் ஆங்கில வழியில் பயிற்றுவிக்க அனுமதி கேட்கிறது. ஆனால் அனுமதி மறுக்கிறது குஜராத் அரசாங்கம். 

ஆனால் இங்கே சவுகார்பேட்டையில் உள்ள 28க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கில வழியில் வகுப்பு நடத்துவதற்கும் தமிழக அரசு கோடிக்கணக்கில் நிதி வழங்கிக் கொண்டிருக்கிறது. தமிழிலேயே சொல்லித்தராத இந்தப் பள்ளிகளுக்குக் கோடிக்கணக்கில் நிதி உதவி அளிப்பது சரியா? இங்கு நிரப்பப்படாமல் இருக்கும் ஆசிரியர் பணியிடங்களுக்கு வட இந்தியாவிலிருந்து வெறும் இளங்கலை பட்டம் பெற்றவர்களை அழைத்து வந்து பணி அமர்த்துகிறார்கள்.

அவர்கள் எந்த ஆசிரியர் பயிற்சிப் பட்டமும் பெறவில்லை.. அவர்களுக்கென இருக்கும் சிறப்பு அனுமதியின் பேரில் ஆசிரியப் பயிற்சியைப் பெற அவர்களை இங்கே பணியமர்த்தி ஊதியம் வாங்கிக் கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில், அதுவும் தலைநகரமான சென்னையில் தமிழ்நாட்டவருக்கோ, அவர்களின் தாய் மொழியான தமிழுக்கோ சம்பந்தம் இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாகப் இந்தப் பள்ளிகள் தமிழ்நாடு அரசின் நிதி உதவியோடு எப்படி நடக்க முடிகிறது என்பது ஆச்சரியப்பட வேண்டியதுதான்.
கல்வித்துறை அதிகாரிகளுக்கு இந்த விவரங்கள் எல்லாம் தெரியவே தெரியாதா?

சவுகார்பேட்டையில் சமீப காலங்களில் வந்து சேர்ந்த வடநாட்டுக்காரர்கள் குடியிருப்பு அதிகம் இருக்கலாம்; அதே அடிப்படையில் வடநாட்டு மாணவர்கள் அதிகம் சேர்க்கப்படுவதைப் புரிந்து கொள்ள முடியும். அதற்காக, இந்த மண்ணின் பூர்வ குடிகளான தமிழ் மாணவர்களைச் சேர்ப்பதில்லை என்பது எப்படி சரியாகும்? ஆசிரியர்களும் பெரும்பாலும் வடநாட்டுக்காரர்களாகவும், பார்ப்பனர்களாகவும் இருந்துகொண்டு ஆதிக்கம் செலுத்துவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

பொதுவாக சென்னையில் மட்டும் வணிகத்தில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்த வட மாநிலத்தவர்கள் இப்பொழுது தமிழ்நாட்டின் நகர கிராமப்புரங்கள் வரை தங்களின் வணிக சாம்ராஜ்ஜியத்தை நிறுவிவிட்டார்கள்.

ஒரு கால கட்டத்தில், (1970-கள் துவங்கி) வடநாட்டவர்கள் வசிக்கும் பகுதி என்று சவுகார்பேட்டையை மட்டுமே சொல்லுவதுண்டு. இப்பொழுது அப்படி இல்லை; சென்னையில் அனைத்துப் பகுதிகளிலும் அவர்களின் குடியிருப்புகள் அடுக்கு மாடிக் கட்டடங்களாக உச்சியைத் தொடுகின்றன.

அத்தகைய வட ஹிந்திய குடியிருப்புகளில் வடநாட்டைச் சேர்ந்தவர்களைத் தவிர தமிழ்நாட்டுக்காரர்களுக்கு இடம் அளிப்பதில்லை. வெளிப்படையாகவே மறுக்கவும் செய்கிறார்கள். இந்தப் போக்கு நீடிக்குமானால் இது தமிழ்நாட்டு மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கும்.

வடநாட்டிலிருந்து தொழிலாளர் வந்து குவிவது ஒரு பக்கம்; மொத்த வியாபாரங்கள் (Whole Sale Trade) அனைத்தும் அவர்களின் கையிருப்புக்கு போய்விட்டது! அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது - தேர்தலில்கூட அவர்களின் கணிசமான வாக்குகள் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் ஆபத்து இருப்பதை அலட்சியப்படுத்த முடியாது! அரசியல்வாதிகள் கவனம் இந்தப் பக்கமும் திரும்ப வேண்டியது அவசியமே!

இப்படிக்கு
-நாடுகளாண்ட தமிழினம்

(Courtesy: WhatsApp University)

இந்த அபாயம் பற்றி நான் பல ஆண்டுகளாக மேடைகளில் பேசி வருகிறேன்! 1990-களில் வருந்தியும் வெகுண்டும் எழுதிய ஒரு கவிதை கூட எனது கவிதைப் புத்தகத்தில் இன்றும் உண்டு!

தமிழ் இனத்துக்கே உண்டான ஒரு சாபக்கேடு உண்டு! அது என்னவென்றால், விருந்தினர்கள் யார் வந்தேறிகள் யார் என்று தெரியாத அறிவீனம்!

விருந்தினர்கள் சில காலம் இங்கு தங்கலாம்! ஆனால் அவர்களே இங்கு நிரந்தரமாக குடியேறி பெரும்பான்மை மக்களாக மாறுவது ஏற்கத்தக்கதல்ல! பிறகு இந்த மண்ணின் மைந்தர்களின் கதி என்னவாகும்? 

இங்கு மட்டுமல்ல உலகின் எந்த பகுதியிலும் அந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள் குறைந்தது 90 சதவீதம் இருக்க வேண்டும் என்பதே எனது வெளிப்படையான கருத்தாகும்! 

சரி அது ஒரு புறமிருக்க,
பிறகு மொழிவாரி மாநிலங்கள் என்பதன் பொருள் தான் என்ன?
இந்தியா என்ற ஒன்றியம் உருவாகுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு சேர சோழ பாண்டிய தமிழக அரசுகள் இந்த பூமியை ஆண்டு வந்தன என்ற வரலாற்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்!

இந்த தமிழகத்தில் நிலைத்த நாகரீகமாக பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து கோயில்கள் குளங்கள் உலகின் பழமையான அணைக்கட்டுகள், குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்ற ஐவகை நிலங்கள், அறநூல்கள், கூடி வாழும் குடும்ப வாழ்க்கை போன்ற நல்லறங்கள் யாவும் செய்தவன் தமிழன்! 
ஆக, தமிழினத்தைச் சேர்ந்த நாம், நமது பூர்வீக இடத்தோடு சேர்த்தே நம்மையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்! பிறந்த மண்ணை இழப்பவன் உலகின் எந்த நாட்டிலும் எல்லா காலங்களிலும் அடிமையாக தன் வாழ வேண்டும்! இன்று இல்லாவிட்டாலும் ஒருநாள் அந்தந்த பூர்வகுடிகள் கிளர்ந்து எழுவார்கள்!

ஆனால் தமிழர்களுக்கு மட்டும் தன் சொந்த பூமி கொள்ளை போவது பற்றிய
பிரக்ஞை எதுவுமே இருப்பதில்லை!

இல்லையென்றால்
பிழைக்கப் போய் இலங்கையில் சேர்ந்த, நாடோடிச் சிங்களவர்கள், அங்கு நிரந்தரமாக வாழ்ந்து வந்த இராவண தமிழினத்தை நாடோடிகளாக ஏதிலிகளாக மாற்றி நம் கண் முன்னே அகதிகளாக பல நாட்டுக்கு மூட்டை கட்டி விட முடியுமா?

இன்னும் இந்த பேரவலத்தை, நமது மண்ணை, நமது பூர்வகுடி உரிமைகளை உணரத் தவறிய குற்றவாளிகளாகவே நாம் இருக்கிறோம்!

தமிழகத்துக்கும் அதுதான் கூடிய விரைவில் நடக்கலாம்! அது நடக்காமல் இருப்பது அனைத்துக்கட்சி தமிழர்களின், தலைமைக்கு ஒரு சவாலான சங்கதி தான்!
ஒரு படத்தில் பட்டுக்கோட்டையார் பாடல் வரிகள் போல 
"விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்!
உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டை விட்டார்!"
என்ற கதை ஆகிவிடக்கூடாது!

எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!

YozenBalki

திங்கள், 6 செப்டம்பர், 2021

தன்னிரக்கம் (Self-Pity) என்பது என்ன?

ஒரு நாள் உங்களைப்பற்றி நீங்களே வருத்தமாக உணர்ந்த ஒரு சூழ்நிலையை எண்ணிக்கொள்ளுங்களேன்!

இது எப்போது நடந்தது? சென்ற வாரமா? நேற்றைக்கா? இன்றைக்கா? அப்போது நீங்கள் என்ன நினைத்தீர்கள்? பல நேரங்களில், "நாம் நம்மையே குறைவாக எண்ணி விமர்சனம் செய்துகொள்கிறோம்". குறிப்பாக, நாம் எதையும் கச்சிதமாகச் செய்ய எண்ணும்போது, நம் மீது குறை சொல்கிறோம். வீட்டில், அலுவலகத்தில், நண்பர்கள் மத்தியில், மனநலப் பிரச்னை கொண்ட ஓர் உறவினரைக் கவனித்துக்கொள்ளும்போதுகூட. இப்படி ஒருவர் தன்னைத்தானே குறைவாக எடைபோட்டுக்கொண்டால், விமர்சனம் செய்துகொண்டால் என்ன நடக்கிறது? அதனால் அவர் திருந்திவிடுகிறாரா? மேம்பட்டுவிடுகிறாரா?

ஒருவர் முன்பைவிடச் சிறப்பாகச் செயல்படவேண்டும் என்று எண்ணும்போது, அவர் தன்னைத்தானே விமர்சனம் செய்துகொள்வது இயற்கைதான். ஆனால், இந்தப் பழக்கம் தொடர்ந்து நீடித்தால், அது அவரது சிந்தனையை, நடவடிக்கைகளைப் பாதிக்கத்தொடங்கினால், அதனால் அவருக்கு மனநலப் பிரச்னைகள் வரக்கூடும்! ஒருவர் எந்த அளவு தன்னையே விமர்சனம் செய்துகொள்கிறார் என்று அவரே கவனித்து அறியலாம், இதற்கு அவர் தன்னுடன் மனதுக்குள் பேசவேண்டும். மனிதர்கள் எல்லாரிடமும் சில போதாமைகள் இருக்கும், தோல்விகள் இருக்கும், அதற்காக ஒருவர் தன்னைத்தானே தாழ்வாகக் கருதினால், தன்னை விமர்சனம் செய்துகொண்டால், தன்னிரக்கம் அவருக்குப் பயன்படவும் கூடும்!

தன்னிரக்கம் என்றால் என்ன?

இரக்கம்: ஒருவருடைய நண்பர் அல்லது உறவினர் அல்லது இன்னொருவருக்கு ஏதோ பிரச்னை, அதனால் மிகவும் சிரமப்படுகிறார், அப்போது அவரைப்பார்க்கும் ஒருவருக்கு மனத்தில் இரக்கம் தோன்றும், அவருடைய சூழ்நிலையைப் புரிந்துகொள்வார், ஏதாவது செய்யவேண்டும், அவரைச் சிறப்பாக உணரச்செய்யவேண்டும் என்று எண்ணுவார்.

தன்னிரக்கம்: இது தன்மேலேயே இரக்கம்கொள்வது. வளர்ச்சி, முன்னேற்றத்துக்காக மாற விரும்பும் ஒருவர், அதற்காகத் தன்னை விமர்சித்துக்கொண்டே இருப்பது! 

ஆனால், அதற்கு மாறாக மென்மையான, கருணையான, அக்கறையான வழிகளில் தனக்குத்தானே ஊக்கம் தந்துகொள்ளலாமே! அதற்குத் தன்னிரக்கம், ஒருவகையில் உதவுகிறது.

தன்னிரக்கத்தில் மூன்று அம்சங்கள் உள்ளன:

மனமுழுமை:  

சூழ்நிலைகளை ஒரு சமநிலையான விதத்தில் பார்த்தல், தன்னுடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைக் குறுகுறுப்புடனும் வெளிப்படைத் தன்மையுடனும் கவனித்தல். அதேசமயம், அவர்கள் தங்களை எடைபோட்டுக்கொள்ளாமல், அந்த எண்ணங்கள், உணர்வுகளிலேயே சிக்கிக்கொண்டு மூழ்கிவிடக்கூடாது.

பொது மனிதத்தன்மை:

மனிதனாக இருப்பதுபற்றிய ஒரு தத்துவபூர்வமான நிலையை எடுத்தல். சாதாரண மனிதன் இறக்கக்கூடியவன், அவனுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்துகள் வரலாம், அவன் முழுமையானவன் அல்லன், இதையெல்லாம் நினைவில் கொள்வது. ஆக, எதையோ எண்ணி சிரமப்படுவது, தனிப்பட்டமுறையில் போதாமை உணர்வு கொள்வது போன்றவை மனித வாழ்க்கையின் பகுதிகள்தான், அவை ஒருவருக்குமட்டும் நிகழ்கிறவை அல்ல என்று அவர் புரிந்து கொள்ள வேண்டும்

சுய-கருணை: 

சிரமங்களைச் சந்திக்கும்போது, தோல்வியடையும்போது, போதாமையை உணரும்போது, தன்னைத்தானே புரிந்துகொள்ளுதல், தன்மீது பொறுமையாக இருத்தல், தன்னைச் சகித்துக் கொள்ளுதல். இது ஒருவருக்கு மிக மிக அவசியம்!

தன்னிரக்கத்தின் பலன்கள்:

தன்னிரக்கத்துக்குப் பல பலன்கள் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன: மேம்பட்ட நேர்வித உணர்வுகள், வாழ்க்கையில் திருப்தி, அறிவு, நேர்ச்சிந்தனை, குறுகுறுப்பு, இலக்குகளை நிர்ணயிக்கக் கற்றுக்கொள்ளுதல், சமூகத்துடன் இணைந்திருத்தல், தனிப்பட்ட பொறுப்பு மற்றும் உணர்வுநிலையில் எதிர்த்து நிற்கும் திறன், போன்றவை!

இன்னொருபக்கம், தன்னிரக்கம் எதிர் திசையில் சென்றால், ஒருவர் தன்னைத்தானே மிகையாக நினைத்துக் கொள்ளக்கூடும்! அதனால் ஒரு வித மனச்சோர்வு, பதற்றம், அதீதச் சிந்தனை, எண்ணங்களில் அமுங்கிப்போதல் மற்றும் எதையும் கச்சிதமாகச் செய்யவேண்டும் என்ற பரபரப்பு உணர்வு போன்றவை அதிகரிக்கக்கூடும்.

ஒருவர் தன்னிரக்கத்தை நேர்மறையாக பயன்படுத்திக்கொள்வது எப்படி?

அவர் எப்போதும் தன்னைத்தானே தீவிரமாக விமர்சித்துத் தனக்குள் பேசிக்கொண்டிருக்கக்கூடாது, தர்க்கம், பகுத்தறிவு அல்லது தத்துவத்தைக்கொண்டு அதற்குப் பதில்சொல்லவேண்டும்.

அவர் 'தன்னிரக்க நாட்குறிப்பு' என ஒன்றை எழுதத்தொடங்கலாம். ஒவ்வொரு நாளும் அவர் தன்னைத்தானே விமர்சித்துக்கொண்ட சிந்தனைகள், உணர்வுகளைக் குறித்துவைக்கலாம். இன்னொரு நண்பரிடம் "அந்தச் சொற்களைச்" சொல்வோமா, என்றும் சிந்தித்துப்பார்க்கலாம். தன் மீது இரக்கம்கொண்ட ஒரு நண்பராகத் தன்னையே கற்பனை செய்துகொண்டு, தனக்கு ஒரு தன்னிரக்கக் கடிதம் கூட எழுதுதலாம்.

தன்னை ஏற்றுக்கொள்ளுதல், அதாவது, தன்னைத்தானே ஏற்றுக்கொள்ளுதல், தானொரு மதிப்புக்கு உரியவர் என்று உணர்தல். 
பின்வாங்குதல்கள், தோல்விகள், தனிப்பட்ட போதாமை போன்றவை ஏற்படும்போது, தன்னைத்தானே மன்னித்துக்கொள்ளப் பழகுதல் வேண்டும். இதுவே தன்னிரக்கத்தை (Self-Pity) வெல்லும் வழி!

🌸🌸☑️☑️🌸🌸

இந்தக் கட்டுரை உபயம் கூகிள்:
Courtesy Google

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

பாவம் கொள்ளை அடிப்பவன்!

பாவம்
கொள்ளையடிப்பவன்!

அவனுக்கு
எதுவும் "எக்ஸ்ட்ரா"
தரப்படவில்லை!

இருந்தும்
அவன் 
குறுக்குவழியில்
கொள்ளையடித்து
உழைத்து உழைத்து
கட்டிடங்கள்
நிறுவனங்கள்
பணியாளர்கள்
என்று
உருவாக்கி விட்டு
ஒரு நாள் ஓய்ந்து
உதிர்ந்தே 
போகிறான்!

பாவம் 
கொள்ளையடிப்பவன்!

-YozenBalki
💐💐😂😂

வியாழன், 29 ஜூலை, 2021

தெரிந்தவர்கள்" ஒருபோதும் "நண்பர்கள்" ஆக முடியாது!

நீங்கள் தெரிந்தவரா? நண்பரா? 
மனித உறவுகளின் தன்மை நிச்சயிக்கப்படுதல் வேண்டும்.

1. இரத்த சம்பந்தம் உடைய உறவு 

2. திருமண உறவு

3. அத்யந்த நட்பு

4. முன்பின் அறிமுகமற்றவர்கள்

5. புதியவர்கள்

6. தெரிந்தவர்கள் 


என்ற 6 வகை உறவுகள் மட்டுமே ஆகும். அதில் இரத்த சம்பந்தம் உடைய உறவு, திருமண உறவு என்கிற முதல் இரண்டு வகையினர் பற்றி நாம் நன்கு அறிவோம்.

மூன்றாம் வகையான அத்தியந்த நட்பு என்பது சிறுபிராயம் முதற் கொண்டு கொள்கிற உறவு அல்லது ஒத்த கருத்துடைய இருவர் பூணும் "அன்புறவு" ஆகும். அப்படிப்பட்ட அன்பானது இருவர் வீட்டிலும் நடக்கிற எல்லா 'நல்லது 'கெட்டது'களிலும் பங்கு கொண்டு அங்கு ஏற்படும் சுகத்தில் கலந்து துக்கத்தில் அழுகின்ற அளவிற்கு ஆழமானது ஆகும்.

மற்றபடி மீதமுள்ள நான்கு, ஐந்து, ஆறாம் வகையினரின் (4,5,6) இலட்சணம் பற்றி நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும், அதாவது, "முன்பின் அறிமுகமற்றவர்கள்", நம்முன் தோன்றும்போது அவர்கள் நமக்குப் "புதியவர்கள்"!

அந்தப் புதியவர்கள் ஏதோ 'ஒரு நம்மிடம் ஆக வேண்டிய வேலையின் காரணமாக சிலமுறை நம்மிடம் பேசிச் சிரித்து பழகும் போது "தெரிந்தவர்கள்" ஆகிறார்கள். 

அந்த வேலை அவர்களுக்கு முடிந்ததும் காணாமல் போய் விடுவர். 
மீண்டும் சில காலம் கழித்து அவர்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றவுடன் திடீரென்று தோன்றி சிரித்துப் பேசுவார்கள். 

அந்த காரியம் முடிந்ததும் மீண்டும் காணாமல் போய்விடுவர். இடையில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும் இருவருக்குமே தெரிவதில்லை. இதுவே "தெரிந்தவர்கள்"
என்பதின் இலட்சணமாகும்.

"நண்பர்களுக்கும்" 
"தெரிந்தவர்களுக்கும்" இடையிலான இந்த நுட்பமான வேற்றுமையை நாம் சரியாகப் புரிந்து கொள்ளுதல், செய்யும் தொழில் மற்றும் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் ஆகும்!

அத்யந்த நண்பர்கள் 5 பேர் ஒருவனுக்கு இருந்தால் அது உலக அதிசயமே ஆகுமாம்!

தெரிந்தவர்கள் 1000 பேர் ஒருவனுக்கு இருக்கக்கூடும். ஆனால், "தெரிந்தவர்கள்" ஒருபோதும் "நண்பர்கள்" ஆக முடியாது; முடியவே முடியாது!

Dot.

-YozenBalki

வெள்ளி, 28 மே, 2021

வாலாஜா ஏரியை மீட்ட கலெக்டர் திரு. ககன்தீப் சிங் பேடி அவர்கள்!

இளைய சமுதாயமே ஒரு நிமிடம் இதை படியுங்களேன்.

படிக்கும் பொழுது கண்ணீர் மல்கியது. என்ன ஒரு பெருந்தகையாளர்! அடி பணிகிறேன் ககன்தீப் சிங் அவர்களே. 
மனந்திறந்து அவரைப் பாராட்டுங்கள் அன்பர்களே!!


முடிந்தால் உங்கள் வலைதளத்தில் பதியுங்கள், பகிருங்கள்!

21 ம் நூற்றாண்டின் பென்னி குயிக் - கலெக்டர் ககன்தீப் சிங் பேடி எனலாம்!

நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம். 

அவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை.

ஆனால், இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல். மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன 1664 ஏக்கர் பரப்பளவு உள்ள வாலாஜா ஏரியை புயல், தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலைக்கு பெயர் போன கடலூரிலே மீட்கப்பட்டு உள்ளது. 

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியில் தவித்துக்கொண்டிருந்த 15 கிராமங்கள் இந்த மாதம் முதல் நெல், கரும்பு, வாழை என இருபோகத்துக்கு மாறியிருக்கின்றன.

 2003 இலிருந்து இதற்காக போராடி அந்த ஏரியை மீட்டவர் மிகுந்த மதிப்பிற்கும், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியவர் கலெக்டர் ககன்தீப் சிங் பேடி ஆவார்.

அவர் ஏரி மீட்ட வரலாறை பார்ப்போம். 

சத்தமில்லாமல் இந்தச் சாதனை நடந்திருப்பது நம் தமிழகத்தின் கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயிருக்கும் கரைமேடு கிராமத்தில் தான்.

2005-ம் ஆண்டு. கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்து கிடந்தது புதர்க் காடு. தூரத்தில் நிலக்கரி சுரங்க எரிகோபுரங்களில் இருந்து வெண்புகை கசிந்துக்கொண்டிருந்தது. அப்போது நெய்வேலி சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வறட்சி நிலவிக்கொண்டிருந்தது.

 பரவனாற்றில் தண்ணீர் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டதால் கம்மாபுரம், கொம்பாடிகுப்பம் ஆகிய ஏரிகள் அழிந்தேபோயிருந்தன.

 ஓரளவாவது தண்ணீர் இருக்கும் வெலிங்டன் ஏரியும் பெருமாள் ஏரியும்கூட காய்ந்துக்கிடந்தன.

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஒரு முறை, நெய்வேலி நிலக்கரி சுரங்க திட்ட பொறியாளர் துரைக்கண்ணுவிடம் ஒரு விஷயத்தை சொல்லியிருந்தார். 

அது, “நிலக்கரி சுரங்கத்திலிருந்து சேற்றை வெளியேற்றுகிற அந்த இடம் சாதாரணமானது கிடையாது.

 சுமார் 60 வருஷத்துக்கு முன்பு அழிந்து போன 1,664 ஏக்கர் பரப்பளவுகொண்ட பிரம்மாண்டமான ஏரி அது. 

அதில் 12 வாய்க்கால்கள், 15 கதவுகள் இருந்திருக்கின்றன. ஆவணங்களில் ‘வாலாஜா ஏரி’ என்கிற குறிப்பை தவிர, வேறு எதுவும் இல்லை. 

ஒருகாலத்தில் அந்த ஏரியின் மூலம் முப்போகம் விளைவித்திருக்கிறார்கள். இன்றும் ஏரியின் மதகுகள், இரும்புக் கதவுகள் எங்கேயோ புதருக்குள் கிடக்கலாம். மீண்டும் அங்கே ஆழப்படுத்தி ஏரியை மீட்டுவிட்டால் கடலூரில் வறட்சிக்கே இடமிருக்காது” என்பதாகும். 

நெய்வேலி லிக்னைட் நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுக்கும்போது வெளியேறும் நிலத்தடி நீரை சேற்றுடன் பரவனாற்றில் வெளியேற்றியது. 

அது வாலாஜா ஏரி வழியாக பெருமாள் ஏரிக்குச் சென்று கடலில் கலந்தது. 

இதனால் வாலாஜா ஏரி தூர்ந்து, ஒருகட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் மண்மேடாகி
அழிந்தே போனது. 

எனவே, சுரங்க நிர்வாகமே அந்த ஏரியை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர் 
ககன்தீப் சிங் பேடி.

சமூக பொறுப்புணர்வுத் திட்டம் அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களும் தங்களது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை, அந்த நிறுவனம் இயங்கும் பகுதி மக்களின் கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கென ‘சமூக பொறுப்புணர்வு நிதி’யாக செலவிடவேண்டும் என்பது அரசு விதி. 

அதன்படி நெய்வேலி சுரங்க நிறுவனமும் ஆண்டுதோறும் தனது லாபத்தில் 10சதவீதத்தை செலவிட்டு வந்தது. 

ஆனாலும், அவை தையல் இயந்திரங்கள் கொடுப்பது, குடிநீர் தொட்டி கட்டுவது, இலவச நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பது என்பதாக மட்டுமே இருந்தன.

வாலாஜா ஏரியின் மொத்தப் பரப்பான 1664 ஏக்கரையும் மீட்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.60 கோடிக்கும் அதிகமாக நிதி தேவை. 

அவ்வளவு பெரிய நிதியை என்.எல்.சி. ஒதுக்குவது சாத்தியமில்லை. 

எனவே, பகுதி பகுதியாகவேனும் ஏரியை மீட்க வேண்டும் என்பது ககன்தீப் சிங் பேடியின் திட்டமாக இருந்தது.

ஆனால், 2003-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அவர் எவ்வளவோ முயற்சித்தும் பணிகள் நகரவில்லை.

தமிழக மக்களின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க இந்த வட இந்தியர் போராடினார். ஆனால் இந்த சீக்கிய செம்மலின் கோரிக்கையை கண்டு கொள்ளவே இல்லை. 

இன்னொரு பக்கம் கடலூர் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது .

பொறுத்து, பொறுத்துப் பார்த்த ககன்தீப் சிங், வெறுத்துப் போய் கடலூர் மாவட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி. மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினார்

ஆனால் அது எல்லாம் தமிழக செய்தி பத்திரிகை , தொலை காட்சிகளிலே வரவே இல்லை வரவும் வராது. 

வெறும் மூவாயிரம் உறுப்பினர்கள் உள்ள தென் இந்திய நடிகர் சங்க பிரச்சனை தான் 7 கோடி மக்களுக்கும் தேவை பாருங்க. 

ஏரிப் பகுதியை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம் ரூ.13.72 கோடிக்கு திட்ட மதிப்பீட்டை தயார் செய்தது. 

நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு முழுப் பணத்தையும் ஒதுக்கீடு செய்வதாக சம்மதம் தெரிவித்தது என்.எல்.சி நிர்வாகம்.

பணி தொடங்கியது

ஒருவழியாக 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி ஏரியை தோண்டும் பணிகள் தொடங்கின. பணியை முன்னின்று செய்தவர் திட்டப் பொறியாளர் துரைக்கண்ணு.

1664 ஏக்கர் பப்ரபளவு உள்ள அந்த ஏரியை மீட்க, 12 கால்வாய்களை தூர் வார வேண்டும். அது தான் மிகவும் சவாலான செயலாக இருந்தது. 

துரைகண்ணு அவர்கள் தி ஹிந்துவுக்கு கொடுத்த பேட்டியில் : 

கால்வாய்கள் தூர் வாரும் பணி, மொத்தம் 12 கால்வாய்கள். ராஜன் கால்வாய் தண்ணீரும், சுரங்கத்தில் இருந்து வெளியேற்றுகிற நிலத்தடி தண்ணீரும் அந்தக் கால்வாய்களில் விவசாயத்துக்காக போய்க் கொண்டிருந்தது. 

12 கால்வாய்களையும் தூர் வார ஒரு வருஷமாகும். வேலையைத் தொடங்கினால் ஒரு வருஷத்துக்கு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காது. 

சுமார் 15 கிராமங்கள். எல்லோரும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு விவசாயிகள். 

ஒரு வருஷம் விளைச்சல் இல்லைன்னா அவங்க வயித்துப்பாடு என்னாகுமோன்னு கலக்கமாக இருந்தது. 

ஒரு நாள் ஊர் கூட்டத்தை கூட்டி இதை தயக்கத்தோட விவசாயிகள்கிட்ட சொன்னோம்.

 ஆனால், நாங்களே எதிர்பார்க்காத மாதிரி, 

"ஊர் நன்மைக்காக ரெண்டு வருஷம் கூட வயித்தைக் காயப்போட நாங்க தயார்”னு சொன்னாங்க. 

எங்களுக்கு கண்ணீர் வந்துடுச்சி. கலெக்டரும் கண் கலங்கிட்டாரு. 

எங்களுக்கு அதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேகம் தொத்திக்கிச்சு. 

கூலி தொழிலாளர்கள் தொடங்கி இன்ஜினியருங்க வரைக்கும் பல நாட்கள் யாரும் வீட்டுக்கே போகலை.

ஏரிக்கரையிலேயே கொட்டகையை போட்டு அங்கேயே தங்கினோம். அங்கேயே சாப்பிட்டோம். ராப்பகல் பார்க்காம பேய் மாதிரி வேலை நடந்தது. 

ஒரு வருஷம்ன்னு நிர்ணயிச்ச வேலையை நாலே மாசத்துல முடிச்சோம்.

பின்னர் பழைய 15 கதவுகளை பெயர்த்து. புதிய கதவுகளை பொருத்தி. அந்த ஏரியை ஒட்டி 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு கரையை அமைத்தனர். 

அந்த கரையிலே. வனத்துறையினர். 40 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகளை நட்டனர். 

கடலூர் மாவட்ட விவசாயி திரு எஸ் ராமானுஜம் அவர்கள், சிறு வயதில் நான் நீந்தி விளையாடிய ஏரி இது. இதை இறப்பதற்கு முன் நான் பார்ப்பேன் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை என்று ஆனந்த கண்ணீரோடு சொன்னார். 

இப்போது இந்த ஏரி கடல் போல காட்சியளிக்கிறது. 

இதனால், எங்கள் பகுதியில் 12,000 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

 12,000 ஏக்கர் முழுவதும் சம்பா பயிரிடப்பட்டு பயிர்கள் நல்ல நிலையில் காட்சியளிக்கின்றன. என்கிறார் விவசாயி ராமானுஜம். 

திட்டத்துக்கு வித்திட்ட ககன்தீப் சிங் பேடி தற்போது தமிழக அரசின் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளராக இருக்கிறார். 

அவரிடம் பேசினோம். “எல்லா பெருமையும் விவசாயிகளையும், என்.எல்.சி. நிர்வாகத்தையுமே சேரும் என்றார். 

தமிழகத்தில் பல்வேறு ஏரிகள் அழிந்துவருகின்றன. 

அரசை மட்டுமே நம்பாமல் லாபத்தில் இயங்கும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியை நீர் நிலைகளை மீட்க செலவிட வேண்டும் என்றார்.            
கடந்த 30 ஆண்டுகளில் 12456 ஏரிகளும், 27000 குளங்களும் அழிந்திருக்கின்றன. 

மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் நமது மண்ணை ஆள வேண்டும். அத்தகையவர்கள் ககன்தீப் சிங் போன்ற வட இந்தியராகவும் இருக்கலாம். 

பென்னி குயிக் போன்ற வெளி நாட்டுக்காரராகவும் இருக்கலாம். 

மக்களுக்கு நன்மை செய்பவர்கள் செவ்வாய் கிரக வாசிகளாக இருந்தாலும் அவர்கள் எனது பங்காளிகளே. 

சினிமாக்காரர்கள் என்றால் என்னமோ தேவதூதர்கள் என்று நினைத்து அவர்களுக்கு கூஜா தூக்குவதை விட்டுவிட்டு இந்த சீக்கிய செம்மலுக்கு ஒரு நன்றி சொல்வார்களா நம் மக்கள்?  

ஓசியில் எதைக் கொடுத்தாலும் நமக்குத் தேவையோ இல்லையோ ஓடிப் போய் வாங்கி பரணில் வைக்கும் மக்கள் நம் வாழ்வாதாரத்துக்கு எது தேவை என்று யோசித்து அதைக் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்!

இந்த செய்தியை முழுமையாக படித்தமைக்கு நன்றி!

நன்றி: Mettukuppam Rameshraj.

[வாட்ஸப்பில் பகிர்ந்தது]