ஒன்று சிடுமூஞ்சி, இன்னொன்று சிரித்த முகம்!
இரண்டு பேரும் அதே ஊரில் ரெண்டு தெருக்களில் இட்லி சுட்டு விற்று வந்தார்கள்! காலம் வருகையில் காலன் அழைக்க முன்பின்னாக மேலோகம் சென்றார்கள். 'சிரித்த முக' பாட்டிக்கு ஏனோ நரகம் சித்திக்க அவளுக்கு அப்போது 'சிடு மூஞ்சி' பாட்டியின் நினைவு வந்தது. நமக்கே இந்த கதி-அவளுக்கு என்ன கதியோ என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்! அவள் சித்திர குப்தனை அணுகி விசாரிக்க "ஒ ! அவர்களா..? அவர்கள் சொர்க்கத்தில் இருக்கிறார்கள்" என்றான் அவன்!
வந்ததே கோபம் சிரித்த முகப் பாட்டிக்கு! "அவள் போய் இங்கு -'அவர்களாமா'? தாம்-தூம் என்று எகிறிக் குதித்த சிரித்த முகப் பாட்டி, அப்போது இராட்சசி ஆனாள். "உங்கள் எமலோக அரசு, இந்திய அரசை விட படு மோசம்..நல்லவர்கள் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. கெட்டவர்களுக்கு சொர்க்கமும், நல்லவர்களுக்கு நரகமும் தருவதா எமதர்ம ராஜனின் தர்மம்.." அது இது என்று வசை பாடி வாய்க் கூசும் கெட்ட வார்த்தைகளில் பழி தூற்றினாள். எமபட்டணமே அங்கு வந்து குவிந்து இந்த சண்டையை வேடிக்கைப் பார்க்க, சித்திர குப்தனுக்கு அப்போது மஹா கோபம் வந்தது. அவன் தனது "தர்மப் பேரேட்டை" விரித்து அதற்கான காரணம் கணக்கு கூறலானான்!
சிரித்த முகப் பாட்டி:
அடுத்தவர்களுக்கு உதவியாய் இருந்த கால அளவு: 13,14,000 நிமிஷங்கள்
பதிமூன்று இலட்சம் நிமிஷங்கள் என்க!
( ஒரு நாளைக்கு காலையில் மட்டும் நான்கு மணி நேரம் - பல நாட்கள் கோவில் குளம்,
நல்லது கெட்டது என்று சென்று வாயாடிக் கொண்டு 'கடை' திறப்பதே இல்லை.
எனவே, சராசரி மூன்று மணி நேரம்- 25 வாடிக்கையாளர்கள்,
இருபது வருட உழைப்பு மட்டுமே!)
சுட்டுப் போட்ட இட்டிலிகள் 20x25x365x5 = 9,12,500
ஒன்பது இலட்சம் இட்லிகள்...
(ஒருவருக்கு சராசரி ஐந்து இட்லிகள் (கொஞ்சம் ருசியாய் இருக்கும்) வீதம்)
ஆக, இவளால் உலகுக்குப் பயன் குறைவு! நான் எதையாவது செய்தால் நூறு சதவிகிதம் அர்ப்பணிப்போடு செய்வேன்- இல்லையா வருஷக் கணக்கில் சோம்பேறியாய் இருப்பேன் என்று சொல்லும் ரகம் இவள்!
சிடு மூஞ்சிப் பாட்டி:
அடுத்தவர்களுக்கு உதவியாய் இருந்த கால அளவு: 1,05,12,000 நிமிஷங்கள்
ஒரு கோடி நிமிஷங்கள் என்க! (அம்மாடியோவ்...)
( ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வீதம் அறுபது
வருட உழைப்பு மட்டும் சேர்க்க)
ஒரு நாளைக்கு காலை-மாலை என்று பயன் அடைந்தவர்கள் விகிதம்
சராசரி 60 பேர்கள்
சுட்டுப் போட்ட இட்டிலிகள் 60x60x365x4 = 52,56,000
ஐம்பத்தி இரண்டரை இலட்சம் இட்லிகள்..
(ஒருவருக்கு சராசரி நான்கு இட்லிகள் (கொஞ்சம் ருசி குறைவுதான்) வீதம்)
ஆக, இவள் ஒரு நிஷ்காம்ய கர்மி! நிறைய மக்களுக்கு தொண்டு செய்தவள். எண்ணற்ற வயிறுகள் பசியாற உதவியாய் இருந்தவள். தரத்தை விட, நேரம் தவறாமையும் தொடர்ந்த உழைப்பும் உடையவள்.
சித்திர குப்தன் தொடர்ந்தான்:
"நீ நல்லவள், நல்ல தோற்றம் உடையவள், இனிய பேச்சு பேசுபவள் என்பதெல்லாம் உன்னை உயர்ந்தவளாக காட்டிக் கொள்ளும் கர்வம் தவிர வேறென்ன? உன்னால் இந்த உலகத்துக்கு என்ன பயன் என்பதை வைத்தே எங்களுடைய 'எமலோக-கணக்கு வழக்குகள் அமையும். 'நிஷ்காம்ய கர்மமே' உயர்ந்த தவம்; கர்ம யோகமே இறைவனை அடையும் பாதை! நீ அன்றைக்கு பூவுலகில் இனிய மொழி பேசி நல்லவளாக நடித்து இன்றைக்கு இழிந்த மொழி பேசுவதை சற்று நினைத்துப் பாரேன்!
நீ, பொறுமை இழந்தவளாகவும், அடுத்தப் பெண்ணை ஒப்பிட்டுப் பார்க்கும் குயுக்தி மனப்பான்மை கொண்டவளாகவும், மேலும் உயர்ந்தவர்களையே சந்தேகப்படும் இயல்பு கொண்டவளாகவும் இருக்கின்றாயே! எங்கள் தரப்பு நியாயங்களைக் கேட்கும் முன்பாகவே நிதானம் தவறி நீ கொட்டிய வார்த்தைகளை மீண்டும் எப்படிப் பொறுக்கி எடுக்கப் போகிறாய்! அதற்கொரு நரகமும் எங்கள் பேரேடுகளில் தானாகவே (Akashic Records) எழுதப் பட்டு விட்டது", என்று அமைதியாய் சொல்லி முடித்தான்!
அதைக் கேட்ட சிரித்த முகப் பாட்டியின் கண்களில் கண்ணீர் வற்றாத ஆறாக ஓடிக் கொண்டிருந்தது! மேலும் கேள்வி கேட்க பயந்து அவள் மவுனமாய் நின்றாளே தவிர, 'சித்திரகுப்த' உண்மையை அவள் இன்னும் உணர்ந்த பாடில்லை!