Translate this blog to any language

Food-wastage Indian-poverty FCI-godown லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Food-wastage Indian-poverty FCI-godown லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 31 ஜூலை, 2010

இந்திய உணவுக் கழகத்தின் அசட்டை - வீணாகும் தானியங்கள்!


இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கை 42 கோடி! 
இவர்களிடம் அதிகம் இல்லாதது சத்துணவு! சரிவிகித ஊட்டச் சத்துள்ள உணவுப் பழக்கம் இல்லாமை அல்லது இயலாமை இவர்களது பொதுக்காரணி.

ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காமல் இத்தனை பேர் தவிக்கையில், இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் விநியோகிக்க முடியாத அளவுக்கு கெட்டுப்போய்க் கிடக்கும் அரிசி, கோதுமை அளவு, ஜூலை 1-ம் தேதி கணக்கீட்டின்படி, மொத்தம் 11,708 டன் என்று தெரியவந்தால், இத்தகைய அக்கறையின்மையை என்னவென்று சொல்வது?இதில் அதிகபட்சமாக, பஞ்சாபில் 7,066 டன், மேற்கு வங்கத்தில் 1,846 டன், பிகாரில் 485 டன், குஜராத்தில் 1,457 டன், மகாராஷ்டரத்தில் 278 டன் தானியம் வீணாகிப்போனது. இதில் மிகக் குறைவான அளவு தானியத்தை வீணடித்த மாநிலங்கள் இரண்டுதான். ஆந்திரம் 6 டன், தமிழ்நாடு 1 டன். இதற்காக நாம் நிச்சயம் பெருமை கொள்ளலாம்.இந்தியாவில் தானியங்களை விளைநிலத்திலிருந்து நேரடியாக கொள்முதல் மையத்துக்கு தானியத்தைக் கொண்டுசெல்லும் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருக்கின்றன. இதனால், விளையும் தானியங்களில் 20 விழுக்காடும், அழுகும் காய்கனிகளில் 30 சதவீதமும் வழியிலேயே வீணாகிப் போகின்றன என்கிறார் வேளாண்மை ஆர்வலர் மோகன் தாரியா.


இந்த நிலைமைகளையும் தாண்டித்தான், உணவு தானியங்கள் இந்திய உணவுக் கழகக் கிடங்குகளுக்கு வருகின்றன. அதையும் சரியாகப் பாதுகாக்காமல் வீணடித்தால் நெஞ்சு பொறுக்குதில்லை.இந்த நிலைக்கு அடிப்படைக் காரணம் இந்திய உணவுக் கழக அதிகாரிகள்தான். தானியங்களை முறையாக, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அடுக்கி வைக்காமலும், திறந்தவெளியில் அடுக்கி வைத்தும் தானியங்களைப் பாழ்படுத்திய  இந்த அதிகாரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

தானியங்களைப் பாதுகாக்கப் போதுமான கிடங்குகளை சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளாகியும் நாம் இன்னும் ஏற்படுத்தாமல் இருப்பது யாருடைய குற்றம்? உலகத் தரத்திலான விமான நிலையங்கள், மோட்டார் வாகனங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வளாகங்கள், சாலைகள் என்று பெருமை பேசும் நாம், உற்பத்தியாகும் உணவுப் பொருள்களை முறையாகப் பாதுகாக்கவும் சேமிக்கவும் தரமான கிடங்குகளையும் குளிர்பதனக்கூடங்களையும் அமைக்காமல் இருக்கிறோமே, ஏன்?நாட்டில் ஓர் இடத்தில் மழை பொய்த்தாலும், இன்னொரு பகுதியின் விளைச்சலைக் கொண்டுபோய்ச் சேர்த்து, பஞ்சத்தைப் போக்கிவிட முடியும் என்பதால் இனி பஞ்சமே வராது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. 

இதைச் சாத்தியமாக்க உருவான இந்திய உணவுக் கழகம், தானியத்தை வீணடித்துக் கொண்டிருப்பது தொடர்பாக உச்ச  நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு தானியம் வீணாகிப் போனது என்பதை உணவுக் கழகத்தின் மூலம் அறியவந்த நீதிபதிகள் கொதிப்படைந்துவிட்டனர். "சாப்பிட வழியில்லாத ஏழைகள் வாழும் இந்த நாட்டில் ஒரேயொரு மணி தானியம் வீணாவதும்கூட குற்றமாகும்' என்று கூறியுள்ள நீதிபதிகள், இந்த தானியங்களைக் கெட்டுப்போகிற வரை வைத்திருக்காமல், தேவைப்படும் மக்களுக்கு உடனடியாக விநியோகம் செய்தால் என்ன? என்று கேள்வி எழுப்பி, ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.இந்திய உணவுக் கழகத்தின் ஊழலும், சிதறிப்போகும் தானியத்தின் அளவும் அதிகமாக இருப்பதால், ஏன் அனைத்து நடைமுறையையும் கணினிமயமாக்குதல் கூடாது என்றும் நீதிபதிகள் ஆலோசனை கூறியுள்ளனர். இந்த தானியங்கள் எதற்காக பல கிடங்களுக்கு மாறிச்செல்ல வேண்டும்?


உணவுக் கழக கிடங்கிலிருந்து நேரடியாக பொதுவிநியோக மையத்துக்கு அளிக்கும் முறையை உருவாக்கினால் என்ன என்றும்கூட நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. இவ்வாறு பல கிடங்குகளுக்கு மாற்றுவதன் நோக்கமே அரசியல் பின்புலம் உள்ளவர்களின் லாரிகளுக்கு வாடகை கொடுப்பதற்கே என்பது ஊர் அறிந்த ரகசியம்.சேமித்து வைக்க இடம் போதவில்லை என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால், தனியார் இடங்களை வாடகைக்கு அமர்த்தவும் இவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் செய்வதில்லை. தானிய மூட்டைகளில் பொத்தல் போட்டு ஒவ்வொன்றிலும் கொஞ்சம் தானியத்தைப் பிரித்தெடுத்து, விற்றுக் காசு பார்க்கும் கூட்டம் உணவுக் கழகத்தில் இருப்பதால், தானியம் கெட்டுப்போனால்தான் இவற்றையெல்லாம் மூடி மறைக்க முடியும்.

இந்தியாவில் பல கோடி ஏழைகளின் வீட்டுக்குப் போக வேண்டிய தானியத்தை தங்கள் சுயநலத்துக்காக ஏமாற்றி வெளியே கொண்டுபோய் விற்கிறோம் என்றோ, இவை கெட்டுப்போய், நியாயவிலைக்கடைகள் மூலம் கிடைக்கும் நேரத்தில் உண்ணவும் தகுதியில்லாததாக மாறுகிறது என்கின்ற எண்ணமோ இல்லாத அளவுக்கு இவர்கள் மனம் ஊழலாலும் அதிகார மமதையாலும் மரத்துப்போய்விட்டது. 

மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?- என்கிறான் மகாகவி பாரதி. இந்திய உணவுக் கழகத்தின் அலட்சியம் மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கத்தின் எச்சம்தானே!

Courtesy: http://www.dinamani.com/edition/