Translate this blog to any language

human-psychology courtesy-speech helping-speech smiling-face befriend-friend லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
human-psychology courtesy-speech helping-speech smiling-face befriend-friend லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 மார்ச், 2010

உங்களுக்கு அந்தப் 'பளிச்' பளிச்சிடுகிறதா?


ந்த நண்பரைப் பார்த்த உடன் எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும்.
அது 1980-85 களுக்கு இடைப்பட்ட காலம்.
அவர் பெயர் செழியன். (சில காரணத்துக்காக இங்கு பெயரை மாற்றி உள்ளேன்). ஒவ்வொருவரிடமும் பேசுவதற்கு என்று அவர் ஒவ்வொரு விஷயம் வைத்திருப்பார். அவரைப் பார்த்த உடன் எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சி பிறக்கும். இத்தனைக்கும் அவரது உடைகள் சற்று கிழிந்தும், நல்ல காலணிகள் இன்றியும், கலைந்த தலைமுடி , மழிக்கப் படாத முகம் என்று சாதாரண தோற்றத்தோடு தான் இருப்பார்.

எனக்கு மனோ தத்துவத்தில் ஆர்வம் இருந்ததால், மனித உறவுகள், கோபம், பிரிவு அதற்கான காரணங்கள் என்று எதையும் ஆய்வுக் கண்ணோடு பார்க்கும் பழக்கம் சிறு வயது முதலே இருந்தது. அதனால், அவரை உற்றுப் பார்க்க ஆரம்பித்தேன். அதாவது, எதனால் அவரிடம்  மற்றவர்கள் நெருங்கிப் பழகுகிறார்கள். ஆசை ஆசையாகப் பேசுகிறார்கள் என்று. சிரிக்கவே தெரியாத சில ஜடங்கள் கூட அவரைக் கண்டால் சிரித்துப் பேசி சகஜமாக பழகுவார்கள். என்ன மாயம் இது! அவர்களிடம் மைய இழையாக ஓடும் பொதுவான பேச்சு எதைப் பற்றியதாக இருக்கிறது? அதை ஆராயத் தீர்மானித்தேன்.

அவருக்கும் எனக்குமான உறவு அவரும் நானும் அந்நாட்களில் திராவிடர் கழக இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் என்பதே. எனவே, எங்கு கூட்டம் நடந்தாலும் நிச்சயம் அவரைக் காண இயலும். அவரைப் பின்தொடர்ந்த படியே சில பல நாட்கள் ஆய்வு செய்ததில் எனக்கு ஒரு சுவாரசியமான விஷயம் புலப் பட்டது.

அவரது பேச்சு எப்போதுமே மற்றவர்களுக்கு உதவும் பேச்சாக, நலம் விசாரிக்கும் பேச்சாக, தகவல் அளிக்கும் பேச்சாக, பாராட்டும் பேச்சாக, நன்றி கூறும் பேச்சாக, உற்சாகம் தரும் பேச்சாக, கள்ளம் கபடம் அற்ற பேச்சாக மட்டுமே இருப்பதைக் கண்டு வியந்தேன்!

அவரது பேச்சு கிட்ட தட்ட இப்படி இருக்கும்:

"நான் காலையிலே உங்க வீட்டுக்கு வர்றேன். அந்த லெட்டர்-ஐ கொடுங்க. நான் அங்க தான் போகப் போறேன் - தந்துடறேன்"
" அய்யா! அந்த பள்ளியில் சேருவதற்கு விண்ணப்பம் தர ஆரம்பிச்சாச்சி- உங்க பையனுக்காக ஒரு நாள் சரவணன் கிட்டே கேட்டிருந்தீங்களே!"
" ஆமா! அன்னக்கி அந்த மழைல, பாவம் எப்படி போனீங்க - எத்தனை மணிக்கு வீட்டுக்குப் போய் சேர்ந்தீங்க"?
" தம்பி! நேத்து மீட்டிங்குல கலக்கிட்டீங்க. ரொம்ப நல்லா இருந்தது உங்க பேச்சு. வாழ்த்துக்கள்!"
இப்படிதான் இருக்கும் அவரது உரையாடல்!
பிறரிடம் அவர் உதவி கேட்பதாய் இருந்தாலும், " எனக்கு ஒரு சின்ன உதவி..முடிஞ்சா பாருங்க...ஒன்னும் நிர்பந்தம் இல்ல.."ன்னு சொல்லி விட்டு இயல்பாக கேட்பார். நிறைய நண்பர்கள் இருந்ததால் அவருடைய வேலைகள் வெகு எளிதாகவும் விரைவாகவும் முடிந்துவிடும்.

இப்போது எனக்குப் புரிந்துவிட்டது! சிலரை நமக்கு அதிகம் பிடிப்பதும் - சிலரை ஏதோ காரணத்தினால் நம் மனம் தவிர்ப்பதும்!

மேற்கண்ட பேச்சையே இப்போது வேறு விதமாக மாற்றிப் பார்ப்போமா?

"நீங்க காலையிலே போற வழியிலே என் வீட்டுக்கு வந்துட்டு போக முடியுமா-ஒரு லெட்டர் இருக்கு-அவர் கிட்ட தந்துடுங்க "

உங்க வீட்டுப் பக்கத்துல அந்த பள்ளியிலே விண்ணப்பம் தர்றாங்க...வாங்கி வைக்க முடியுமா?

அன்னக்கி மழையிலே நிக்கறப்போ ஒரு பிளாட் பத்தி சொன்னீங்களே- விசாரிச்சுட்டீங்களா?

நேத்து மீட்டிங்குக்கு என்னால வர முடியலே....எனக்கு ஆபீஸ்-ல ஒரே டென்ஷன். இப்பக்கூட எப்பிடியோ அடிச்சி பிடிச்சி வந்தேன்"

மேற்கண்ட இரண்டு விதமான பேச்சும் பேச்சுதான்!

ஆனால், நம் உள் மனதில், முதல் விதப் பேச்சு ஒரு வித உற்சாகத்தையும்
இரண்டாம் விதப் பேச்சு ஒரு வித மனச் சோர்வையும் தருகிறது!

காரணம் வெளிப்படையானது தான் !
முதல் பேச்சில் பொது நலம், உள்நோக்கம் இன்மை, அன்பு, பிறர் மீது கரிசனம் வெளிப்படத் தெரிகிறது!
இரண்டாம் பேச்சில் தன்னை மட்டும் முன்னிறுத்திய தன்மை மறைந்து கிடக்கிறது!

அதாவது, சுயநலம், மற்றவர்கள் மீது வெறுப்பு உமிழ்தல், பரபரப்பு, இறுக்கமான மன நிலை, உழைப்பின் மீது நம்பிக்கை இன்மை, அடுத்தவர்களை குறை கூறுதல், நேரம் தவறுதல்-அதற்கு சாக்கு போக்கு கூறுதல், தனது மதம்/கட்சி அது சார்ந்த கொள்கைகளே உயர்ந்தது என்று விதண்டா வாதம் பண்ணி நேரக் கொலை செய்வது, துடுக்காகப் பேசி அடுத்தவர் மனதைப் புண்படுத்துவது, எப்போதும் தன்னைச் சுற்றியே இந்த உலகம் இயங்க வேண்டும் என்று, ஒரு வித
"தன் முனைப்போடு" (Egoful activities) செயல் படுவது, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தவறான நினைப்பு, மூடிய மன நிலை, ஆராயாமல் உடனடியாக
முடிவுக்கு வரும் குணம் (Jumping in to conclusions) இவை யாவும் கொண்ட ஒரு மனிதரை அல்லது இதில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் நமக்கு அவரைப் பிடிக்காமல் போய்விடுகிறது. திடீரென்று இது நடக்கும்!

மேல் மனதுக்கு ஏன் எதற்கு இப்படி பிடிக்காமல் போகிறது என்று காரணங்கள் புரியா விட்டாலும், ஒருவரைப் பிடிப்பதற்கும் தவிர்ப்பதற்குமான காரணம் என்னவென்று ஆழ் மனதுக்கு மட்டும் எப்படியோ 'பளிச்' என்று தெரிந்து விடுகிறது!

உங்களுக்கு அந்தப் 'பளிச்' பளிச்சிடுகிறதா?

-மோகன் பால்கி
( நட்பு எப்படி இருக்க வேண்டும்? இங்கே சொடுக்குக! )