
சுகம் தரும் பாதுகாப்பு என்றும்
சுதந்திரம் என்றும்
பொய்யாய் கருதிய
போலி நினைப்புகள்..
முதன் முதல்
செல் போன் ஒலித்த போது..
அழைத்த போது
இருந்த ஆனந்தம்
இன்று இறந்தது!
கையடக்க கருவி வழி
வையகம் வாழ் யாரிடமும்
நினைத்த நேரத்தில்
நான் பேச முடிவது
சுதந்திரம்
என்று தவறாய்க் கருதிக்
கிடந்தேன்!
இன்றுதான் தெளிந்தேன்-
உலகின்
எந்த மூலையில் இருந்தும்
எந்த நொடியிலும்
யார் வேண்டுமானாலும்
காதுகளுக்குள்
கந்தகப் பொடி வீசி
என் சுதந்திரம்
கெடுக்கலாம் என்று!
எந்த ஒரு மையத்தில் இருந்தும்
புறப்படும் கயிறுகள்
ஒரு வழிப் பாதை அல்ல !
எல்லா இடங்களிலும்
விரல்கள் அல்ல-நண்பர்களே!
பொம்மைகளே கயிறுகளைப்
பிடித்து ஆட்டுகின்றன!
வாழ்க்கை வெறும்
பொம்மலாட்டம் அல்ல!
அது ஒரு பொம்மலாட்ட-
கயிறாட்டம்!
எந்த ஒரு சுதந்திரமும்
இன்னொரு-வகை
அடிமைத்தனமே!
-Mohan Balki
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: