டிஜிட்டல் யுகத்தில் மன அமைதிக்கான எளிய வழிகாட்டல்:
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நமது நிம்மதியை நாமே தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருக்கிறோம். நம் கையில் இருக்கும் செல்ஃபோன் வழியாகத் திடீரென்று யார் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் நம் மனதைச் சங்கடப்படுத்தி விடுகிறார்கள்.
இத்தகைய டிஜிட்டல் இரைச்சல்களிலிருந்து தப்பித்து, நம் 'மனம்' என்கிற மாளிகையை எப்படிப் பூஞ்சோலையாக மாற்றுவது?
இதோ நான் தொகுத்த சில எளிய, நடைமுறை வழிகள்:
1. டிஜிட்டல் நச்சு நீக்கம் (Digital Detox)
உடனுக்குடன் பார்க்காதீர்கள்:
வரும் ஒவ்வொரு நோட்டிபிகேஷனையும், போனையும் உடனுக்குடன் பார்க்க வேண்டிய அவசியம் நமக்குக் கிடையாது. உங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை மொபைல் ஃபோன்கள் திருட அனுமதிக்காதீர்கள்.
காலை நேர அமைதி: காலையில் கண்விழித்த முதல் ஒரு மணி நேரம் மொபைல் திரையைப் பார்க்கவே கூடாது. அன்றைய நாளின் மகிழ்ச்சியை அந்த முதல் மணி நேரமே தீர்மானிக்கிறது. அதைத் தேவையற்ற வாட்ஸ்அப் செய்திகளால் நிரப்பக் கூடாது.
அரசியல் மற்றும் வெறுப்புப் பேச்சுகள்: தேவையில்லாத அரசியல் கருத்துக்களைப் பார்ப்பதோ, பேசுவதோ நம் மனதை வெறுப்பு, கோபம் மற்றும் தேவையற்ற கவலையாக மாற்றிவிடும். சமூக ஊடகங்களில் வரும் எதிர்மறை விவாதங்களிலிருந்து விலகியிருங்கள்.
எதிர் கருத்து பேசாதீர்கள்: எந்தவொரு சிறிய விஷயத்திற்கும் மற்றவர்கள் சொல்லும் கருத்துக்கு மாற்றுக்கருத்து பேசி, வாதாடி நம்முடைய 'டென்ஷனை' நாமே ஏற்றிக் கொள்ளக் கூடாது. சில நேரங்களில் மௌனமே மன அமைதிக்கான சிறந்த மருந்து.
கருத்துக்களைப் போட்டு அடைக்காதீர்கள்: நீண்ட நேரம் மொபைல் அல்லது டிவி போன்ற திரைகளைப் பார்ப்பதால், தேவையற்ற கருத்துக்கள் நம் மனமாளிகையை நிரப்பி விடுகின்றன. அங்கே நல்ல எண்ணங்கள் சுதந்திரமாகச் சுவாசிப்பதற்குக் கூட இடமில்லாமல் போய்விடுகிறது.
2. நிதானமும் நம்பிக்கையும் வளர்த்தல்
வேகத்தைக் குறைப்போம்: இந்த உலகம் ஓடிக் கொண்டே இருக்கிறது என்பதற்காக நாமும் பதற்றத்துடன் ஓட வேண்டியதில்லை. நிதானமாக இயங்குவதும், நம்பிக்கையோடு வாழ்வதுமே வாழ்க்கையை அழகாக்கும்.
பிடித்தவர்களுடன் சிரித்துப் பேசுங்கள்: உங்களுக்குப் பிடித்தமான மனிதர்களோடு மனமாறச் சிரித்துப் பேசுங்கள். நல்ல புத்தகங்களைப் படிப்பது மற்றும் மெல்லிய, இனிமையான பாடல்களைக் கேட்பது ஆன்மாவிற்குப் புத்துணர்ச்சி தரும்.
நன்றியுணர்வுப் பயிற்சி: இல்லாத ஒன்றை நினைத்து ஏங்குவதை விட்டுவிட்டு, நம்மிடம் இருக்கும் நல்ல விஷயங்களுக்கு (உடல் ஆரோக்கியம், குடும்பம், உணவு) தினமும் இரவில் தூங்கும் முன் மனதார நன்றி கூறும் பழக்கம் எதிர்மறை எண்ணங்களை அழிக்கும்.
3. இயற்கையோடும் குடும்பத்தோடும் இணைவோம்
வெறும் கால் நடைப்பயிற்சி: மாலை நேரங்களில் மொபைலை வீட்டில் வைத்துவிட்டு, அருகிலுள்ள பூங்கா அல்லது மொட்டை மாடியில் வெறும் கால்களுடன் நிதானமாக உலா வாருங்கள். அது உடலையும் மனதையும் பூமியோடு இணைக்கும் (Grounding).
குடும்பத்தோடு ஒரு டின்னர்: இரவு நேர உணவின் போதாவது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்தமர்ந்து, போன்களைத் தள்ளி வைத்துவிட்டு, அன்றைய நாளைப் பற்றிப் பேசி, சிரித்து மகிழுங்கள். இது உறவை பலப்படுத்தும்.
4. பயனுள்ள வாழ்க்கை வாழ்தல்
இயற்கையோடு தொண்டு: நம் வீட்டில் செடி, கொடிகளை வளர்ப்பதோ அல்லது வாரத்தில் ஒரு மணி நேரமாவது பிறருக்கு/சமூகத்திற்குத் தொண்டு செய்வதோ நம் மனதில் எல்லையற்ற நிம்மதியை உருவாக்கும்.
உலகிற்குப் பயனாகுங்கள்: நாம் வாழ்கிற இந்தச் சமூகத்திற்கும், இந்த உலகத்திற்கும் நம்மால் இயன்ற ஏதோ ஒரு வகையில் பயனுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வதே மனிதப் பிறவியின் ஆகச்சிறந்த அர்த்தமாகும்.
முடிவுரை:
நம் மனமாளிகையைத் தேவையில்லாத குப்பைகளால் நிரப்பாமல், கொஞ்சம் காற்றோட்டமாக வைத்திருப்போம்.
நிம்மதி தானாகத் தேடி வரும்!
-Yozen Balki 💢

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: