நீங்கள் அனுப்பிய செய்தி போய் சேர்கிறதா என்று உங்களுக்கு தெரியுமா?
ஆனா, இந்த வைஃபை பின்னாடி செய்யுற ஒரு பெரிய துரோகத்தை நாம கவனிக்கிறதே இல்லை.
ஒரு முக்கியமான சூழலை கற்பனை பண்ணி பாருங்க.
நீங்க ஆபீஸுக்கோ இல்ல வெளியிலயோ போக கிளம்புறீங்க. வீட்டை விட்டு கிளம்புற அந்த அவசரத்துல, உங்க மொபைல் போன்ல வாட்ஸ்அப் ஓபன் பண்ணி, ஒரு முக்கியமான மெசேஜை டைப் பண்ணி ‘செண்ட்’ (Send) கொடுத்துட்டு போனை பாக்கெட்ல வச்சிடுறீங்க. நீங்க என்ன நினைப்பீங்க? "நாமதான் மெசேஜ் அனுப்பிட்டோமே, அது போயிருக்கும்" அப்படின்னு ரிலாக்ஸா இருப்பீங்க.
ஆனா, அங்கேதான் வைஃபை உங்களுக்கு ஒரு பெரிய ஆப்பை ready பண்ணி வச்சிருக்கும்!
அன்னைக்குன்னு பார்த்து உங்க வீட்டு வைஃபை ரௌட்டர்ல இன்டர்நெட் கட் ஆகியிருக்கும். ஆனா உங்க போன் வைஃபை சிக்னலோட கனெக்ட் ஆகிதான் இருக்கும். நீங்க அனுப்புன அந்த மெசேஜ், "வைஃபை அண்ணன் எப்போ இன்டர்நெட் தருவாரு, நாம எப்போ போவோம்" அப்படின்னு போன்லயே தவம் இருக்க ஆரம்பிச்சிடும்.
நீங்க வீட்டை விட்டு வெளிய வந்து மொபைல் டேட்டா ஆன்ல இருந்தாலும் சரி, நீங்க உலகத்தையே சுத்தி வந்தாலும் சரி... அந்த ஒரு குறிப்பிட்ட மெசேஜ் மட்டும் எந்த காலத்திலேயும் போகாது!
மறுபடியும் நீங்க எப்போ வீட்டுக்கு வந்து, அந்த வைஃபை உயிர் பெற்று வருதோ, அப்போதான் அந்த மெசேஜ் போகும். என்ன கொடுமை சார் இது?
மொபைல்னா என்ன? அது ஏன் வைஃபைக்கு அடிமையா இருக்கணும்?
கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன்... "மொபைல்" (Mobile) அப்படிங்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? "நகரக்கூடியது" என்று பொருள். வீட்டைத் தவிர நாம உலகத்துல எங்க இருந்தாலும், யார்கூட வேணாலும் பேசுறதுக்கும், செய்தி அனுப்புறதுக்கும் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அற்புதமான கருவிதான் இந்த மொபைல் போன்.
அப்படி இருக்கும்போது, நாம ஒரு செய்தியை அனுப்புனா, இந்த ஸ்மார்ட்போன் எதற்கு முன்னுரிமை (Priority) தரணும்? கண்டிப்பா மொபைல் நெட்வொர்க்கிற்குதானே தரணும்? மொபைல் டேட்டா ஆன்ல இருக்கும்போது, அது வழியா மெசேஜை டக்குனு அனுப்பிட்டு வேலையை பார்க்க வேண்டியதுதானே?
அதை விட்டுட்டு, "இல்லை... நான் வைஃபை செக்யூரிட்டி அண்ணனைத்தான் பார்ப்பேன், அவர் வர்ற வரைக்கும் மெசேஜை அனுப்ப மாட்டேன்" அப்படின்னு ஒரு மொபைல் போன் பிடிவாதம் பிடிச்சு காத்துக்கிட்டு இருக்கிறது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?
நடைமுறை தெரியாத கோடர்களும், கண்டுக்காத R&D டீமும்!
இங்கேதான் நாம இன்னைக்கு இருக்கிற சாஃப்ட்வேர் கம்பெனிகளைப் பத்தி பேசியாகணும். இன்னைக்கு ஏசி ரூம்ல உட்கார்ந்துட்டு, நடைமுறை வாழ்க்கையே தெரியாம கோட்டிங் (Coding) எழுதுற இந்த காலத்து இளவட்ட புரோகிராமர்களைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கு. அவங்க ஆபீஸ்ல 24 மணி நேரமும் ஹை-ஸ்பீட் வைஃபை இருக்கும். அதனால, "உலகத்துல இருக்குற எல்லார் வீட்டுலயும் வைஃபை எப்போவும் வேலை செஞ்சுகிட்டே இருக்கும்" அப்படிங்கிற கற்பனை உலகத்துலேயே அவங்க வாட்ஸ்அப் போன்ற ஆப்ஸை டிசைன் பண்றாங்க போல!
இவங்களாவது பரவாயில்லை... மொபைல் கம்பெனிகள்ல பல லட்சம் சம்பளம் வாங்கிட்டு 'ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு' (R&D) பண்றேன்னு உட்கார்ந்திருக்காங்களே ஒரு குரூப், அவங்களை என்ன சொல்றது?
ஒரு சாதாரண மொபைல் யூசருக்கு என்ன பிரச்சனை வரும்னு கூட யோசிக்காம, லேப் டெஸ்டிங்ல மட்டும் போன் நல்லா வேலை செய்யுதான்னு பார்த்துட்டு ஓகே சொல்லிடுறாங்க. நிஜ உலகத்துல ஒருத்தன் வைஃபை கட் ஆகி, ரோட்ல மெசேஜ் போகாம தவிப்பான்கிற எதார்த்தம் இந்த ஆர் அண்ட் டி (R&D) மேதாவிகளுக்கு ஏன் புரிய மாட்டேங்குதுன்னு தெரியல!
கம்பெனிகளின் குட்டி நியாயமும்... சுக்குநூறான எதார்த்தமும்!
சரி, இந்த மொபைல் கம்பெனிக்காரங்க நமக்கு துரோகம் பண்ணனும்னேவா இந்த செட்டிங்ஸை வச்சிருக்காங்க? அப்படின்னு கேட்டா, அவங்க தரப்புல ஒரு குட்டி நியாயத்தை சொல்றாங்க. மொபைல் டேட்டாங்கிறது நமக்கு காசு. ஆனா வைஃபைங்கிறது அன்லிமிட்டெட். நம்ம பாக்கெட் காசு வீணாகக் கூடாதுங்கிற நல்ல எண்ணத்துலயும், மொபைல் டேட்டா ஆன்ல இருந்தா பேட்டரி சீக்கிரம் தீந்துரும், வைஃபை இருந்தா பேட்டரி மிச்சமாகும்ங்கிற கணக்குலயும்தான் அவங்க வைஃபைக்கு ஃபர்ஸ்ட் பிரியாரிட்டி தர்றாங்க.
அவர்கள் சொல்லும் இந்த தொழில்நுட்பக் காரணங்களை நாம் ஏற்றுக் கொண்டாலும், இதில் ஒரு முக்கியமான எதார்த்தத்தை மொபைல் நிறுவனங்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றன.
இன்று வாட்ஸ்அப் போன்ற செயலிகள் வெறும் பொழுதுபோக்குக் கருவிகள் அல்ல; அவை உலகெங்கும் உள்ள சாதாரண மக்களின் அன்றாடத் தொடர்புகளுக்கான மிக முக்கியமான வாழ்வாதார அங்கம்.
அதுமட்டுமன்றி, உலகம் முழுவதும் உள்ள ஸ்மார்ட்போன் பயனர்களில் கிட்டத்தட்ட 90% பேர் வைஃபை வசதி இல்லாமல், வெறும் மொபைல் டேட்டாவை மட்டுமே நம்பித்தான் தங்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இப்படிப்பட்ட சூழலில், பெரும்பாலான மக்கள் பயணிக்கும் போதும், கடைகளில் காத்து இருக்கும்போது மொபைல் நெட்வொர்க்கையே அதிகம் சார்ந்திருக்கிறார்கள்.
நிலைமை இப்படி இருக்க, மொபைல் நிறுவனங்கள் இன்னும் பழைய கணக்கிலேயே வீட்டு வைஃபைக்கு மட்டுமே கண்மூடித்தனமாக முன்னுரிமை கொடுக்கும் இந்த ‘Default Setting’ அமைப்பை வைத்திருப்பது சற்று முரணாகவே தோன்றுகிறது. பயனர்களின் தற்போதைய தேவைகளையும் எதார்த்த சூழலையும் புரிந்து கொண்டு, இந்த அமைப்பில் அவர்கள் தகுந்த மாற்றங்களைக் கொண்டு வருவதுதான் புத்திசாலித்தனமாக இருக்கும்.
இந்த "வைஃபை ஏமாற்று வேலைக்கு" என்னதான் தீர்வு?
சரி, போன் கம்பெனிக்காரங்கதான் நடைமுறை தெரியாம செட்டிங்ஸ் வச்சிருக்காங்க. அதுக்காக நாம மெசேஜ் அனுப்பாம இருக்க முடியுமா? இந்த வைஃபை டிராப்ல (Wi-Fi Trap) இருந்து தப்பிக்க, உங்க போன்ல நீங்க செய்ய வேண்டிய சில முக்கியமான செட்டிங்ஸ் மாற்றங்கள் இதோ:
1. "வைஃபை அசிஸ்ட்" (Wi-Fi Assist / Adaptive Wi-Fi) ஆன் செய்யுங்கள்:
உங்க போன்ல வைஃபை கனெக்ஷன்ல இன்டர்நெட் இல்லைன்னா, உடனே போன் தானாகவே மொபைல் டேட்டாவிற்கு மாறும்படி ஒரு செட்டிங் இருக்கு.
ஆண்ட்ராய்டு (Android) போனில்: Settings -> Wi-Fi -> Wi-Fi Assistant அல்லது Intelligent Wi-Fi என்பதற்குச் செல்லவும். அங்கே "Switch to mobile data automatically" என்ற ஆப்ஷனை ஆன் செய்து வையுங்கள்.
ஐபோனில் (iPhone): Settings -> Cellular (Mobile Data) பகுதிக்குச் செல்லவும். அப்படியே கீழே கடைசி வரை ஸ்க்ரோல் செய்தால், "Wi-Fi Assist" என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை ஆன் செய்து விடுங்கள்.
2. வாட்ஸ்அப் டேட்டா கட்டுப்பாட்டை நீக்குங்கள் (Data Restrictions):
உங்கள் போன் Settings -> Apps -> Manage Apps -> WhatsApp பகுதிக்குச் செல்லவும். அங்கே Restrict Data Usage அல்லது Data Usage என்ற ஆப்ஷனில் Mobile Data (SIM 1 / SIM 2) மற்றும் Wi-Fi ஆகிய இரண்டுக்கும் ‘டிக்’ (Allow) செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
3. டேட்டா சேவர் (Data Saver) மோடை ஆஃப் செய்யுங்கள்:
உங்க போன்ல 'Data Saver' ஆன்ல இருந்தா, வைஃபை கட் ஆன உடனே மொபைல் டேட்டா பேக்ரவுண்ட்ல வேலை செய்யாது. அதனால செட்டிங்ஸ்ல போயி Data Saver அல்லது Ultra Data Saving மோடை ஆஃப் பண்ணி வைங்க.
ஆக, தொழில்நுட்பம் நம்ம வாழ்க்கையை எளிமையாக்கணும், ஆனா அதுவே நமக்கு தலைவலியா மாறக்கூடாது. இனிமே வீட்டு வைஃபை ஆன்ல இருக்கும்போது ஒரு மெசேஜ் அனுப்புனா, அதுல 'சிங்கிள் டிக்' விழுகுதா இல்ல 'கடிகார பொம்மை' (Clock Icon) காட்டுதான்னு ஒரு செகண்ட் கவனிங்க.
கடிகார பொம்மை காட்டுனா, உங்க வைஃபை உங்களை ஏமாத்துதுன்னு அர்த்தம்! உடனே மேல சொன்ன செட்டிங்ஸை மாத்தி, உங்க ஸ்மார்ட்போனை நிஜமாலுமே "ஸ்மார்ட்" ஆக்குங்க!
- 𝘊𝘩𝘪𝘵𝘩𝘢 𝘚𝘢𝘵𝘨𝘶𝘳𝘶
Yozen Balki


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: