ஒரு மனிதன், ஆர்வத்தின் காரணமாக அல்லது சுயதேவையின் காரணமாக அந்தந்த நாடுகளுக்குச் செல்லும் பொழுது சில மொழிகளைக் கற்றுக்கொள்வது அவசியம் தான். அது அவனுடைய அறிவையும் உலக அனுபவத்தையும் விரிவுபடுத்துகிறது.
ஆனால் ஒரு கேள்வி இருக்கிறது.
ஒரு மாநிலத்தின் குக்கிரமங்களில் கூட உதாரணமாக தமிழ்நாட்டின் ஒரு கடைகோடி கிராமத்தில் வாழும் ஒரு சிறுவன் எதற்காக தன் தாய்மொழி தவிர்த்த வேறு இரண்டு மொழிகளை கற்க வேண்டும்?
அவன் கல்லூரிக்கு செல்லும் பொழுது அல்லது ஒரு மேற்படிப்பு அல்லது தொழிற்கல்வி பயிலும் பொழுது தேவை கருதி அவன் விருப்பத்திற்கு ஏற்ப வேறு ஒரு மொழியை தேவைப்பட்டால் அவன் படித்துக் கொள்ளட்டும்.
ஆனால், எந்த ஒரு குழந்தையும் பிறந்தது முதலே அல்லது ஆரம்பப் பள்ளி நடுநிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பிற மொழிகளைக் கற்றுக்கொள்வதற்காக நம்முடைய தாய்மொழியின் முக்கியத்துவத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டுமா?
"இந்தி கற்றுக் கொண்டால் என்ன? இன்னொரு மொழிதானே! கற்றுக்கொள்வதில் என்ன பிரச்சினை?" என்று கேட்பவர்கள், ஒரு மொழியின் பின்னால், அதாவது தமிழ் மொழியின் பின்னால் இருக்கின்ற வரலாற்றையும் பண்பாட்டையும், பல மொழிகள் காலப்போக்கில் அழிந்து போன காரணங்களையும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
ஒரு மொழி என்பது வெறும் பேச்சுக்கான கருவி மட்டுமல்ல. அது ஒரு சமூகத்தின் பல தலைமுறைகளின் நினைவகம். அந்த மக்களின் வாழ்க்கை முறை, அறிவு, சிந்தனை, கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, அறநெறிகள் என அனைத்தையும் தலைமுறை தலைமுறையாகச் சுமந்து செல்லும் மிகப்பெரிய பொக்கிஷம்.
ஒரு மொழியின் பயன்பாடு குறைந்து, அது அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படாமல் போனால், அந்த மொழியில் உருவான தனித்துவமான சிந்தனைகளையும் அறிவுச் செல்வங்களையும் இயல்பாகப் பாதுகாப்பது மிகவும் கடினமாகிவிடும்.
வரலாற்றில் மறைந்துபோன மொழிகளும் பண்பாடுகளும்!
உலக வரலாற்றில் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களையும் நாகரிகங்களையும் உருவாக்கிய பல சமூகங்கள், காலப்போக்கில் தங்களுடைய பழைய மொழியை இழந்து வேறொரு மொழியைப் பேசத் தொடங்கியிருக்கின்றன.
அவர்களுடைய மொழி மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைப் பார்ப்போம்.
1. ரோமானியப் பேரரசும் கவுல் மக்களும்
இன்றைய பிரான்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்த கவுல் (Gaul) மக்கள் செல்டிக் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கவுலிஷ் மொழியைப் பேசிவந்தனர்.
கி.மு. முதல் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசின் ஆட்சிக்குள் அந்தப் பகுதிகள் வந்த பிறகு, லத்தீன் மொழியின் செல்வாக்கு படிப்படியாக அதிகரித்தது.
நிர்வாகம், வணிகம், நகர்ப்புற வாழ்க்கை, கல்வி போன்ற துறைகளில் லத்தீன் மொழி முக்கியத்துவம் பெற்றது. ஆரம்பத்தில் இரு மொழிகளையும் பயன்படுத்திய மக்கள், அடுத்தடுத்த தலைமுறைகளில் லத்தீன் மொழியை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கினர்.
இந்த மாற்றம் ஒரே நாளில் நடைபெறவில்லை. பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு வேகத்தில் நடைபெற்றது.
இறுதியில் கவுலிஷ் மொழி அன்றாடப் பயன்பாட்டிலிருந்து மறைந்தது. லத்தீன் மொழியின் பிராந்தியப் பேச்சு வடிவங்களிலிருந்து பின்னர் பிரெஞ்சு மொழி உருவானது.
கவுல் மக்கள் அனைவரும் அழிந்துவிடவில்லை. அவர்களுடைய சந்ததியினர் அங்கேயே வாழ்ந்தார்கள். ஆனால் அவர்களுடைய பழைய மொழி மறைந்துவிட்டது.
2. பாபிலோனிய நாகரிகமும் அக்காடிய மொழியும்
உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றான பாபிலோனிய நாகரிகம் மெசபடோமியப் பகுதியில் உருவானது.
அந்தப் பிரதேசத்தின் முக்கிய மொழிகளில் ஒன்று அக்காடியன். அதன் ஒரு வடிவம்தான் பாபிலோனிய மொழி.
பின்னர் அரமேய மொழி மேற்கு ஆசியாவின் பல பகுதிகளில் வணிகம், நிர்வாகம், அன்றாடத் தொடர்பு ஆகியவற்றுக்கான பொதுமொழியாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
இதனால் அக்காடிய மொழியின் அன்றாடப் பயன்பாடு படிப்படியாகக் குறைந்தது. இறுதியில் அது பேசுமொழியாக மறைந்து, எழுத்து மற்றும் கல்வி மரபுகளில் மட்டுமே சில காலம் தொடர்ந்தது.
இங்கே ஒரு முக்கியமான வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும்: அரமேய மொழியும் மறைந்துவிடவில்லை. அதன் பல நவீன வடிவங்கள் இன்றும் பேசப்படுகின்றன. ஒரு மொழியின் வளர்ச்சி இன்னொரு மொழியின் பயன்பாட்டை எவ்வாறு மாற்றக்கூடும் என்பதற்கான வரலாற்று உதாரணம் இது.
3. எகிப்திய நாகரிகமும் காப்டிக் மொழியும்
பிரமிடுகளையும் பிரம்மாண்டமான கட்டிடங்களையும் உருவாக்கிய பண்டைய எகிப்தியர்களுக்கென்று தனித்த மொழியும் எழுத்து மரபும் இருந்தன.
அந்தப் பழைய எகிப்திய மொழியின் வரலாற்றுத் தொடர்ச்சியாக உருவான காப்டிக் மொழி, பின்னர் எகிப்தியர்களின் முக்கிய மொழியாக இருந்தது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அரபு ஆட்சி எகிப்தில் நிலைபெற்ற பிறகு, அரபு மொழியின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது.
நிர்வாகம், வணிகம், சமூக வாழ்க்கை போன்ற துறைகளில் அரபு மொழி முன்னிலை பெற்றது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு காப்டிக் மொழி பொதுமக்களின் அன்றாடப் பேச்சிலிருந்து பெருமளவில் மறைந்துவிட்டது.
இன்றும் எகிப்தின் காப்டிக் கிறிஸ்தவ தேவாலயங்களில் காப்டிக் மொழி வழிபாட்டு மொழியாகத் தொடர்கிறது.
4. சுமேரிய நாகரிகமும் சுமேரிய மொழியும்
உலகின் மிகப் பழமையான நகர நாகரிகங்களில் ஒன்றான சுமேரியர்கள் எழுத்து, கணிதம், நகர நிர்வாகம், இலக்கியம் ஆகியவற்றில் மிகப்பெரிய பங்களிப்புகளைச் செய்தவர்கள்.
அவர்களுக்கென்று தனித்த மொழி இருந்தது.
பின்னர் அக்காடிய மொழியின் செல்வாக்கு அதிகரித்தபோது சுமேரிய மொழி அன்றாடப் பேச்சிலிருந்து படிப்படியாக மறைந்தது. ஆனால் அந்த மொழியின் இலக்கியங்களும் மத நூல்களும் பல நூற்றாண்டுகள் கல்வி மற்றும் வழிபாட்டுத் துறைகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டன.
இன்று சுமேரிய மொழியைத் தாய்மொழியாகப் பேசும் மக்கள் இல்லை.
இந்த வரலாறுகள் நமக்கு ஒரு முக்கியமான உண்மையை உணர்த்துகின்றன.
ஒரு மொழி அழிவது என்பது அந்த மொழியைப் பேசும் மக்கள் அனைவரும் அழிந்துவிடுகிறார்கள் என்பதல்ல. ஆனால் அவர்களுடைய தனித்துவமான மொழி அடையாளமும், அந்த மொழியின் மூலம் தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்ட பண்பாட்டு நினைவுகளும் அன்றாட வாழ்க்கையிலிருந்து மறைந்துபோகலாம்.
தமிழ் என்பது வெறும் தொடர்பு மொழியா?
இப்போது நாம் தமிழைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
தமிழ் வெறும் பேச்சு மொழியல்ல. பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்த இலக்கிய வரலாற்றையும், உலகின் மிகச் சிறந்த வாழ்வியல் சிந்தனைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு செம்மொழி.
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்? அவனுடைய ஒழுக்கம் எப்படி இருக்க வேண்டும்? காதல் என்றால் என்ன? வீரம் என்றால் என்ன? விருந்தோம்பல் என்றால் என்ன? மனிதர்களுக்கு இடையிலான உறவுகள் எப்படி இருக்க வேண்டும்? ஆட்சியாளன் எப்படி இருக்க வேண்டும்? அறம் என்றால் என்ன?
இப்படிப்பட்ட வாழ்க்கை சார்ந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் நூற்றுக்கணக்கான படைப்புகள் தமிழில் இருக்கின்றன.
அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம், திருக்குறள், நாலடியார், ஔவையாரின் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை போன்ற நூல்கள் வெறும் இலக்கியப் படைப்புகள் அல்ல. அவை மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதற்கான அறிவுக் கருவூலங்கள்.
இவை நமக்கு மொழியை மட்டும் கற்றுக்கொடுப்பதில்லை; எப்படி வாழ வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்கின்றன. மனிதநேயம், அறம், ஒழுக்கம், அன்பு, விருந்தோம்பல், வீரம், சமூகப் பொறுப்பு போன்ற உயர்ந்த விழுமியங்களை எடுத்துரைக்கின்றன.
குறிப்பாகத் திருக்குறள் ஒரு மதத்திற்கோ, ஒரு நாட்டிற்கோ, ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ மட்டும் உரிய நூல் அல்ல. உலகில் எந்த மனிதனும் பின்பற்றக்கூடிய அறத்தையும் வாழ்வியல் நெறிகளையும் எடுத்துரைக்கும் உலகப் பொதுமறை.
இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகால அறிவுச் செல்வங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு மொழியை நாம் வெறும் தொடர்புக்கான கருவியாக மட்டும் பார்க்கலாமா?
இன்றே நம் வீடுகளில் தொடங்கிவிட்ட மொழி மாற்றம்!
நாம் வரலாற்றில் படித்துக்கொண்டிருக்கும் மொழி மாற்றம் இன்று நம் கண் முன்னாலேயே நம் வீடுகளில் நடைபெறத் தொடங்கிவிட்டது.
ஆங்கிலத்தின் ஆதிக்கத்தால் இன்றைய குழந்தைகளில் பலர் தமிழில் சரளமாகப் பேச முடியாத நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
நம்முடைய குடும்பங்களிலேயே இதைப் பார்க்க முடிகிறது. சில பேரப்பிள்ளைகளுக்குத் தமிழில் முழுமையாகப் பேசவும், புரிந்துகொள்ளவும் தெரியாத நிலை உருவாகிவிட்டது. சில குழந்தைகளுக்கு தமிழில் பேசும் திறன் மிகவும் குறைவாக இருக்கிறது.
இதற்குக் காரணம் என்ன?
குழந்தைகள் ஆங்கிலத்தில் படிப்பது மட்டுமல்ல. வீட்டில் பெற்றோர்கள் பேசுவது, பள்ளியில் கற்பிக்கப்படும் மொழி, தொலைக்காட்சி, இணையம், சமூக ஊடகங்கள் என அவர்களுடைய அன்றாட வாழ்க்கையின் பெரும்பகுதியும் ஆங்கிலத்தை மையமாகக் கொண்டிருக்கிறது.
இதனால் குழந்தைகள் படிப்படியாக ஆங்கிலத்திலேயே சிந்திக்கவும் பேசவும் பழகிவிடுகிறார்கள்.
ஆங்கிலம் கற்றுக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. உண்மையில் உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்களுடன் தொடர்புகொள்ள உதவும் ஒரு முக்கியமான சர்வதேச மொழி அது.
ஆனால் ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்காகத் தமிழை மறக்க வேண்டிய அவசியம் என்ன?
ஏற்கெனவே ஆங்கிலத்தின் ஆதிக்கத்தால் தாய்மொழியின் பயன்பாடு குறைந்துகொண்டிருக்கும் சூழலில், மேலும் ஹிந்தி போன்ற இன்னொரு மொழியைக் கட்டாயமாக்குவதற்கு முன்பு நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
ஒரு குழந்தை மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் என்றால் அதற்கான நேரம், பயிற்சி, ஆசிரியர்கள், கற்றல் வாய்ப்புகள் அனைத்தும் சரியான முறையில் திட்டமிடப்பட வேண்டும்.
மூன்று மொழிகளைக் கற்பது என்பது தானாகவே தாய்மொழியை அழித்துவிடும் என்று சொல்ல முடியாது.
ஆனால் மற்ற மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, தாய்மொழியின் வாசிப்பு, எழுத்து, இலக்கியப் பயிற்சி ஆகியவற்றுக்கு உரிய நேரமும் முக்கியத்துவமும் குறைந்துவிட்டால் முதலில் பாதிக்கப்படுவது தாய்மொழிதான் என்பதை உலக வரலாறு நமக்கு ஏற்கனவே உணர்த்தி இருக்கிறதே!
ஏற்கெனவே ஆங்கிலத்தால் சுருங்கிக்கொண்டிருக்கும் தமிழின் இடத்தை மேலும் ஹிந்தி மொழி சுருக்கிவிடும் அபாயத்தை நாம் கவனிக்க வேண்டாமா?
இந்தியா ஒரு மொழி பேசும் நாடு அல்ல!
இந்தியா பல்வேறு மொழிகளையும், பண்பாடுகளையும், வரலாறுகளையும் கொண்ட ஒரு மிகப்பெரிய கூட்டாட்சி நாடு.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், மராத்தி, பஞ்சாபி, அஸ்ஸாமி, ஒடியா என ஒவ்வொரு மொழிக்கும் தனித்த வரலாறும் இலக்கியச் செல்வமும் இருக்கின்றன.
இந்தியாவின் ஒற்றுமை என்பது எல்லோரும் ஒரே மொழியைப் பேசுவதில் இல்லை. பல மொழிகளைப் பேசிக்கொண்டே ஒற்றுமையாக வாழ்வதில்தான் இருக்கிறது.
இந்தி பேசுபவர்களும் அவர்களுடைய மொழியைப் பாதுகாக்கட்டும். அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.
தமிழர்களில் சிலர் தனிப்பட்ட முறையில் வீட்டிலிருந்த படி இந்தியைக் கற்றுக்கொள்ள விரும்பினால் கற்றுக்கொள்ளட்டும். அதிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏற்கனவே அப்படி கற்றுக்கொள்வதற்கு ஹிந்தி பிரச்சார சபாக்கள் ஏராளம் உள்ளனவே!
ஆனால் இந்தி தெரியாததால் ஒரு தமிழன் வாய்ப்புகளை இழக்கக்கூடாது. இந்தி தெரியாததால் அவன் இரண்டாம் தரக் குடிமகனாக உணர வேண்டிய நிலை ஏற்படக்கூடாது.
இந்தியாவில் பல மொழிகள் இருக்கும்போது, ஒரு மொழிக்கு மட்டும் மற்ற மொழிகளைக் காட்டிலும் கூடுதலான அரசியல், நிர்வாக அல்லது கல்வி முன்னுரிமை வழங்கப்படுவது ஏன்?
ஆங்கிலம் உலகளாவிய தொடர்பு மொழியாகப் பயன்படுகிறது. ஆனால் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இந்தி பேசப்படுவதில்லை. எனவே இந்தி கற்றுக்கொள்வதையும், இந்தி அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுவதையும் ஒன்றாகக் கருதக்கூடாது.
மொழிகளைக் கற்றுக்கொள்வது மக்களின் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப அமைய வேண்டும். அது அரசியல் அல்லது நிர்வாக அழுத்தத்தின் மூலம் திணிக்கப்படக்கூடாது.
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்திலும் போய் மொழித் திணிப்பு ஏன்?
இன்றைய உலகம் தொழில்நுட்பத்தின் மூலம் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.
ஒரு காலத்தில் இன்னொரு நாட்டுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் பேசுவதற்காக அவர்களுடைய மொழியைக் கற்றுக்கொள்வது அவசியமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று மொழிபெயர்ப்புத் தொழில்நுட்பம் அந்தச் சிரமத்தைப் பெருமளவு குறைத்திருக்கிறது.
Google Translate போன்ற மொழிபெயர்ப்புக் கருவிகள் பல மொழிகளுக்கு இடையே தொடர்புகொள்ள உதவுகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமும் மொழிபெயர்ப்பு, குரல் வழித் தொடர்பு, உரையாடல் போன்ற துறைகளில் எத்தனையோ முன்னேற்றங்களை உருவாக்கி வருகிறது. ஒரு மொழி ஒழுங்காக தெரிந்தால் போதும் என்ற நிலை வந்து விட்டது!
நிச்சயமாக இந்தத் தொழில்நுட்பங்கள் இன்னும் முழுமையானவை அல்ல. எல்லா மொழிகளின் நுணுக்கங்களையும், பண்பாட்டுப் பின்னணியையும், உணர்வுகளையும் எப்போதும் சரியாக மொழிபெயர்க்க முடியாது. ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதால் கிடைக்கும் நேரடி அனுபவத்தையும் அவை முழுமையாக மாற்றிவிட முடியாது.
அதனால், அடிப்படைத் தொடர்புக்காகவே இன்னொரு மொழியை அனைவரும் கட்டாயமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை இப்போது மாறிக்கொண்டிருக்கிறது.
உலகின் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களுக்கிடையே மொழிபெயர்ப்புப் பாலங்களை உருவாக்குவதற்கு அரசுகளும் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஏன் இன்னும் அதிகமாக முயற்சி செய்யக்கூடாது?
ஒரு மொழியை மற்றொரு மொழியின் மீது திணிப்பதற்குப் பதிலாக, மொழிகளுக்கு இடையே தொடர்பை எளிதாக்கும் தொழில்நுட்பத்தை வளர்ப்பதுதானே சிறந்த வழி?
உலகத்துடன் தொடர்புகொள்வதற்கு தொழில்நுட்பம் உதவுகிறது. ஆனால் நம்முடைய முன்னோர்களுடன் தொடர்புகொள்வதற்கு நம்முடைய தாய்மொழிதான் உதவுகிறது!
மொழிகள் ஒரு மலர் தோட்டத்தைப் போன்றவை!
இந்தியாவை ஒரு அழகான மலர் தோட்டமாகக் கற்பனை செய்து பாருங்கள்.
அந்தத் தோட்டத்தில் ரோஜா இருக்கிறது. மல்லிகை இருக்கிறது. செம்பருத்தி இருக்கிறது. தாமரை இருக்கிறது. சாமந்தி இருக்கிறது.
ஒவ்வொரு மலருக்கும் தனித்த அழகும், தனித்த மணமும் இருக்கிறது.
ஒரு தோட்டத்தின் உரிமையாளர், "எனக்குப் பிடித்த மலர்தான் இந்தத் தோட்டத்தில் இருக்க வேண்டும். மற்ற மலர்கள் எதற்கு?" என்று சொல்லி மற்ற மலர்களைப் பராமரிக்காமல் விட்டுவிட்டால் என்ன நடக்கும்?
காலப்போக்கில் அந்த மலர்கள் வாடிவிடும். தோட்டத்தின் பன்முக அழகும் குறைந்துவிடும்.
இந்திய மொழிகளும் அப்படித்தான்.
ஒவ்வொரு மொழிக்கும் தனித்த இலக்கியம், வரலாறு, பண்பாடு, சிந்தனை, அறிவு ஆகியவை இருக்கின்றன. இந்தி அழகான மொழி என்றால் தமிழ் அழகில்லாத மொழி என்று பொருளா? வங்காள மொழியின் இலக்கியச் செல்வம் உயர்ந்தது என்றால் மலையாளத்தின் பண்பாட்டு வளம் குறைந்துவிடுமா?
ஒவ்வொரு மொழியும் தனக்குரிய இடத்தில் வளர வேண்டும். ஒரு மொழி வளர்வதற்காக இன்னொரு மொழியின் பயன்பாடு குறைக்கப்படக்கூடாது.
ஒரு நாட்டின் உண்மையான அழகு அதன் மொழிப் பன்முகத்தன்மையில்தான் இருக்கிறது.
எல்லா மலர்களும் பூக்கட்டும்; எந்த மலரையும் இன்னொரு மலருக்காக அழிக்க வேண்டாம்!
மொழிகளுக்கு இடையே பாலம் அமைப்போம்; மொழிகளுக்கு இடையே சுவர் எழுப்ப வேண்டாம்!
முதலில் அழிவது தாய்மொழிதான்!
ஒரு குடும்பத்தில் மூன்று மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம்.
ஒரு மொழி சர்வதேசத் தொடர்புக்கு அவசியமானதாக இருக்கிறது. இன்னொரு மொழி நாட்டின் பிற பகுதிகளுடன் தொடர்புகொள்ள உதவுகிறது. மூன்றாவது மொழி அந்தக் குடும்பத்தின் தாய்மொழியாக இருக்கிறது.
இந்த மூன்று மொழிகளுக்கும் சமமான பயன்பாடும் முக்கியத்துவமும் கொடுக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்?
வேலைவாய்ப்புக்கும் கல்விக்கும் அதிகம் பயன்படும் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். தாய்மொழி வீட்டில் பேசுவதற்கான ஒரு மொழியாக மட்டுமே சுருங்கிவிடும்.
அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் மொழி வீடுகளில், பிற மொழிகளோடு கலந்து குழப்பி பேசுகின்ற வெறும் பேச்சு மொழியாக மாறி வருகின்ற அவல நிலை வந்துவிட்டது.
இனி, குழந்தைகளுக்குத் தாய்மொழியைப் படிக்கவும் எழுதவும் தெரியாமல் போகும். அடுத்த தலைமுறைக்கு அந்த மொழியில் இலக்கியங்களைக் கற்றுக்கொடுக்க முடியாது. அதற்கடுத்த தலைமுறைக்கு அந்த மொழியைப் புரிந்துகொள்ளக்கூட முடியாமல் போகலாம்.
இப்படித்தான் உலகின் பல மொழிகள் காலப்போக்கில் மறைந்திருக்கின்றன.
அவை ஒரே நாளில் அழிந்துவிடவில்லை. பல தலைமுறைகளாகப் பயன்பாடு குறைந்து, இறுதியில் அன்றாட வாழ்க்கையிலிருந்து மறைந்துவிட்டன.
தமிழுக்கும் அப்படியொரு நிலை வரக்கூடாது என்பதுதான் நம்முடைய கவலை.
தமிழைக் காப்பது என்பது பிற மொழிகளை எதிர்ப்பதல்ல!
நாம் ஆங்கிலத்தைக் கற்கலாம். இந்தியைக் கற்கலாம். உலகில் உள்ள எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்கலாம்.
ஆனால் நம்முடைய தாய்மொழியை மறந்துவிட்டு மற்ற மொழிகளை மட்டும் கற்றுக்கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது?
நம்முடைய குழந்தைகளுக்கு ஆங்கிலமும் தெரிய வேண்டும். இந்தியும் தெரிந்துகொள்ள விரும்பினால் தனிப்பட்ட முறையில் எதையும் கற்றுக்கொள்ளட்டும். அது பள்ளிக்கூடங்களில் வைத்து கற்றுக் கொடுக்கும் அவசியம் என்ன வந்தது?
ஆனால் அதே குழந்தைகளுக்குத் திருக்குறள் தெரிய வேண்டும். ஆத்திசூடி தெரிய வேண்டும். அகநானூறும் புறநானூறும் தெரிய வேண்டும். தமிழின் வரலாறும் அதன் இலக்கியப் பெருமையும் தெரிய வேண்டும்.
அவர்கள் தங்களுடைய பாட்டன், பாட்டியிடம் தமிழில் உரையாட வேண்டும். தமிழில் சிந்திக்க வேண்டும். தமிழில் எழுத வேண்டும். தமிழில் பல நூல்கள் எழுதிப் படைக்க வேண்டும்.
அதுதான் ஒரு மொழியின் உண்மையான வாழ்வு.
மொழியைப் பாதுகாப்பது என்பது தமிழ் பேசும் மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த ஒரு அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல. ஒவ்வொரு குடும்பத்தினுடைய பொறுப்பும்கூட.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தமிழில் பேச வேண்டும். பள்ளிகளில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். புதிய அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் தமிழ் வளர வேண்டும்.
ஒரு மொழியைப் பாதுகாக்க வேண்டுமென்றால் அந்த மொழியைப் பேசுவது மட்டுமல்ல; அந்த மொழியில் புதிய அறிவையும் உருவாக்க வேண்டும்.
இறுதியாக...
உலக வரலாற்றில் மிகப்பெரிய நாகரிகங்களை உருவாக்கிய பல மக்களின் மொழிகள் இன்று இல்லை.
அந்த மொழிகள் மறைந்தபோது அவற்றுடன் தொடர்புடைய தனித்துவமான இலக்கியங்கள், பண்பாட்டு நினைவுகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றின் பெரும்பகுதியும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து மறைந்துவிட்டன.
நம்முடைய தமிழ் மொழி அப்படிப்பட்ட ஒரு நிலைக்குச் சென்றுவிடக்கூடாது.
இந்தி கற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆங்கிலம் கற்றுக்கொள்வதிலும் தவறில்லை. உலகின் பல மொழிகளைக் கற்றுக்கொள்வதிலும் தவறில்லை.
ஆனால் அந்த மொழிகளைக் கற்றுக்கொள்வதற்காகத் தமிழின் இடத்தைக் குறைப்பதில்தான் ஆபத்து இருக்கிறது.
ஒரு மொழியை இழந்த பிறகு அதன் பெருமையைப் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை.
இன்று நாம் தமிழைப் பாதுகாக்கத் தவறினால், நாளை நம்முடைய பேரப்பிள்ளைகள் தமிழின் பெருமையைப் பற்றி வேறொரு மொழியில் படித்துக்கொண்டிருக்க வேண்டிய நிலை வரலாம்.
அந்த நிலை நமக்கு வேண்டுமா?
மொழிகள் பல கற்போம்! உலக அறிவைப் பெறுவோம்! ஆனால் நம்முடைய தாய்மொழியை ஒருபோதும் இழக்கமாட்டோம்!
தமிழ் நீடூழி இன்னும் வாழ வேண்டும்! தமிழில் சிந்திக்கும், தமிழில் பேசும் எழுதும், நமது பிற்காலத் தலைமுறைகள் வாழையடி வாழையாக உருவாக வேண்டும். தமிழின் அறிவுச் செல்வம் அடுத்த பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். இதுவே நமது தமிழ் அன்னைக்கு செய்யும் தொண்டாகும்!
-சித்த சத்குரு யோஜென் பால்கி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: