Translate this blog to any language

திங்கள், 9 நவம்பர், 2026

நீட் (NEET) தேர்வு முறையும், தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்பட்ட அநீதியும்!

இந்தியாவில் மருத்துவக் கல்வியை முறைப்படுத்தவும், தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கவும் "ஒரே நாடு, ஒரே தேர்வு" என்ற முழக்கத்தோடு கொண்டுவரப்பட்ட நுழைவுத் தேர்வுதான் நீட் (NEET).


மனித உயிர்களோடு விளையாடும் மருத்துவத் துறையில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கம் ஒருபுறமிருந்தாலும், மறுபுறம் இந்தத் தேர்வு முறை தமிழகத்தின் சமூக நீதி கட்டமைப்பிலும், குறிப்பாகக் கிராமப்புற மாணவர்களின் வாழ்விலும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகவும் ஆழமானது; கவலைக்குரியது.

இக்கட்டுரையில், நீட் தேர்வுக்கு முன்பும் பின்பும் தமிழகக் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு எவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளது என்பதை அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுடன் விரிவாகக் காண்போம்.

அறுபது (60%) சதவீதத்திலிருந்து சரிந்த வீழ்ச்சி: புள்ளிவிவரங்கள் காட்டும் உண்மை

நீட் தேர்வு கொண்டுவரப்படுவதற்கு முன்பு வரை, தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் (Cut-off) அடிப்படையில் மட்டுமே மருத்துவச் சேர்க்கை நடைபெற்றது. அப்போது, கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அல்லது சாதாரண மாநிலப் பாடத்திட்ட (State Board) தனியார் பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண் எடுத்த கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் தங்கு தடையின்றி கிடைத்தன.

தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் கமிட்டி அறிக்கை (2021) வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி:

• நீட் தேர்வுக்கு முன்பு (Pre-NEET): தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த ஒட்டுமொத்த மாணவர்களில் கிராமப்புற மாணவர்களின் சதவீதம் 61.45% ஆக இருந்தது. அதாவது, 100 மருத்துவ இடங்களில் சுமார் 61 இடங்கள் கிராமப்புற மாணவர்களுக்கே கிடைத்தன.

• நீட் தேர்வுக்கு பின்பு (Post-NEET): இந்த எண்ணிக்கை சராசரியாக 50% ஆகக் குறைந்தது. சில குறிப்பிட்ட ஆண்டுகளில் இது 49.9% என்ற அளவிற்கு கீழ் இறங்கியது.

சுருக்கமாகச் சொன்னால், ஒட்டுமொத்தக் கிராமப்புற தமிழக மாணவர்களின் மருத்துவச் சேர்க்கை விகிதத்தில் சுமார் 11.5% சரிவு ஏற்பட்டுள்ளது. 

இது ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை அநியாயமாகப் பறித்துள்ளது.

பயிற்சி மையங்களின் ஆதிக்கமும், பாடத்திட்ட அநீதியும்.

கிராமப்புற மாணவர்கள் பொதுப் போட்டியில் (Open Competition) இவ்வளவு பெரிய சரிவைச் சந்திக்க இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன:

1. கோச்சிங் கலாச்சாரம் (Coaching Center Domination): 

நீட் தேர்வு என்பது பள்ளிப் படிப்புடன் முடிந்துவிடுவதில்லை. லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கும் தனியார் பயிற்சி மையங்களுக்குச் சென்று, பல வருடங்கள் தங்கி (Repeaters) படிப்பவர்களுக்கே இன்று மருத்துவ இடங்கள் கிடைக்கின்றன. கிராமப்புறங்களில் வசிக்கும் ஒரு எளிய விவசாயிக்கோ அல்லது தினக்கூலிக்கோ தன் பிள்ளையை இத்தகைய சொகுசுப் பயிற்சி மையங்களுக்கு அனுப்பும் பொருளாதார வசதி கிடையாது.

2. சிபிஎஸ்இ (CBSE) எனும் ஒன்றிய கல்விமுறையின் ஆதிக்கம்: 

நீட் தேர்வின் வினாத்தாள்கள் பெரும்பாலும் ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை ஒட்டி வடிவமைக்கப்படுகின்றன. அந்தக் கல்வி முறையானது ஆரம்ப காலத்தில் ராணுவம் மற்றும் ரயில்வே துறை போன்றவற்றில் பணிபுரிபவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் இடம் மாறும் பொழுது, அவர்களது குழந்தைகள் மாநில கல்வி முறை மாற்றங்களால் பாதிப்படையாமல் இருக்க அவர்களுக்கென ஏற்படுத்தப்பட்ட ஒரு பொதுவான கல்வி முறையாகும். 

இன்று வரை அதுபோல ஒன்றிய அரசின் CBSE கல்வி முறையில் பயிலும் மாணவர்கள் சதவிகிதம் வெறும் 12% மட்டுமே ஆகும். மீதமுள்ள மாநிலம் வழி கல்வி முறையில் இந்தியா முழுவதும் படிக்கும் மாணவர்கள் சதவிகிதம் 88% ஆகும். 

ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு மாநில வழியில் கல்வி பயிலும் 88% மாணவர்களின் நலனை புறக்கணித்து விட்டு ஒன்றிய அரசுப் பணிகளில் பணிபுரியும் அதிகாரிகளின் குழந்தைகள் மட்டும் உயர்கல்வி, உயர் வேலைவாய்ப்புகளில் வரவேண்டும் என்பதற்காக CBSE பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகளை வடிவமைப்பது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை!!

இதனால், தமிழக மாநிலப் பாடத்திட்டத்தில் (State Board) தமிழ் வழியில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு இது ஆரம்பத்திலிருந்தே சமமற்ற ஒரு போட்டியாக (Unequal Competition) மாறிப்போனது.


தேசிய அளவிலான நம்பகத்தன்மைச் சரிவு: வட இந்தியாவிலும் வெடித்த எதிர்ப்பு

தமிழகம் ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து வந்த நிலையில், சமீப காலங்களில் இத்தேர்வின் நம்பகத்தன்மை அகில இந்திய அளவிலும், குறிப்பாக வட இந்திய மாணவர்களிடையேயும் மிகக் கடுமையான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்தியாவில் அவ்வப்போது பத்திரிகைகளிலும் ஊடகங்களில் வெளியாகும் நீட் வினாத்தாள் கசிவு (Paper Leak) மோசடிகள், தேர்வு முறைகேடுகள் மற்றும் மதிப்பெண் குளறுபடிகள் போன்றவை தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதனால், நீட் தேர்வு என்பது மிகவும் நேர்மையான மற்றும் நம்பகமான ஒரு தேர்வு முறை என்று நம்பிக் கொண்டிருந்த வட இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூட, தற்போது இத்தேர்வின் மீதான தங்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்து வீதிகளில் இறங்கிப் போராடும் அவலநிலை உருவாகியுள்ளது. 

நீட் தேர்வு என்பது தகுதியைத் தீர்மானிக்கும் தேர்வு அல்ல, அது முறைகேடுகளின் கூடாரம் என்ற தமிழகத்தின் நீண்ட கால வாதத்திற்கு இந்தத் தேசிய அளவிலான குளறுபடிகள் ஒரு வலுவான சான்றாக அமைந்துவிட்டன.

7.5% உள்ஒதுக்கீடு: ஒரு முதலுதவி மட்டுமே, முழுமையான தீர்வல்ல!

நீட் தேர்வு வந்த தொடக்க காலத்தில், அரசுப் பள்ளிகளில் படித்து மருத்துவக் கல்லூரிகளுக்குள் நுழைந்த மாணவர்களின் எண்ணிக்கை, (நீட் தேர்வு இல்லாத காலத்தில் கிடைத்த 60% போல அல்லாமல்) வெறும் 0.16% ஆக (அதாவது ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் சேர்த்து 5 அல்லது 6 மாணவர்கள் மட்டுமே) மிக மோசமாகச் சரிந்தது.

அந்தக் காலகட்டத்தில் தான், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1200-க்கு 1182 போன்ற மாநிலத்திலேயே மிக அதிக மதிப்பெண்கள் எடுத்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா போன்ற கிராமப்புற ஏழை மாணவிகள், நீட் தேர்வு என்ற புதிய முறையினால் தங்களின் மருத்துவக் கனவு தகர்ந்ததை ஏற்க முடியாமல், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட பரபரப்பான மற்றும் சோகமான நிகழ்வுகள் தமிழகத்தை உலுக்கின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அநீதியைச் சரிசெய்ய தமிழக அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% கிடைமட்ட உள்ஒதுக்கீடு (Horizontal Reservation) சட்டத்தைக் கொண்டு வந்தது.

• இதன் பாசிட்டிவ் மாறுதல்: 

இந்தச் சட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 500 முதல் 600 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு (பெரும்பாலானோர் கிராமப்புற ஏழைகள்) முழு இலவச மருத்துவக் கல்வி கிடைக்கிறது என்பது மிக முக்கியமான சமூக நீதிப் புரட்சி என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால், இங்கேதான் நாம் மிக முக்கியமான இன்னொரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்:
நீட் தேர்வு முறை இல்லாத காலத்தில் கிராமப்புற மாணவர்களுக்குக் கிடைத்த 60% என்பது கிட்டத்தட்ட உண்மையான ஏழைகளுக்குக் கிடைத்த வாய்ப்பு என்று எடுத்துக்கொள்ள முடியும்.

ஆனால், நீட் தேர்வு முறை கொண்டுவந்ததற்குப் பிறகு, அதில் வெற்றிபெறுவதற்குக் கோச்சிங் முறைகள் பெருமளவு தேவைப்படுவதால், அதே கிராமத்தில் உள்ள பொருளாதார வசதி வாய்ப்புகள் உள்ள பிள்ளைகளுக்குத்தான் இப்போது இடம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனால் நீட் தேர்வு முறை இல்லாத காலத்தில் தேர்வு செய்யப்பட்ட உண்மையான ஏழைக் குழந்தைகள் போல் இல்லாமல், தற்போது பொதுப் போட்டியில் தேர்வு செய்யப்படும் குழந்தைகள் ஓரளவுக்கு அதே கிராமத்தில் உள்ள வசதி வாய்ப்புள்ள குழந்தைகள் என்பதை உணர முடியும்.

வாய்ப்புகள் சமமற்று இருக்கும்போது, இதை உண்மையான சமூக நீதி என்று நாம் எப்படி எடுத்துக்கொள்ள முடியும்?

எனவே, இந்த 7.5% உள்ஒதுக்கீடு என்பது நீட் தேர்வால் முற்றிலும் வாய்ப்பிழந்த எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் செய்யப்பட்ட ஒரு "முதலுதவி" (Safety Net) மட்டுமே. இது ஒட்டுமொத்தக் கிராமப்புற மாணவர்களின் இழப்பை ஈடு செய்யாது. 

ஏனெனில், இந்த உள்ஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகும் கூட, ஒட்டுமொத்தக் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை விகிதம் நீட் தேர்வுக்கு முன்பு இருந்த 61.45% என்ற பழைய நிலையை எட்டவே இல்லை; அது 65%-க்கும் போகவில்லை.

மீட்கப்பட வேண்டிய கிராமப்புற மாணவர்களின் உரிமை

நீட் தேர்வு முறை என்பது தனியார் கல்லூரிகளின் டொனேஷன் முறைகேடுகளைத் தடுத்து வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளது உண்மைதான் என்றாலும், அது தமிழகக் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை எட்டாக்கனியாக்கி விட்டது என்பதே மறுக்க முடியாத கசப்பான உண்மை.

7.5% உள்ஒதுக்கீடு ஒரு தற்காலிகப் பாதுகாப்பைத் தந்திருந்தாலும், வினாத்தாள் கசிவு போன்ற தேசிய முறைகேடுகள் மற்றும் அனிதா போன்ற மாணவிகளின் உயிரிழப்புகளுக்குக் காரணமான இந்த நீட் தேர்வு, லட்சக்கணக்கான கிராமப்புற மற்றும் (தாய்மொழி) தமிழ்வழி மாணவர்களின் ஒட்டுமொத்த மருத்துவச் சேர்க்கை உரிமையை இன்னும் பறித்துக் கொண்டுதான் இருக்கிறது. 

கல்வி மற்றும் சுகாதாரம் என்பது மாநில அரசுகளின் கொள்கை முடிவுக்கு உட்பட்டதாக மாறாத வரை, இந்தியாவைக் குணப்படுத்தும் "கிராமப்புற மருத்துவர்களின்" உருவாக்கம் எதிர்காலத்தில் கேள்விக்குறியாகவே நீடிக்கும்!

-Chitha Satguru Yozen Balki 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: