Translate this blog to any language

வெள்ளி, 18 செப்டம்பர், 2026

தந்தை பெரியார் பிறந்த நாளில்… என் புத்தகம் ஆசிரியரிடம் சேர்ந்த தருணம்


நேற்று  செப்டம்பர் 17 எனக்கு வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத நாள்.

தந்தை பெரியார் அவர்களின்‌ 148-வது பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி, நான் பெரியார் குறித்து எழுதியிருந்த என் புத்தகம் அச்சிடப்பட்டு, நேற்று மாலைதான் என் கைகளில் வந்து சேர்ந்தது.


அதே நாளில், பெரம்பூர் அகரம் பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில், வழக்கறிஞர் ஐயா துரைசாமி அவர்கள், வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள், வழக்கறிஞர் மதிவதனி அவர்கள், எனது நீண்டகால நண்பர் செம்பியம் இராமலிங்கம் உள்ளிட்ட பலரும் மேடையில் அமர்ந்திருந்தனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு எனது பழைய திராவிடர் கழக நண்பர்கள், திரு. சிட்டிபாபு, திரு. தங்கமணி, புரசைவாக்கம் ஓட்டேரி திராவிடர் கழக தலைவர், காலம் சென்ற திரு. வெங்கடேசன் அவர்களின் மகன் திரு. நல்லத்தம்பி போன்ற பலரை சந்தித்து உரையாடும் வாய்ப்பும் அன்று கிடைத்தது. அந்த சந்திப்பே எனக்கு ஒரு தனியான மகிழ்ச்சியைத் தந்தது. 

என்னுடைய பள்ளித் தோழரும், நீண்டகால குடும்ப நண்பரும் இன்று வரை பெரியார் கொள்கையில் உறுதியை கடைப்பிடிப்பவருமான திரு சண்முகம் அவர்களுக்கு அலைபேசி வழியாக அந்த நிகழ்ச்சியை சிறிது காண்பித்தேன். அவருக்கு கூட்டத்துக்கு வர முடியாத ஒரு சூழ்நிலை. அவருக்கு பெரிய மகிழ்ச்சி.


புத்தகம் கைக்கு வந்தது முதல், என் மனதில் அப்போது ஒரே ஒரு ஆசைதான் இருந்தது.

நான் எழுதிய பெரியார் பற்றிய இந்தப் புத்தகத்தை முதலில் ஆசிரியர் திரு.
கி. வீரமணி அவர்களிடமே முதலில் வழங்க வேண்டும் என்பதே அது.

இந்த ஆசையை என் நண்பர் செம்பியம் இராமலிங்கத்திடம் தெரிவித்தேன். அவர் தற்போது பெரியார் திடலில் பணியாற்றி வருகிறார். அவரும் அதைப் புரிந்துகொண்டு, மேடையில் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த தோழர் ஒருவரிடம் இதைப் பற்றிக் கூறினார்.

சற்று நேரம் மேடையிலும் அமர்ந்திருந்தேன்.

ஆசிரியர் அவர்கள் கூட்டத்துக்கு அவரது வேன் வந்து நுழைந்த நேரம் மிகப்பெரிய உற்சாக வரவேற்பு தரப்பட்டது. கிட்டத்தட்ட 93 வயதை தொடப்போகின்ற அந்த இளைஞருக்கு, அவரது மன உறுதிக்கு கூட்டத்தினர் யாவரும் தலை வணங்கி பணிவுடன் நின்றோம். தந்தை பெரியார் போன்றே மிக நீண்ட சமுதாயத் தொண்டுக்கான பயணம் அவருடையது ஆகும். 
 
ஆசிரியர் அவர்கள் கூட்டத்திற்கு வந்து சேர்ந்ததும், வழக்கறிஞர் அருள்மொழி அவர்களின் உரைக்குப் பிறகு, என்னையும் என் புத்தகத்தையும் அறிமுகப்படுத்தினார்.

அந்தக் கணம் எனக்கு மிகவும் நெகிழ்ச்சியானதாக இருந்தது.

நான் மிகுந்த மகிழ்ச்சியுடனும் மரியாதையுடனும் அந்தப் புத்தகத்தை ஆசிரியர் திருமிகு.  கி. வீரமணி அவர்களிடம் வழங்கினேன். அவரும் சிரித்த முகத்துடன் அதை பெற்றுக்கொண்டு என்னை வாழ்த்தினார்.

34 ஆண்டுகளாக உளவியல் துறையில் பணியாற்றி வரும் எனக்கு, பெரியார் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதி, பெரியார் பிறந்த நாளன்றே அதை ஆசிரியர் அவர்களிடம் நேரில் வழங்க முடிந்தது என்பது ஒரு தனியான பெரு மகிழ்ச்சி.

பின்னர் மேடையில் இருந்த பலருக்கும் என் புத்தகத்தை வழங்கினேன்.

அன்று இரவு நான் வீடு திரும்புவதற்குள், வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் என் புத்தகத்தைப் பார்த்துவிட்டு, அலைபேசியில் அழைத்து, அது மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி மகிழ்ந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தேன்.

ஒருவருடைய முயற்சியைப் பார்த்தவுடன், தயக்கமின்றி உடனடியாக பாராட்டுவது என்பது இன்றைய காலத்தில் எல்லோரிடமும் காணக்கூடிய ஒரு குணமன்று. அதனால், அந்தக் கனிவான பாராட்டு எனக்கு மேலும் மகிழ்ச்சியைத் தந்தது.

இன்று காலை மீண்டும் நண்பர் செம்பியம் இராமலிங்கம் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய நன்றியை மீண்டும் கூறினேன்.

இந்தப் புத்தகம் ஏன்?

தந்தை பெரியார் பற்றிய இந்தப் புத்தகத்தில், என் மனதில் நீண்ட காலமாகப் பதிந்திருந்த சில நெகிழ்ச்சியான எண்ணங்களை ஒன்பது அத்தியாயங்களில் பதிவு செய்திருக்கிறேன்.

இது பெரியாரின் முழுமையான வரலாற்றை எழுத முயன்ற நூல் அல்ல.

அவருடைய நீண்டகாலப் பொது வாழ்க்கையையும், சமூகப் பணிகளையும், வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்களையும் படித்தும் கேட்டும் அறிந்தபோது, நான் வியந்த தருணங்களையும், சில நேரங்களில் கண்களில் கண்ணீர் வரச் செய்த நிகழ்வுகளையும் அதிகமாகப் பதிவு செய்திருக்கிறேன்.

பெரியார் என்ற மாமனிதரைப் பற்றி நான் பதினைந்து வயதில் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து, அவரைப் பற்றிய என் வியப்பும் மரியாதையும் ஆண்டுகள் கடந்தும் குறையவில்லை.

அந்த உணர்விலிருந்து தான் இந்தச் சிறிய நூல் உருவானது.

இந்தப் புத்தகத்தை படித்துவிட்டு, ஒரு வாசகர்,

“பெரியார் யார் என்பதை இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அவருடைய சொந்த எழுத்துக்களையும் நூல்களையும் படிக்க வேண்டும்”

என்ற ஆசையைப் பெற்றால், அதுவே இந்தப் புத்தகம் நான் எழுதியதன் மிகப்பெரிய பயனாக இருக்கும்.

பெரியாரைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை மட்டும் சொல்லிவிடுவது என் நோக்கம் அல்ல.

பெரியாரைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஒருவருடைய மனதில் உருவாக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.

அந்தச் சிறிய ஆசையோடு இந்தப் புத்தகம் இப்போது என் கைகளிலிருந்து வாசகர்களை நோக்கிப் பயணிக்கிறது.

தந்தை பெரியார் பிறந்த நாளில்,
பெரியாரை பற்றிய என் புத்தகம் முதன் முதலாக, அவருடைய கொள்கைப் பயணத்தில் நீண்ட காலம் பயணித்து வரும் ஆசிரியர் அய்யா திரு. கி. வீரமணி அவர்களின் கைகளில் சேர்ந்தது மறக்க முடியாத நிகழ்வு ஆகும்.

அந்த நினைவு மட்டும்…

என் எழுத்துப் பயணத்தில் என்றும் அழியாத ஒரு பக்கமாக இருக்கும்.

வாழ்க பெரியார்!!🙏🙏

- Yozen Balki 💢 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: